அர்ப்பணமற்ற வாழ்வுக்குக ‘கிறிஸ்மஸ்’ ஏன்? | ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் 3-ம் வாரம் –வியாழன்
நீதித்தலைவர்கள் 13: 2-7, 24-25
லூக்கா 1: 5-25
அர்ப்பணமற்ற வாழ்வுக்குகு ‘கிறிஸ்மஸ்’ ஏன்?
முதல் வாசகம்
இயேசுவின் பிறப்பு பெருவிழாவிற்கு இன்னும ஆறு நாள்களே உள்ள வேளையில். இன்றைய வாசகங்கள் நீதித்தலைவர்கள் நூலில் இருந்தும், லூக்கா நற்செய்தியிலிருந்தும் கொடுக்கப்பட்டுள்ளன. இரு வாசகங்களிலும், குழந்தைகள் இல்லாத வயதான தம்பதிகளைப் பற்றி வாசிக்கிறோம். இரண்டு சூழலிலும் கடவுளிடமிருந்து ஒரு தூதர் அவர்களகுக்கு ஒரு மகன் பிறப்பதைப் பற்றி அறிவிப்பதாக இன்று விவரிக்கப்படுகிறது.
இரண்டு முறையும் தூதர் அவர்களின் இறைவேண்டலின் போது தோன்றுகிறார். அவரது செய்தி கேட்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
முதல் வாசகத்தில், வயது முதிர்ந்த தம்பதியரான மனோவாகுக்கும் அவருடைய மனைவிக்கும் (பெயர் குறிப்பிடப்படவில்லை) மகனாகப் பிறந்த சிம்சோனின் பிறப்பைக் குறித்து வாசிக்கின்றோம். ‘நாசீர்’ ஆக இருக்கும் ஒரு குழந்தை (சிம்சோன்) பிறப்பைப் பற்றி பேசுகிறது. ‘நாசீர்’ என்றால் பிறப்பிலிருந்தே கடவுளக்கென நேர்ந்துவிடப்பட்டவர் என்று பொருள் கொள்ளலாம்.
சிம்சோன் என்ற பெயருக்கு "சேவை செய்பவர்" என்று பொருள். சிம்சோனின் தாயார் வெகு காலமாக குழந்ததை பேறு இல்லாமல் இருந்தாள். குழந்தைக்காகக் கடவுளிடம் மன்றாடி வந்தாள். கடவுளின் தூதர் அவருக்குத் தோன்றி, இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, தேவதூதர் அவளுக்கு குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார். அவள் மதுபானம் மற்றும் அசுத்தமான எதையும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார், ஏனெனில் அவளுடைய மகன் ஒரு ‘நாசீர்’, பிறப்பிலிருந்தே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவன். மது அருந்துவதைத் தவிர்ப்பது, தலைமுடியை வெட்டாமல் இருப்பது, இறந்தவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை ஒரு ‘நாசீருக்கான நேர்ந்தளிப்பு உள்ளடக்கியது. இந்த சபதம் சிம்சோனை கடவுளின் சேவைக்கு அர்ப்பணித்த ஒருவராக வேறுபடுத்தியது. பெலிஸ்தியர் ஒடுக்குமுறையிலிருந்து இஸ்ரயேலரை விடுவிப்பதில் சிம்சோன் முக்கிய பங்கு வகிப்பார் என தூதர் அறிவித்தார்.
நற்செய்தி.
நற்செய்தியில், செக்கரியா தன்னுடைய முறை வந்தபோது, ஆண்டவரின் திருக்கோயிலுக்குள் சென்று, தூபம் காட்டுகின்றார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் அவருக்கு முன்பாகத் தோன்றி, “செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது’ என்கின்றார்.
லூக்கா நற்செய்தியாளர் செக்கரியா மற்றும் அவருடைய துணைவியாரான எலிசபெத்து இருவரையும் நேர்மையாளர்களாகவும் கடவுளின் அனைத்துக் கட்டளைகளுக்கும் பணிந்தவர்களாகவும் குறிப்பிடுகிறார். லூக்கா நற்செய்தியின் படி செக்கரியாவும் எலிசபெத்தும் தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டும் என்று தொடர்ந்து, இடைவிடாது மன்றாடி வந்திருக்கவேண்டும் என்பது நமக்குத் தெரியவருகிறது. இத்தருணத்தில்தான், கடவுளின் தூதர் செக்காரியாவிற்குத் தோன்றி, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது என்று கூறுகின்றார்.
