உயர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை நம்மை உயிர்ப்பிக்கும்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
29 ஜூலை 2024
பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள்
எரேமியா 13: 1-11
யோவான் 11: 19-27 அல்லது லூக்கா 10: 38-42
உயர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை நம்மை உயிர்ப்பிக்கும்!
முதல் வாசகம்.
எரேமியா இறைவாக்கு நூலில் இருந்து வாசகம் தொடர்கிறது. இன்று, கடவுள் இவர் வழி யூதர்களுக்கு கூறிய செய்தி வெளிப்படுகிறது. எரேமியா கடவுளின் கட்டளையைப் பின்பற்றி, அவர் ஒரு புதிய இடுப்புத் துணியை, அதாவது உள்ளாடையை வாங்குகிறார்.
அவர் அதை சிறிது நேரம் அணிந்துகொண்டார். பின்னர், அவர் அதைக் துவைக்காமல், கடவுளின் கட்டளையின்படி, மெசபதோமியாவில் உள்ள பேராத்து (யூப்ரடீஸ்) நதியின் சில பாறைகளுக்கு இடையில் மறைத்து வைக்கிறார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, கடவுள் எரேமியாவிடம் மறைத்து வைத்த துணியை எடுக்கச் சொல்கிறார். அது நஞ்சி போய் கந்தலாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கடவுளுக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதைக் காட்ட எரேமியா இந்த உருவகத்தைப் பயன்படுத்தினார்.
இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல யூதர்கள் கடவுளோடு உறவிலும் ஒன்றித்திருக்கச் செய்தார். அவர்களைத் தம் மக்களாகவும், புகழாகவும், மாட்சியாகவும் விளங்கச் ச்யுதார். அவர்களோ கடவுளுக்குச் செவிசாய்க்கவில்லை என்ற கடவுளின் செய்தியை வெளியிடுகிறார் எரேமியா.
நற்செய்தி.
இன்று புனிதர்கள் மார்த்தா, மரியா மற்றும் அவரது சகோதர் இலாசர் ஆகியோரின் விழா என்பதால், நற்செய்திக்காக இன்று இரு வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புனித மார்த்தாவின் நினைவு நாளாக இருந்த இத்தினத்தை, 2021 ஆம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று உடன்பிறப்புகளான மார்த்தா, மரியா மற்றும் இலாசர் ஆகியோரின் நினைவாக மாற்றினார்.
இயேசு மார்த்தா, மரியா மற்றும் இலாசர் வாழ்ந்த ஊரான பெத்தானியவுக்கு வந்தபோது இலாசர் இறந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்று நம்பிக்கையோடு கூறியபோது, மறுமொழியாக, இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும் என் மார்த்தா பதில் அளித்தார். ஆனால், இயேசுவோ இறுதி நாளிளலெ நிகழவுள்ளதைப் பற்றி பேசாமல், இறந்த தம் நண்பனின் வாழ்வு அழிந்துவிடவில்லை, அது தொடரும் என்னும் உறுதியான நம்பிக்கையில் “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
மார்த்தாவோ இயேசுவின் கேள்விக்குப் பதிலாக, “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய யோவான் நற்செய்தியில், ‘தம்மை நம்புவோர் இறப்பினும் வாழ்வர்’ என்ற தம் கூற்றுக்குச் செயல் வடிவம் கொடுக்கிறார் இயேசு. அதே வேளையில் மார்த்தாவின் பதிலையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மார்த்தாவின் பதிலிலிருந்தது, அவர் எந்தளவுக்கு கடவுள்மீது நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. நம்பிக்கையை அறிக்கையிடுவதில் நமக்கு நல்ல முன்மாதிரியாக உள்ளார். ‘என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்’ என்று இயேசு கூறியது இலாசருக்கு மட்டும் உரியதல்ல மாறாக, மார்த்தாவுக்கும் நமக்கும் உரியதாக நம் பார்க்க வேண்டும்.
இந்த உடன்பிறப்புகளைப் பற்றி சிந்திக்க அழைக்கப்பட்டுள்ள நாம், இரு விஷடயங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். இயேசுவோடு இணைந்திருந்ததினால், அவர்கள் இப்போது விண்ணகத்தில் புனிதர்களாக நிலைவாழ்வையும், பேரின்பத்தையும், மாட்சியையும் அனுபவிக்கிறார்கள்.
இரண்டாவதாக, அவர்கள் மத்தியிலும் குறைபாடுகளும் குறைகூறல்களும் இருந்தபோது இயேசு அவர்களிடத்தில் அன்புகொண்டிருந்தார். அவர்களும் இயேசுவை வரவேற்றார்கள். ஆனாலும் அவர்கள் மத்தியில் குறைபாடுகள் இருந்தன. மார்த்தா தன்னுடைய இல்லத்திற்கு வந்த இயேசுவுக்கு சிறப்பாக விருந்து உபசரிக்க வேண்டும் என்பதற்காக பரபரப்பாக அலைகின்றார். அதனால் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வாழ்வுதரும் வார்த்தைகளைக் கேட்க மறந்துவிடுகின்றார். மரியா மார்த்தாவைப் பற்றி கவலைப்படவில்லை.
இந்த மூன்று உடன்பிறப்புகளின் குறைபாடுகள் போல, நம் வாழ்விலும் குறைகள் இருக்கும்போது, அவற்றால் நாம் இயேசுவிடமிருந்து பின்வாங்காமல் நம்முடைய நம்பிக்கை நடைமுறையில் தொடர்ந்து முன்னேற நம்மை நாமே ஊக்குவிக்க வேண்டும்.
நிறைவாக, “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” என்று இயேசு கூறியபோது, மார்த்தா, “நீரே மெசியா! நீரே இறைமகன்!, நீரே உலகிற்கு வரவிருந்தவர்” என்று இயேசு மீது கொண்டிருந்த தன்னுடைய நம்பிக்கையை அறிக்கையிட்டார் மார்த்தா. மத்தேயு 16-ம் அதிகாரத்தில் பேதுருவும் இதே பொன்று இயேசு மெசியாவென்று கூறுவார். இயேசு மெசியா என்று அறிக்கையிடுவதில் நாம் எந்தளவுக்குத் துணிந்துள்ளோம் என்பதே நம்மில் எழ வேண்டிய கேள்வி.
‘இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.’ (1 யோவான் 5:1) என்று யோவான் கூறியதை மனதில் கொள்வோம், நாம் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். ஆகவே, இயேசுவே மெசியா என்று உலகெங்கும் அறிக்கையிட கடமைப்பட்டவர்கள்.
மர்த்தா, மரியா மற்றும் இலாசர் போன்று மக்கள் தம்முடன் உறவில் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், மேலும் கடவுள் அவர்களுடன் இருக்கிறார் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் எதிர்ப்பார்க்கிறார். கடவுளின் இந்த எதிர்ப்பார்ப்பை உணர்ந்த மக்களாக வாழ் முற்படுவோம்.
இறைவேண்டல்.
‘உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே’ என்ற ஆண்டவரே, எமது இன்ப துன்ப வேளைகளில் என்னோடு இருப்பேன் என்று வாக்களித்தவரே, என்றும் என்னைக் கைவிடாது காத்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452