இயேசுவின் இறையாட்சி உறவே,நம் சகோதர உறவு! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
23 ஜூலை 2024
பொதுக்காலம் 16 ஆம் வாரம் -செவ்வாய்
மீக்கா 7: 14-15, 18-20
மத்தேயு 12: 46-50
இயேசுவின் இறையாட்சி உறவே, நம் நம் சகோதர உறவு!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில், மீக்கா இறைவாக்கினர் வாயிலாக, கடவுளின் பார்வையில் நாம் சிறப்பானவர்கள் என்பதை அறிய வருகிறோம். கடவுளின் வழிகளைப் பின்பற்ற அழைக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு கடவுள் எப்போதும் உண்மையுள்ளவர் என்று மீக்கா அறிவுறுத்துகிறார்.
கடவுளுடன் ஓர் உடன்படிக்கை மக்களாக அழைக்கப்பட்ட இஸ்ரயேலரை மன்னித்து, அவர்களை மீண்டும் பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்று மீக்கா கடவுளிடம் மன்றாடுகிறார். மக்கள் தொலைந்து போன ஆடுகளைப் போல வழிதவறிவிட்டனர் என்றும், தம் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்தையின் தவறான வழிகளை மன்னித்து நல்வழி நடக்க அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை என்றும், ஆபிரகாமுடனும் அவருடைய சந்ததியினருடனும் கடவுள் ஏற்படுத்திய உறவையும் நினைவுகூரும்படி மீக்கா கடவுளிடம் இறைஞ்சுகிறார்.
மக்கள் தங்கள் தீயச் செயல்களுக்குப் மனம் வருந்தி, மன்னிப்புக் கோரினால், அவர்களை உடன்படிக்கை உறவுக்கு மீட்டெடுக்க கடவுள் தயாராக இருக்கிறார் என்பது மீக்காவின் செய்தியாகத் தரப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை உறவை இயேசுவின் காலத்தில் இறையாட்சி உறவு என்று பொருள் கொள்ளலாம்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், கலிலேயாவில் ஓர் இடத்தில் இயேசு போதித்துக்கொண்டிருக்கும் போது, அறைக்கு வெளியே அவரது தாயும் சகோதரர்களும் அவரைச் சந்திக்கக் காத்திருக்கிறார்கள். இது குறித்தச் செய்தி இயேசுவிடம் தெரிவிக்கப்பட்ட போது, என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்ற கேள்வியை அனைவர் முன்னிலும் எழுப்புகிறார்.
மேலும், தனது வானகத் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவர்களே அவரது சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவர் என்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில், இயேசு தம் தாயையும் சகோதரர்களையும் குறித்து, என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டது, சிலருக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது. இதை வைத்தே அன்னை மரியாவுக்கு இயேவைத் தவிர்த்து வேறு பிள்ளைகள் இருந்தார்கள் என்று உளறித் திரிகிறார்கள். இவர்களது புரிதல் வேறு, நமது புரிதல் வேறு.
சொல்லின் பொருள்.
முதலாவதாக, பண்டைய எபிரேய மொழியிலும், அராமிக் மற்றும் பிற மொழிகளிலும் உள்ள "சகோதரர்கள்" என்ற வார்த்தையானது உடன்பிறப்புகளைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. அக்காலத்தில், ஏன் இன்று தம் மத்தியிலும் சிற்றப்பா, பெரியப்பாவின் பிள்ளைகளைச் சகோதர சகோதரிகள் என்றே அழைப்பதுண்டு. எனவே, இயேசுவின் தாயும் வேறு சில சகோதர முறைகொண்ட (ஆண்) உறவினர்களும் அவரைப் பார்க்க வந்தவர்கள் என்பது தெளிவாகிறது.
கிழ்க்கண்ட விவிலியக் குறிப்புகளும் ஆதாரமாக உள்ளன.
1.கானா தருமணத்திற்கு இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர் (யோவான் 2:1-2). இதன்படி தாயோடு இயேசு ஒருவரே மகனாக அங்கு இருந்தார்.
2.இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றும், பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றும் கூறி தாயை ஒப்படைத்தார். (யோவான் 19:26-27). வேறு உடன்பிறந்தோர் இருந்திருந்தால் தன் தாயை சீடரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
3.சகோதரர் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தல் adelphoi என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது உடன்பிறந்தோரை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. ஆங்கிலத்தில் காணப்படும் cousin என்று சொல் கிரேக்கத்தில் இல்லை. எனவே, கிரேக்கத்தில் ‘சகோதரர்' என்பது சிற்றப்பா, பெரியப்பாவின் பிள்ளைகளையும் குறிப்பதாகும்.
கத்தோலிக்கத்த திருஅவையின் படிப்பினையின் படி மரியா என்றென்றும் கன்னி ஆவார். இதுவே நமது நம்பிக்கை, இது தூய ஆவியாரின் வெளிப்பாடு என்றால் மிகையாகாது.
தந்தையின் திருவுளம்.
வானகத் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவர்களே அவரது சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் என்று இயேசு கூறியதன் வழி, கடவுளுடைய குடும்பத்தைப் பற்றி மக்களுக்கு தொடர்ந்து கற்பிக்க இயேசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். வானகத் தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் நாம் அவருடைய குடும்பத்தில் (திருஅவையில்) உறுப்பினராகிறோம் என்பதை அவர் தெளிவாகக் கூறுகிறார்.
இவ்வாறு, குடும்பம் பற்றிய இயேசுவின் வரையறை இரத்த உறவுகளை விட அதிகமாக, தந்தையின் திருவுளப்படி தங்களை அர்ப்பணித்து வாழ்வோரை குறிப்பதாக உள்ளது. எனவேதான், ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்று அழைக்கப் பணித்தார்.
ஆகவே, கடவுள் நம்மை அவரது குடும்பமாகிய திருஅவையில் ஒருவருக்கொருவர் சொந்தம் கொண்டாடி, சகோதரத்துவ உறவில் வாழ அழைக்கிறார் என்பதை நாம் ஏற்க வேண்டும். நற்கருணையை ஏற்கும் போது, நாம் அவரது மறைவிடலில் சகோதர சகோதரிகள் ஆகிறோம்.
அடுத்ததாக, என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று இயேசு கேட்டதை வைத்து, இயேசு தன்னுடைய தாய் மரியாவை அவமதித்துவிட்டார் என்று கூறுவோரும் உளர்.
மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, மாறாக, தந்தையின் விருப்பத்தை அறிந்து இயேசு மனுவுருவாக இசைந்தார். இவ்வாறு கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்தார்.
நிறைவாக, இங்கே இயேசு மற்றொரு உண்மையையும் புலப்படுத்துகிறார். ஆம், இரத்த உறவை விட இறையாட்சி உறவே இன்றியமையாதது என்கிறார். இரத்த உறவு இவ்வுலக வாழ்வோடு முடிந்துவிடும். விண்ணகத்தில் அத்தகைய உறவு வாழ்வு இல்லை. அங்கே, அனைவரும் தந்தையின் ஆசி பெற்ற மக்களாக, ஒரே உறவில் வாழ்வோம் கடவுளின் மக்களாக.
இறைவேண்டல்.
‘உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுவதாக’ என்று எங்களை மன்றாட அழைத்த ஆண்டவரே, உமது விருப்பப்படி பிறரோடான எனது சகோதர உறவில் நான் உறுதிபெற எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452