அவரது விருப்பத்திற்குக் கையளிப்பதே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

28 ஜூன் 2024  
பொதுக்காலம் 12ஆம் வாரம் - வெள்ளி
2 அரசர்  25: 1-12
மத்தேயு  8: 1-4
 
அவரது விருப்பத்திற்குக் கையளிப்பதே  சீடத்துவம்!

 
முதல் வாசகம்.


யூதேயாவின் அரசனான செதேக்கியாவின் ஆட்சியின்போது, கி.மு. 587-ல்  பாபிலோனின் அரசனான  நெபுகத்னேசரும் அவனுடைய படையும் எருசலேமைத் தாக்கின. அவர்கள் நகரைச் சுற்றி வளைத்து முற்றுகைச் சுவர்களைக் கட்டினார்கள். ஏறக்குறைய ஈராண்டுகாலம் செதேக்கியாவின் ஆட்சியின் போது  இந்த முற்றுகை நீடித்தது. இதன் விளைவாக  யூதேயாவில்  பஞ்சம் ஏற்பட்டது. எனவே,  நகரத்தின் சுவர்கள் உடைக்கப்பட்டன. செதேக்கியாவும்  அவருடைய வீரர்களும் இரவில் அராபாவிற்கு  தப்பிக்க முயன்றனர், ஆனால் தப்பியோடிய அனைவரையும் எரிகோவுக்கு அருகே கல்தேயர்கள்  (பாபிலோனியர்களால்)  வளைத்துப்  பிடித்தனர்.  

பாபிலோனிய படையினர் செதேக்கியாவின் மகன்களைக் கொன்று, செதேக்கியாவின்  கண்களைப் பிடுங்கி, குருடாக்கி, பாபிலோனுக்குச் சிறைப்படுத்தினர். 
 
தொடர்ந்த, பாபிலோனிய காவலர்களின் தலைவனான நேபுசரதான் எருசலேமுக்கு வந்து, கோவிலையும், அரசனின் அரண்மனையையும்,  கட்டிடங்களையும் எரித்தான். கல்தேயப் படைகள் நகரச் சுவர்களை அழித்தன. திராட்சைத் தோட்டக்காரர்களாகவும் விவசாயிகளாகவும் வேலை செய்ய அவர் விட்டுச் சென்ற சில ஏழைகளைத் தவிர, மீதமுள்ள மக்களை நெபுசரதன் நாடு கடத்தினார். இவ்வாறு யூதேயாவில் அரசராட்சி முடிவுக்கு வந்தது.


நற்செய்தி.


மத்தேயு 5-ம் அதிகாரத்தில் தொடங்கிய இயேசுவின் மலைப்பொழிவு நேற்றைய 7-ம் அதிகாரத்தோடு முடிவுற்றது. இன்று, 8-ம் அதிகாரத்தில் பாதம் பதிக்கிறோம். இது இயேசுவின் விண்ணரசுப் பணிக்கான பகுதியின் தொடக்கம். இயேசு மலைப்பொழிவை முடித்துக்கொண்டு கீழே இறங்கி வந்த போது, மக்கள் கூட்டம் அவரை நெருங்கி வந்தபோது, ஒரு தொழுநோயாளி அவரைச் சந்திக்கிறார், அவர் தனது தொழுநோயிலிருந்து குணமடைய விரும்புகிறார். 

தொழுநோயாளி பணிந்து, இயேசுவிடம்   “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார.  அந்த மனிதனின் விருப்பத்தை இயேசு நிறைவேற்றுகிறார்.   நிறைவாக, இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.


சிந்தனைக்கு.


இன்றைய  நற்செய்தியில்  கவனிக்க வேண்டிய முதல் விடயம் என்னவென்றால், இயேசு தொழுநோயாளியைத் "தொட்டார்" என்பதாகும். தொழுநோயாளிகள் அசுத்தமாக இருப்பதாலும், அவர்களைத் தொட்டால் நோய் பரவும் என்பதாலும், தொடுதல் தடைசெய்யப்பட்டதொன்றாக யூதர்கள் மத்தியில் சட்டம்  இருந்தது (லேவி 13:45-46). ஆனால் இயேசு அந்த நியமத்தை உடைத்து அந்த மனிதனைத் தொட்டு, அவனுடைய உள்ளார்ந்த கண்ணியத்தையும் மதிப்பையும் அவனுக்கு வெளிப்படுத்தினார்.

