ஆயனின் குரல் கேட்போர் ஆயிரமடங்கு பலன் தருவர்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
26 ஜூலை 2024
பொதுக்காலம் 16 ஆம் வாரம் - வெள்ளி
எரேமியா 3: 14-17
மத்தேயு 13: 18-23
ஆயனின் குரல் கேட்போர் ஆயிரமடங்கு பலன் தருவர்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், கடவுளுடன் உறவு கொள்ளும் மக்களின் பழைய வழி மாற்றப்படும் காலத்தைப் பற்றி எரேமியா பேசுகிறார். கோவில் வழிபாடு மற்றும் உடன்படிக்கைப் பேழையில் கடவுளின் உடனிருப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான உறவுக்குப் பதிலாக, ஒரு புதிய உறவு இருக்கும் என்றும், அந்த புதிய உறவு முறையானது ‘ஆயன்-மந்தை’ என்று கடவுள் மந்தையை மேய்க்கும் ஆயனைப்போலவும், மக்கள் அவருடைய மந்தையைப் போலவும் இருப்பர் என்கிறார் எரேமியா.
மேலும், செம்மறியாடு மேய்ப்பனின் குரலுக்கு செவிசாய்ப்பது போல, மக்கள் மிகவும் நெருக்கமான முறையில் கடவுளுடன் உறவுகொள்வார்கள் என்று நம்புவதாகவும் கூறுகிறார்.
அக்காலத்தில் எருசலேமை ‘ஆண்டவரின் அரியணை’ என அழைப்பார்கள என்றும். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர் என்றும் முன்னுரைக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் கடந்த புதன் அன்று கேட்ட விதை விதைப்பவர் உவமையைக் குறித்து விளக்கம் கேட்ட தம் சீடர்களுக்கு மேலும் விவரித்து ஒவ்வொருன்றுக்கும் பொருள் கூறுகிறார் இயேசு.
பாதையில் விழும் விதை கடவுளின் செய்தியைக் கேட்கும் ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத மக்களைக் குறிக்கிறது. அவர்களின் இதயங்களில் விதைக்கப்பட்டதை அலகை அபகரித்துக்கொள்கிறது.
பாறை நிலத்தில் விழும் விதை, செய்தியைக் கேட்டு முதலில் மகிழ்ச்சியாக இருக்கும் மக்களைக் குறிக்கிறது, ஆனால் வேர்கள் இல்லாததால் அவர்களின் நம்பிக்கை நிலைக்காது. அவர்கள் பிரச்சனை அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்ளும் போது, விரைவில் மறைந்துவிடுகிறது. .
முட்களுக்கு இடையில் விழும் விதை, செய்தியைக் கேட்கும் மக்களைக் குறிக்கிறது, ஆனால் வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் மற்றும் செல்வத்தின் மீதான ஆசை அவர்களின் நம்பிக்கை வளரச்சியை முடக்கிவிடும். அதனால் அது நல்லது எதையும் விளைவிக்காது.
மாறாக, நல்ல மண்ணில் விழும் விதை, செய்தியைக் கேட்டு புரிந்து கொள்ளும் மக்களைக் குறிக்கிறது. ஒரு பெரிய விளைச்சலைக் கொடுக்கும் ஒரு செடியைப் போல அவை நிறைய, நல்ல பலன்களைக் கொடுக்கும் என்கிறார்.
சிந்தனைக்கு.
இயேசு கடலோரம் மக்களுக்குச் சொன்ன உவமையின் அர்த்தத்தை தம் சீடர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். பாதையிலும், பாறையின் மீதும், முட்செடிகளுக்கு நடுவிலும் விழுந்த விதைகளை உதாரணாமாகக் காட்டி, இயேசு நமக்குச் எடுத்துரைக்கும் செய்தி யாதெனில், நம் வாழ்வில் கடவுளுடைய வார்த்தையைத் தடுக்கும் பல சோதனைகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதாகும்.
முதலாவதாக, நம்மில் பெரும்பாலானோர் கடவுளுடைய வார்த்தையைக் கேட்க பலவழிகளில் வாய்ப்பு வழங்கப்பட்ட மக்களாக உள்ளோம். பங்குகளில் மறைக்கல்வி வகுப்புகளுக்குச் சென்றவர்கள், பெற்றோர் மற்றும் பிறரால் மறைக்கல்வி கற்பிக்கப்பட்டவர்கள், திருப்பலிக்குச் செல்பவர்கள் என பல வகையில் இறைவார்த்தையைச் செவிமடுப்பவர்களாக உள்ளோம், ஆனால் நம்மில் பலர், கேட்ட இறைவார்த்தையைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அன்னை
மரியாவைப்போல், உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கத் தவறுகிறோம்.
கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பது, நமது அலட்சியப் போக்காகும். அட்சியத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது அலகை. இந்த அலகைதான் நம்மைத் திசைத்திருப்ப பலவேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. எடுத்துக்கட்டாக, நம்மை புண்படுத்திய ஒருவரை மன்னிக்க முயற்சிப்போம், ஆனால், நமது தற்பெருமை, கோபம் நம்மைத் தடுக்கும். இவ்வாறு, கேட்ட இறைவார்த்தை பலன் தராமலேயே நம்மில் புதைந்துவிடும்.
ஆகவே, சோதனைகளை வெல்லும் ஆற்றலை நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். அலகையை நாம் கட்டிப்போட வேண்டும். இல்லையேல் இறைவார்த்தை நம்மில் பலனளிக்காது. நாமும் பலன் தர மாட்டோம்.
முதல் வாசகத்தில், எரேமியா கூறுவதைப்போல, செம்மறியாடு ஆயனின் குரலுக்குச் செவிசாய்ப்பது போல, நாம் மிகவும் நெருக்கமான முறையில் கடவுளுடன் உறவுகொள்ள வேண்டும். அதற்கு அவரது வார்த்தையில் வேரூன்றி இருப்பதோடு, அவ்வார்த்தை நம்மில் செயலாற்ற அலகையோடு தொடர்ந்து போராட வேண்டும். ஏனெனில், “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ (மத் 4:4) என்று நமக்கு கூறப்பட்டுள்ளது.
இறைவேண்டல்.
வாக்காக இருந்தரே, மனுவுருவாகி எம்மில் குடிகொண்டவரே, உமது வார்த்தை எம்மில் வேரூன்றி பலன் தர தடையாக இருக்கும் எமது அலட்சியத்தைக் களையவும், உமது வார்த்தை எம்மில் பன்மடங்குப் பலன் தரவும் அருள்பொழிந்து காத்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink