நாம் கடவுள் வனைந்த மட்பாண்டங்கள்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

25 ஜூலை 2024 
பொதுக்காலம் 16 ஆம் வாரம் - வியாழன்
புனித யாக்கோபு - திருத்தூதர்-விழா

2 கொரி 4: 7-15
மத்தேயு  20: 20-28

நாம் கடவுள் வனைந்த  மட்பாண்டங்கள்!

இன்று, திருஅவை திருத்தூதரான புனித (பெரிய) யாக்கோப்பின்  விழாவைக் கொண்டாடுகிறது.  ஆங்கிலத்தில் 'ஜேம்ஸ்',  என அழைக்கப்படுகிறார். இயேசு தேர்ந்துகொண்ட  பன்னிரண்டு சீடர்களில் யாக்கோபு என்ற பெயரில் இருவர் இருந்தனர், ஒருவர்  செபதேயுவின் மகனும் யோவானின் சகோதரரும் ஆவார். மற்றொருவர்  அல்ஃபேயுவின் மகன் யாக்கோபு (மத் 10:2). இன்று செபதேயுவின் மகனான பெரிய யாக்கோபின் விழாவைக் கொண்டாடுகிறோம்
இந்த பெரிய யாக்கோப்பின் பெயர் லத்தீன் மொழியில்  'சான்க்து இயாக்கோபு' - இதுவே தமிழில் ‘சந்தியாகு’  என முற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 

முதல் வாசகம். 

இயேசுவைப் பின்பற்றுபவர்கள் (சீடர்கள்)  விலைமதிப்புள்ள  உலோகத்தினாலோ அல்லது ரத்தினங்களினாலோ செய்யப்பட்ட பாத்திரங்கள் அல்ல, மாறாக  களிமண்  பானைகள் என்று பவுல் அடிகள் குறிப்பிடுகிறார்.  ஆயினும்கூட, மிகவும் விலையுயர்ந்த பாத்திரக்திற்குரிய மதிப்பு அவர்களுக்கு உள்ளது என்றும், அவர்கள் ஆண்டவராகிய  இயேசுவின் பாத்திரங்கள் என்றும் விவரிக்கிறார்.

உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்களை விட மண் பாத்திரங்கள் உடையக்கூடியவை. கடவுளோ, சாதாரணமான, எளிதில் உடையக்கூடிய  பொருட்களையே (மக்களை) தம் சீடர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்.


நற்செய்தி.


மத்தேயுவின் இன்றைய நற்செய்தியில், யாக்கோபு மற்றும் யோவானின் தாய் இயேசுவிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.  மாற்கு நற்செய்தியில், யாக்கோபு மற்றும்  யோவான் இருவரும் இந்தக் கோரிக்கையை நேரடியாக இயேவிடம்  முன்வைக்கிறார்கள், அவர்களுடைய தாய் அல்ல.  அவருடைய இரண்டு மகன்களும் இயேசுவின்    அரியணையின் வலப்புறம் ஒருவனும்    இடப்புறம் மற்றவனும்  அமரச் செய்ய வேண்டும்   என்று அவள் இயேசுவிடம் விண்ணப்பிக்கிறார். 
இயேசு  யாக்கோபு  மற்றும் யோவானிடம், அவர் குடிக்கும் "கிண்ணத்தை குடிக்க"  தயாராக இருக்கிறார்களா என்று இயேசு கேட்கிறார். ஆம், இயேசுவின் பாடுகள் - மரணம் இவற்றில் பங்குபெற உறுதியாக உள்ளனரா என்ற கேள்வியை அவர்கள் தாயின் முன் வைக்கிறார்.

இருப்பினும் யாருக்கு எந்த இடம் என்பது, தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்கிறார்,

செபுதேயுவின் மகன்கள் சிறப்பு இடத்தைக் கேட்டதை அறிந்த இதர பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர் மீதும் கோபங்கொண்டனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார். இயேசு அவர்களை முன் அழைத்து,  “பிற இனத்தவரைப்போல இருக்கக்கூடாது. அவர்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் அவர்களிடையே  தொண்டராய் இருக்க வேண்டும் என்றும், அவர்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அவர்களிடையே பணியாளராக இருக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்துகிறார். 


சிந்தனைக்கு. 