நற்செய்தியைக் கருத்தூன்றி வாசிக்கும் போது, ஒரு கேள்வி எழுகிறது.  யார் யாருக்கு அதிக மரியாதை செலுத்தினார்? தொழுநோயாளி இயேசுவை நோக்கி, “ஐயா” என்று அழைத்தாரே அவரா? இல்லை அவரை தொட்டு குணப்படுத்தின இயேசுவா ? 
 
இந்த இருவரின்  செயல்களையும் நாம் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை என்றாலும், தன்னை துணிவோடு அழைத்த அசுத்தமான தொழுநோயாளியைப் புறக்கணிக்காமல், கண்டும் காணாமல், அவரது குரலைக் கேட்டும் கேட்காமல் அவரைக் கடந்துப் போகாமல், அவரை  ஏறெடுத்துப் பார்த்தார்  அல்லவா? அதுவே  மனித மாண்புக்கு இயேசு அளித்த மாபெரும் மரியாதை. 
அவர் தொழுநோயாளியைத் தனது தொடுதல் மற்றும் குணப்படுத்துதல்  மூலம்   மக்கள் மத்தியில் அவரைக் கௌரவப்படுத்தியது மட்டுமல்லாமல்,  விலக்கப்பட்ட அந்த நோயாளி  மீதான தனது அன்பையும் மரியாதையையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ (குறள் - 71) எனும் திருவள்ளுவரின் குறள் இங்கே ஓங்கி நிற்கிறது. உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது.  அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும். இந்த உணமைக்கு இலக்கணமாக விளங்கினார் இயேசு.
சில கடினமான சூழ்நிலையும் நோயும்  நம் வழியில் வர கடவுள் அனுமதித்திருக்கலாம்.  ஆனால் அது கடவுள் நம்மீது கொண்ட கோபத்தின் விளைவு என்று பொருள் கொள்ளக்கூடாது.  உண்மையில் கடவுள் அளவுக்கடந்த அன்பை நம்மில் கொண்டுள்ளார். எனவே, அந்த தொழுநோயாளியைப்போல், “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று கடவுளின் திருவுளத்திற்கு விட்டு விட வேண்டும்.  நீர்விரும்பினால் நான் நலம் பெறுவேன்’ என்பதே தொழுநோயாளியின்  வேண்டுகோள். 

இங்கே இயேசு யூத சட்டத்தை ஏற்று அதற்கேற்ப நடப்பதை நாம் காண்கிறோம். இது இயேசு திருச்சட்டத்திற்கு எதிரானவர் அல்ல, மாறாக அதனை நிறைவுச் செய்பவர் என்பதைக் காட்டுகிறது.  இதை குருக்களும் உணர வேண்டும் என்பதற்கு நலம்பெற்ற தொழுநோயாளியைக் குருவிடம் அனுப்புகிறார். ஏனெனில் திருச்சட்டத்தின்படி, குரு நோயாளியைப் பரிசோதித்து, முழுமையாக நலமடைந்தார் என்று முடிவு செய்தால்தான் அவர் தன் குடும்பத்தோடும் சமூகத்தோடும் இணைய முடியம். இயேசு அவருக்கு விடுதலை அளித்தார். ‘நம்பினால் கெடுவதில்லை ஆண்டவனே’ எனும் கூற்று இங்கே உண்மையாயிற்று. 

மத்தேயு குறிப்பிடுவதைப்போல, தனது முதல் விண்ணரசுப் பணியாக  இந்த நோயாளியைத் தொட்டு குணப்படுத்தியதன் மூலம், இயேசுவின் விண்ணரசுப் பணி  அனைவரும் கவரும் விதத்தில் அமைகிறது. கடவுளின் திருவுளத்தை நாடுபவர்கள் விண்ண்ரசுக்கு உரியவர்கள் என்பதையும் கடவுளின்  திருவுளப்படி வாழ்பவர்கள் விண்ணகம் சேர்வர் எனும் பேருண்மையை  ஆண்டவர் வெளிப்படுத்துகிறார்.

நமது பாவ மூட்டையை அவிழ்த்து அவரது பாதத்தில் கொட்டும்போது நமக்கும் விடுதலை உண்டு. அதற்கு தொழுநோயாளியைப்போல் இயேசுவை அழைக்க வேண்டும். அந்த தொழுநோயாளிடத்தில் இருந்த நம்பிக்கை நமக்குள் நிறைந்திருக்க வேண்டும்.


இறைவேண்டல்.


தொழுநோயாளியின் குரலுக்குச் செவிசாய்த்த ஆண்டவரே, உமது ‘தொடுதலால்’ நான் நலம் பெறவும், திடம் பெறவும், உம்மில் நிலைபெறவும் அருள்வீராக.   ஆமென்.
 

 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452