ஆண்டவரின் தூதர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, செக்கரியா ஆச்சரியத்துடன் , “இது நடைபெறும் என எனக்குக் எப்படித் தெரியும்...?” என்று கேட்கவே, கடவுள் இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது'' என்றார்.
அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார். அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்'' என்று தமக்குள் சொல்லிக்கொண்டார் செக்கரியா.
சிந்தனைக்கு.
கடவுள் தொடங்கிய மீட்புத் திட்டம் முடிந்துவிடவில்லை. திருஅவையின் வழியாக இன்றும் அது தொடர்கிறது. இந்த மீட்புத் திட்டத்தில் பங்காற்ற பலர் அழைக்கப்பட்டனர் இன்றும் அழைக்கப்படுக்கொண்டிருக்கிறார்கள். ‘உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்’ (யோவான் 14:16) என ஆண்டவராகிய இயேசும் அதே மீட்புத் திட்டத்தில் பங்குபற நம்மை வழிநடத்த தூய ஆவியாரையும் தந்துள்ளார்.
அன்று அவரது தூதர்களை அனுப்பி பேசிய கடவுள் இன்று அவரது தூய ஆவியாரின் வழி நம்மோடு பேசுகிறார். கடவுள் நம்மை அணுகி வந்து அவரோடு இணைந்து செயல்பட நம்மை அழைக்கின்ற வேளைகளில் அன்னை மரியாவைப் போல் ''ஆம்'' என நாம் பதிலிறுக்க வேண்டும்.
வானதூதர் வழியாகத் தமக்கு வழங்கப்பட்ட செய்தியைச் செக்கரியா நம்ப மறுத்தார் (லூக் 1:20); ஆனால் மரியா கடவுளின் வார்த்தையை நம்பி ஏற்று, ''நான் ஆண்டவரின் அடிமை'' என்று கூறிப் பணிந்தார் (லூக் 1:38). இத்தகைய பணிவு நம்மிலும் காணப்பட வேண்டும். கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கி வரும் இக்காலத்தில், எதிலும் பரபரப்பு நம்மில் காணப்படுகிறது. ஏன்? நம் வீட்டுக் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பிறரை மிஞ்ச வேண்டும் என்ற ஆவல்.
கடவுளின மீட்புப் பணிகளில் இன்றியமையாதது ஏழை எளியோரை, சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை, வறுமையில் உழல்வோரை, ஒருவேளை உணவுக்கு ஏங்கும் குழந்தைகளை அண்டிச் சென்று உதவுவதாகும். இப்பணிகளில் நமதுள்ளம் இல்லாதவறையில் நமக்கு ஏது ‘கிறிஸ்மஸ்?
சிம்சோனின் பெற்றோரும், திருமுழுக்கு யோவானின் பெற்றோரும் கடவுளின் மீட்பு வரலாற்றில் அவர்களது மகன்களைக் காணிக்கையாக ஒப்படைத்தனர். மறைநூலில் அவர்களது பெயரை வாசிக்கிறோம். செக்கரியா கடைசி காலம் வரை அவரது பணியை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.
கடவளின் மீட்புப் பணிகளில் ஏதேனும் ஒன்றிலாவது ஈடுபடாத எவரும் ‘கிறிஸ்மஸ்’ கொண்டாட தகுதிபெறுகிறார்களா? எனும் கேள்வி தோன்றுகிறது. கிறிஸ்தவம் என்பது பணிக்குரியது, போலி கொண்டாட்டத்திற்கு அல்ல. இயேசுவும் பணியேற்றுதான் உலகிற்கு வந்தார்.
இறைவேண்டல்.
மீட்பராக மனுவுருவான இயேசுவே, நான் உம் முன் என்னைத் தாழ்த்தி, என் நம்பிக்கை வாழ்வின் பலவீனத்தை ஒப்புக்கொள்ளும்போது, நீர் என்னிடம் பணிக்கும் அனைத்திற்கும் ஒவ்வொரு நாளும் முழுமையாக பதிலளிக்க என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452