இயேசு பன்னிரண்டு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தார்.   ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரில் மூன்று பேர் மட்டுமே அவருக்கு மிகவும் நெருக்கமாக  இருந்தார்கள். அவர்கள்:  பேதுரு, (பெரிய) யாக்கோபு  மற்றும் யோவான் ஆவர். இந்த மூவரும் தான் இயேசு உருமாற்றம் பெற்றபோது அவரோடு உடனிருந்தனர்  என்பது குறப்பிடத்தக்கது. இந்த மூவரையும் அடுத்து,  இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போதும் இவர்கள் அருகில் இருந்தார்கள்.  அடுத்து,  இந்த மூவர்தாம் இயேசுவோடு  கெத்சமேனித் தோட்டத்தில் இருந்தனர் என்று அறிகிறோம்.  
தொடர்ந்து, திருத்தூதர் பணிகள் நூல் எழுதிய லூக்காவின் செய்தியின்படி,  இவரே எருசலேம் திருஅவையின் ஆயராக இருந்திருக்கறார். எருசலேம் சங்கமும் (கி.பி. 49-ல், இவரது தலைமையில்தான் நடைபெற்றது என்பது வரலாறு.  புதிய ஏற்பாட்டு நூல் வரிசைகிளல் இவரது திருமுகமும் அடங்கும். 
முதல் வாசகத்தில் இரு வகைப் பாத்திரங்களைக் கொண்டு பவுல் அடிகள் சீடர்களின் தன்மையை  விரிக்கிறார். பவுல் அடிகளின் காலத்தில் வழிபாட்டுக்கும் செல்வர்களின் பயன்பாட்டுக்கும் வெள்ளி, தங்கம் போன்ற உலோகப் பாத்திங்கள் பயன்படுத்தப்பட்டன.  ஆனால், அடிமைகள் மற்றும் சமூகத்தில் அடிமட்ட மக்கள் பெரும்பாலும் களிமண் பாத்தரங்களையே பயன்படுத்தினர். ஒவ்வொரு சீடரும்  இயேசுவால் அழைக்கப்படுவதற்கு முன்பாக களிமண்ணால் ஆன மண்பண்டங்களாகவே இருந்தனர். அழைப்பை ஏற்ற பின்னரோ விலையுயர்ந்த பண்டங்களாக உருமாற்றம் கண்டனர்.  
குயவன் தன் கையில் உள்ள களிமண்  வறண்டதும் மண் கட்டிகள் உள்ளதாகவும் இருப்பதால், அவற்றை   முதலில் அகற்றி, சுத்தம் செய்த  பின்னரே அதனை தன் விருப்பம்போல் வனைகிறான். நம்முடைய குறைகளை ஒப்புக்கொண்டு, “என் வாழ்க்கையை நீர் வடிவமைக்க வேண்டும்” என்று நாம் ஆண்டவரிடத்தில் சரண்டையும்போது, நாமும் ஆண்டவரின் கர்ங்களில் உள்ள களிமண்ணாக இருப்போம். அவர் நம்மை தரமான மட்பாண்டங்களாக வனைவார். 
அவ்வாறே, திருமுழுக்கினால், நாம் கடவுளின் பிள்ளைகளாக வனையப்பட்டோம். கடவுளின் பிள்ளைகள்  ஆனோம். நமது நிலை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. ஆனாலும், நமது நடத்தையிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் மண்பாண்டங்கள் என்பதால்  எளிதில் உடையக்கூடியவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு, நன்னடத்தையைப் பேணிக்காக்க வேண்டும். 
அடுத்து, இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், இயேசுவின் சீடர்களின் உலகப்போக்கிலான மனநிலையை காண்கிறோம்.  அவர்கள் மத்தியில் கருத்து வேறுப்பாடும் பதவி போராட்டும் துளிர்விடுகிறது. இயேசு அவர்களை அழைத்து, புதியதொரு சிந்தனையை ஊட்டுகிறார்.  ஆம், கிறிஸ்தவத்  தலைவர்கள் மத்தியில் பதவி மோகமும் ஆசையும் இருக்கக் கூடாது. தலைவர்களும் அனைவருக்கும் பணியாளர்களே என்கிறார். அதிகாரத்தையும், பதவியையும் தேடி ஓடுவது,  உலகத் தலைவர்களின் பண்பாடு. இயேசுவின் சீடர்களோ தொண்டாற்ற முன்வர வேண்டும். அப்போது உலகப் பதவிகள் தரும் அற்ப மகிழ்ச்சியைவிட மிக மேலான இறை அமைதியையும், ஆசியையும் ஆண்டவர் தருவார் என்று முடிக்கிறார் ஆண்டவர். 

இறைவேண்டல். 

ஞானத்தின் ஊற்றாகிய ஆண்டவரே, உமது தலைமைத்துவத்தின் அடிச்சுவடுகளை ஏற்று பணி செய்யும் பணியாளனாக நான் உருமாற என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.  .


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452