இம்மையில் அன்பு மறுமையில் வாழ்வு! | ஆர்.கே. சாமி | VeritasTamil
4 நவம்பர் 2024 பொதுக்காலம் 31ஆம் வாரம் – திங்கள்
பிலி 2: 1-4
மத்தேயு 14: 12-14
இம்மையில் அன்பு மறுமையில் வாழ்வு!
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்கள் அடுத்திருபவரைப் பற்றி சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றன. பிலிப்பியில் உள்ள கிறிஸ்தவச் சமூகத்திற்கு எழுதும் இம்மடலில் புனித பவுல், அவர்கள் பலிப்பி சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர் என்பதால் அவர்கள் மற்றவர்களோடும், ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராகக் கூடி வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவர்கள் மத்தியில் கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தராமல், எப்போதும் மனத் தாழ்மையோடு மற்றவர்களை அவர்களிலும் உயர்ந்தவராகக் கருத வேண்டும் என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம், அவர்களுக்கு வேண்டியவர்களை மட்டும் அழைக்க வேண்டாம் என்கிறார். சகோதர சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ விருந்துக்கு அழைத்தால், அவர்களும் அழைத்தவரை திரும்ப அவர்களது இல்லத்திற்குக அழைக்கக்கூடும். அப்படி அழைப்பது கைமாறுக்காக அழைப்பதாகிவிடும் என்கிறார்.
எனவே, விருந்துக்கு அழைக்கும்போது யாரால் பதிலுக்கு விருந்தளிக்க இயலாதோ அத்தகையோரை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எடுத்துகாட்டாக, ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆகியோரை கூறுகிறார். அத்தகையோருக்கு விருந்து படைப்பதால், ஆண்டவரின ஆசீயைப் பெறுவோம் என்கிறார். உயிர்தெழும் வேளையில் ஏழைகள், உடல் ஊனமுற்றோர், கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஆகியோருக்கு அளித்த விருந்துக்கான கைமாறு கிடைக்கும் என்கிறார்.
சிந்தனைக்கு.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. ( குறள் 72)
மேற்கண்ட திருக்குறளுக்கு, ‘அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்’ என்கிறார் சாலமோன் பாப்பையா. தூய அன்பு தன்னலமற்றது, உண்மை அன்பு, வேண்டியவர் வேண்டாதவர் என்றெல்லாம் மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டாது. அது தன்னலத்தை நாடாது.
இப்படிப்பினையை இயேசு மற்றுமொரு எடுத்துக்காட்டின் வழி விவரிக்கிறார். நமக்கு வேண்டியவர்களோடு மட்டும் நல்லுறவில் வாழ நினைப்பதில் தவறில்லை. ஆனால், நமக்கு அடுத்திருக்கும் வசதிக்குறைந்தோர் மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறார். புனித பவுல் பிலிப்பியர் தங்களுக்குள் முடங்கிக்கிடக்காமல் அவர்களது கிறிஸ்தவ வாழ்வுக்கு வெளியே உள்ளவர்கள் பற்றியும் அக்கறைக்கொண்டு வாழ அழைத்ததை கேட்டோம்.
ஆண்டவர் இயேசு மீட்பின் நற்செய்தியை உலக மக்களுக்குக் கொணர்ந்தார். அச்செய்தியை நாம் முதலில் கிடைக்கப் பெற்றோம். அது நம்மோடு முடிவதல்ல. பிறருக்கும் கொண்டுச் செல்லப்பட வேண்டும். நமது காலத்தில் வாழ்ந்த பனித அன்னை திரேசா அவர் பெற்ற நற்செய்தியைச் செயலால் பிறருக்கு ஊட்டினார். அவர் அன்பு செலுத்திய எவரும் அவருக்கு வேண்டியவர்கள் அல்ல. அவர் பிறந்து வளர்ந்த நாடு வேறு, பணி செய்த நாடு வேறு. இன்று புனிதராக நம்மில் வாழ்கிறார்.
நம்மத்தியில், பெரும்பாலானோர், பரிதிபலன் எதிர்ப்பார்த்தே மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதைக் காண்கிறோம். இத்தகையோர், "மற்றவர்களுக்குச் செய்யுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்குச் செய்வார்கள்" என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர் ஆவார். கிறிஸ்தவம் என்பது அதுவல்ல.
நம் ஆன்மாவின் ஒவ்வொரு பாவமும், சிறிய பாவங்கள் உட்பட நமது விண்ணக வாழ்வுக்குத் தடையாக இருக்கும். எனவே, இவ்வுலக வாழ்வின் போதே, அவற்றிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவான் 13:34) என்ற ஆண்டவின் அன்பு கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நமது ஆன்மாவுக்கான நிலைவாழ்வு தடைபடாது.
அடுத்திருப்பவரை அன்பு செய்யாத எவரும், மறுமையில் விண்ணக வாழ்வை அடைய நினைப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும். எனவே, ‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்’ எனும் இயேசுவின் அமுத வாக்கை ஏற்று வாழ்வோருக்கு அவர் விண்ணக வாசலின் கதவைத் திறப்பார்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது பணிவான சேவையில் பங்கு கொள்ள எனக்கு உதவுவீராக. அதனால் நானும் ஒரு நாள் விண்ணரசின் மாட்சியில் பங்கு பெறுவேன். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452