வானகத் தந்தை நாடாத நாற்றுகளே களைகள்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

30 ஜூலை 2024 
பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய்

எரேமியா 14: 17-22
மத்தேயு  13: 36-43

 
வானகத் தந்தை நாடாத நாற்றுகளே களைகள்!


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில் எரேமியா யூதேயாவின் நிலைக் கண்டு புலம்புவதைக் காண்கிறோம்.   இக்காலக்கட்டத்தில், எரேமியாவும் யூதா மக்களும் அவர்களின் கீழ்ப்படியாமையால் பெருந்துன்பத்தை  அனுபவிக்கின்றனர்.  கடவுளுக்கு எதிரான அவர்களின் தீயச் செயல்களே இத்துன்பத்திற்குக் காரணம் என அவர் உணர்ந்து வேண்டுகிறார்.   மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர், பட்டினியால் வாடுகிறார்கள், எங்கும் உணவு பஞ்சம். இறைவாக்கினருக்கும்  குருக்களும் அதே நிலை.  

ஆகவே,  எரேமியா கடவுளை ஏரெடுத்துப் பார்த்து  ‘நாங்கள் துன்புறும் படி ஏன் எங்களை நொறுக்கினீர்?  என்று மக்கள் சார்பாக முறையிடுகின்றார். வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளின் இயலாமையையும் முன்வைத்து மன்றாடுகிறார். 

முற்காலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மக்களோடு செய்யப்பட்ட உடன்படிக்கையின் வாக்குறுதிகளை நினைவுகூரும்படி கடவுளிடம் இறைஞ்சுகிறார்.  இதில்,   எரேமியாவின் சிறப்பு யாதெனில், யாவே கடவுளுக்கு எதிராக மக்களின் பாவத்தை ஒப்புக்கொண்டு, அவர்களின் பாவங்களுக்கு மன்னிப்பையும்  வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர மழையையும்  கேட்பதோடு, கடவுள் அவர்களோடு  செய்த உடன்படிக்கையை நினைவுகூரவும்,  அதனை முறித்துவிட வேண்டாம் என்றும் மன்றாடுகிறார். 


நற்செய்தி.


நற்செய்தியில் இன்று கடந்த சனிக்கிழமை வாசித்த “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமைக்கான விளக்கத்தை இயேசு தம் சீடர்களுக்குப் பகிர்கிறார்.  இயேசு, வீட்டுக்குள் வந்தபோது  அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்று கேட்கவே, அவர் அதற்கான விளக்கைத் தெளிவுப்படுத்துகின்றார். முதலில் இந்த உவமையில் காணப்படும் ஒவ்வொன்றுக்கும் பொருள் கூறுகிறார்.

1.“நல்ல விதைகளை விதைப்பவர்:  மானிட மகன் (இயேசு)
2.வயல்: இவ்வுலகம்
3.நல்ல விதைகள்: இறையரசுக்கான மக்கள்
4.களைகள்: தீயோனை (அலகையை) சேர்ந்தவர்கள்.
5.அறுவடை: உலகின் முடிவு
6.அறுவடை செய்வோர்: வானதூதர்.

மேற்கண்டவாறு இயேசு தம் உவமையில் பயன்படுத்திய ஒவ்வொன்றுக்கும் விளக்கத்தை அளித்தார்.

செய்தி: 

இந்த உவமையானது,  கடைசி காலத்தில் என்ன நடக்கும் என்பதை சித்தரிக்கிறது.  மானிட மகனான இயேசு மாட்சியுடன் தோன்றுவார். அப்போது அவர் தம்  வானதூதரை அனுப்புவார், வானத்தூதரோ அனைவரையும் இரு பிரிவுகளாகப் பிரிப்பர்.

முதல் பிரிவில், இறையாட்சிக்குத்  தடையாக இருந்த அனைவரும், நெறி கெட்டோரும், ஒன்று சேர்க்கப்படுவர்.  பின் அவர்கள் நரகத்தில் அடைக்கப்படுவர். அங்கே முடிவில்லா பெருந்துன்பதில் ஆழ்ந்திருப்பவர். 

இரண்டாம் பரிவில்,  சேர்க்கப்படுபவர்களோ நேர்மையாளர்கள். கடவுளின் இரக்கத்தைப் பெற்றவர்கள். இவர்கள் தந்தையாம் கடவுளின்  முன்னிலையில், நிலைவாழ்வைப் பெற்றவர்களாக கதிரவனைப் போல் மிளிர்வர்.  

சிந்தனைக்கு.


இயேசுவின் சீடர்களாகிய நாம்  கோதுமை மணிகளா?  அல்லது களைகளா?  என்று சிந்திக்க   வைப்பதே உவமையின் நோக்கமாக உள்ளது.  ஆம், இந்த உவமையை நாம் 2000 ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட ஓர் உவமையாகக் கருதவே முடியாது.  இன்று நாம் எரேமியா காலத்து யூதர்களைப் போல் பெரும் பாவிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் நம் வாழ்விலும் பல்வேறு களைகள் இருந்து நம்மை நாசப்படுத்திக்கொண்டு இருப்பதை மறுக்க இயலாது.

நாம் திருஅவையில் இருப்பதால் (கிறிஸ்தவர்களாக இருப்பதால்)  தூயவர்களாக நம்மை நாம் நினைத்துக்கொண்டிருக்கலாம். திருவையிலும் பாவம் உள்ளது என்பதை மனதார ஏற்க வேண்டும். திருஅவை இயேசுவின் மறையுடல் என்பதால் அது என்றென்றும் தூய்மையானது. ஆனால், நாம்தான் திருஅவை என்பதால், நமது பாவங்களால்   திருஅவையும் கலங்கப்பட்டிருக்கிறது. எனவே, நம்மில் மனமாற்றம் ஏற்படாவிடில், யூதர்களைப் போல் தண்டிக்கப்படுவோம். இறுதி நாளில் வானத்தூதர் நம்மை விட்டுவைக்கமாட்டார்கள். 

ஆகவே, மீதமுள்ள நமது காலத்தில் நரகத்தைப் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் நம் கடவுள் இரக்கமும் பரிவும் கொண்டவர். நமது மனமாற்றத்தைக் கண்டு,  பரிந்திரைக்க புனிதர்கள் இருக்கிறாரகள். இன்றைய பதிலுரைப் பாடலில் உள்ளவாறு ‘ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்’ என்று மன்றாடினோமானால் நிலைவாழ்வு நமதாகலாம், குற்றங்களையும் துன்பங்களையும் நன்மனதுடன் ஏற்றுக்கொள்வதோடு, இறுதி நாளில் தீர்ப்பிட வரவிருக்கும் ஆண்டவரில் நம்பிக்கை வைத்தாலே நமக்கு விடுதலை கிட்டும்  என்பதை ஏற்று வாழ்வோம். கடவுளின் மாட்சியில் நாம் அனுதினமும் கண்ணும் கருத்துமாக இருக்க முயல்வோம். களைகளை அகற்றும்  ஞானத்திற்கு வேண்டுவோம். 


இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே, இறுதி நாளில் உமது வானத்தூதர் என்னை அணுகும்போது, உம்மைச் சார்ந்தக் கூட்டத்தில் நான்  சேர்க்கப்பட என்னைக் காத்தருளும். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452