சீடத்துவ வாழ்க்கை, மலர்ப் படுக்கை அல்ல, முட்படுக்கை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

27 ஜூன் 2024  
பொதுக்காலம் 12ஆம் வாரம் - வியாழன்
2 அரசர்  24: 8-17
மத்தேயு  7: 21-29
 
சீடத்துவ வாழ்க்கை, மலர்ப் படுக்கை அல்ல, முட்படுக்கை!

முதல் வாசகம்.


இனைறய முதல் வாசகம், தொடர்ந்து யூதேயாவின் மற்றும் எருசலேமின் விழ்ச்சியை விவரிக்கிறது. சாலமோன் கட்டிய எழுச்சி மற்றும் எழில்மிகு ஆலயம் கொண்ட  எருசலேம் பாபிலோனியர்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டது. அக்காலத்தில், யோயாக்கின் அதன் அரசனாகப் பதவியேற்றிருந்தான். அரசன் யோயாக்கின் தாவீதின்  வழிமரபில் வந்தவன் என்றாலும்  அவன்,  கடவுளின் விருப்பப்படி   ஆட்சி  செய்யவில்லை. 

அவனுடைய சில மூதாதையர்களைப் போலவே கடவுளுக்குக் கீழ்ப்படியாதவனாகவும்  தீயவனாகவும் இருந்தான்.  இதன் விளைவாக கடவுள் அவர்களை அன்னியர் கையில் ஒப்படைத்தார்.  ஆம்,  பாபிலோன் அரசன் நேபுகாத்நேசரின் ஆட்சியின் போது, யூதாவின் அரசும்  நகரமும் வீழ்ச்சியடைந்து, யூதேயா மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.  இது கி.மு.  587 இல்  நிகழ்ந்தது என வரலாறு எண்பிக்கிறது.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தால் அதை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் இயேசு தம் சீடர்களை  அல்லது, கிறிஸ்தவர்களை   மூன்று பிரிவினராகப் பிரித்துக்காட்டுகிறார். 

1.முதல் பிரிவினர்  இயேசுவுக்கென்று எதையும் செய்ய மனமில்லாதவர்கள். ஆனால், அல்லும் பகலும் இயேசுவைப் போற்றிப் புகழ்வதில் வல்லவர்கள். 

2.இரண்டாம் பிரிவினர், ஆண்டவராகிய இயேசுவின்  படிப்பினையைக் கேட்டுப் பின்பற்றி வாழ்பவர்கள். இவர்கள்  பாறை மீது  வீடு கட்டும் ஞானமுள்ள சீடர்களுக்கு ஈடாக ஒப்பிடப்படுகிறவர்கள்.  

3.மூன்றாம் பிரிவினர், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படாதவர்கள். இத்தகையோர்  மணல் மீது வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஈடாக ஒப்பிடப்படுகிறார்கள்.  


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியை வாசிக்கும் வேளையில், முதல் நினைவூட்டலாக ஆண்டவர் கூறுவது, “என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்பதாகும். இங்கே இயேசு அவருக்காக எத்தனை  மில்லியன் சீடர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பேசவில்லை. மாறாக, எத்தனை தரமான சீடர்கள் இருக்கிறாரகள் என்பதில் கவலைக்கொள்கிறார். ஒரு பொருள் சந்தையில் விலைப்போக வேண்டுமாயின் அதன் தரம் முக்கியம் அல்லவா?  இயேசுவின் நற்செய்தி உலக மக்களைச் சென்றடைய தரமான சீடர்கள்  தேவை. 

ஆம், இயேசுவின் கூற்றானது,  உதட்டளவில் இயேசுவின்  பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய சவுக்கடி எனலாம். யோவான் நற்செய்தியில்  “மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை” (5:41) என்று இத்தகையோரை விவரிக்கிறார் ஆண்டவர்.  நேற்றைய  நற்செய்தியில் நம்  வாழ்வில் மலிந்துவரும் போலி தனத்தைச் சுட்டிக் காட்டினார்  ஆண்டவர்.  எங்கும் எதிலும் போலி என்பதுபோல இயேசுவின் சீடத்துவத்திலும் போலித்தனம் தலைவிரித்தாடுகிறது. 
இயேசுவின் பெயரை  சுயஇலாபத்திற்காக  பயன்படுத்தக்கூடாது. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, இயேசுவைப் புகழ்ந்து  கூட்டம் கூட்டமாக தனிப்பட்ட முறையில் புகழ்ச்சி ஆராதனைகள் நடத்தவதும்  இறைவார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து மக்களை வசப்படுத்துவதும் சிலருக்குக் கைவந்த கலையாகிவிட்டது. இவர்கள் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தூய ஆவியாரின பெயரால் பிழைப்பு நடத்துகிறார்கள். 
ஆண்டவருடைய ஊழியன் என்று பேர் வாங்குவதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இவர்கள் மணல் மீது தங்கள் வீடுகளைக் கட்டுவோருக்கு ஈடானவர்கள் என்கிறார் ஆண்டவர். 
இன்றைய நற்செய்தி இயேசுவின் மலைபொழிவின் இறுதி படிப்பினையாக உள்ளது. மலைப் பொழிவில் ''பாறைமீது வீடுகட்டுவது'' இயேசு என்னும் உறுதியான அடித்தளத்தில் நம் வாழ்க்கை ஊன்றியிருப்பதைக் குறிக்கிறது.  நம் வாழ்க்கையானது இயேசுவின் மன நிலையைப் பிரதிபலிக்கின்ற போது பாறைமேல் கட்டப்பட்ட வீடு போல நிலைத்து நிற்கும். 
மாறாக, உதட்டளவில் இயேசுவைப் போற்றி புகழ்வதும் ஆராதிப்பதும் ஏமாற்று வேளையாகும். ஒருநாள் ஆண்டவர், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று சொல்லவதற்கு நாம் வழிதேடக்கூடாது. மாறாக,  ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள் (மத்  25:34) என அவர் நம்மை அரவணைக்கும் மக்களாக வாழ முற்படுவோம். 
முதல் வாசகத்தில் அரசன் யோயாக்கின் தனது சுயநலப்போக்கினாலும் மக்களைதி தீய வழியில் வழிநடத்தினதாலும் வீழச்சியடைந்தான். அவன் வழிபட்ட தெய்வங்கள் அவனைக் காப்பற்றவில்லை. தாவீதின் வழிமரபில் அவன் தோன்றியிருந்தாலும் போலித்தன்மையால் நாட்டையும் நற்பெயரையும் இழந்தான் என்பதை நினவில் கொண்டு,  சீடத்துவத்தில் உண்மைக்கும் தாழ்ச்சிக்கும் உரிய வாழ்வுக்கு விழைவோம்.
பெயர், புகழ். செல்வாக்கு போன்றவற்றைப் புறக்கணிக்கும் சீடத்துவத்தை ஏற்று பணி செய்வோம். 

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, நீர் ஏற்படுத்திய சீடத்துவ வாழ்வில் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, போலித்தனமான பணிவாழ்வை புறக்கணித்து, நீர் எனக்குக் கற்றுத் தந்தவாறே  இறைத் தந்தையின் பிள்ளைநாக வாழ அருள் தந்தருளவீராக.  ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452