பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – செவ்வாய்.
எசாயா 40: 1-11
மத்தேயு 18: 12-14
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்!
முதல் வாசகம்.
எசாயா நூலின் அதிகாரங்கள் 40 முதல் 50 வரையிலான பகுதிகளில். யூதர்கள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்தைச் சார்ந்தவை. இக்காலத்தில் கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் எசாயா நம்பிக்கை முழக்கமிட்டதை இப்பகுதியில் வாசிக்கிறோம்.
இன்றைய முதல் வாசகம், திருமுழுக்கு யோவானின் முழக்கத்தை முன்னுரைக்கிறது இதில், நாடுகடத்தப்பட்டு திக்கற்றவர்களாய் நின்ற மக்களைத் தம்மிடம் அழைக்கின்ற கடவுள், 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்' என்கிறார்.
மேலும், என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார் என்று எசாயா மீட்பரின் வருகையைப் பற்றி முன்னறிவித்ததை வாசித்தோம்.
நற்செய்தி
நற்செய்தியில் இயேசுவின் மற்றொர் உவமையைக் குறித்து பேசுகிறார் மத்தேயு. 99 ஆடுகளை விட காணாமற்போன ஓர் ஆட்டை தேடி அலையும் நல்ல ஆயனின் குணாதிசயத்தை விவரிக்கிறார். யூதர்களை மனதில் கொண்டு நற்செய்தி எழுதிய இவர், இயேசு வழிதவறிய யூதர்களைத் தேடி வந்தவர் என்ற கருத்தினை பதியவைக்கிறார்.
ஒரு நல்ல ஆயர் வழிதவறி அலையும் ஓர் ஆட்டைத் தேடிச் செல்வார். அவர் அதைக் கண்டுபிடித்தால் மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட, வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று இயேசு கூறிய உவமையை விவரிக்கிறார்.
மேலும், ஆண்டவரின் வார்த்தையின் ஆற்றல் என்ன' என்பதையும் இப்பகுதி நமக்குக் காட்டுகிறது: 'புல் உலர்ந்து போகும். பூ வதங்கி விழும். உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உதிர்ந்து போகும். பூ வதங்கி விழும். நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்!' எனும் படிப்பினை நமக்கு அருளப்படுகிறது.
சிந்தனைக்கு.
முதலாவதாக, இன்றைய வாசகங்களின் நம் ஆண்டவர் ஓர் ஆயனாக உருவகப்படுத்தப்படுகிறார். ஓர் ஆயனைப் போல தம் மக்களை மீட்பராகிய ஆண்டவர் மேய்ப்பார் என்பது வலியுறுத்தப்படுகிறது. எதிரிகள் தாக்கும் போது, தன் உயிரைக் காப்பாற்ற ஆடுகளைக் கைவிடும் ஆயனைப்போல் அன்றி, ஆடுகளைக் காப்பாற்ற தன் உயிரை பலிகொடுக்கும் நல்லாயனாக அவர் இருப்பார் என்று இயேசு சித்தரிக்கப்படுகிறார்.
தொடர்ந்து, ஆயராகச் சித்தரிக்கப்படும் இயேசு, தம் ஆண்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார் என்கிறார். இங்கே, இயேசு தன் ஆடுகளை மிரட்டி, அச்சிறுத்தும் கொடுமை மிகு ஆயராக அல்ல, மாறாக, ஆடுகளை அரவணைத்துப் பசும்புல் வெளிக்கும் நீர்நிலைகளுக்கும் ஓட்டிச் செல்லும் ஆயராக வெளிப்படுத்தப்படுகிறார்.
நிறைவாக, ஒரு நல்ல ஆயனுக்கு தன் ஆடுகளை தெரியும். தன் வசம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகளில் ஒன்று தொலைந்துப்போனாலும் அதனை அங்கும் இங்குமாக, காடு மேடெல்லாம் தேடி அலைந்து, கண்டுபிடித்து தன் மந்தையோடு சேர்ப்பார். இத்தகைய குணம் படைத்த ஆயனுக்கே நல்லாயன் என்று பெயர். இயேசு இங்கே நல்லாயனாகக் காட்டப்படுகிறார்.
இன்றைய வாசகங்கைள சற்று ஆழமாக சிந்தித்தால், நம் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதும் அவருடைய அன்பு எத்துணை உயர்ந்தது என்பதும் புலப்படும். அடுத்து, கடவுள் தம் மக்களை ஒட்டு மொத்தமாக அன்பு செய்தாலும், அவர் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கின்றார் என்பது தெளிவாகிறது ஆம், தொலைந்து போன ஓர் ஆடு அவரிடம் திரும்பும் போது மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்குகிறார் என்று இயேசு தம் தந்தையின் அன்பதை வெளிப்படுத்துகிறார்.
குறிப்பாக, பாவிகள் தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்திருப்பவராக நம் கடவுள் இல்லை. மாறாக, அவராகவே பாவிகளைத் தேடி வரும் மனம் கொண்டவர். இவ்வாறாக, நாம் கடவுளைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த திருவருகைக் காலத்தின் முக்கிய செய்தியாக, கடவுள் நம்மைத் தேடி வருகின்றார் என்ற உண்மையை நாம் மனதில் நிறுத்த வேண்டும்.
ஆகவே, இந்த கலாத்தில் நமது தேடலும் உலகம் சார்ந்த விடயங்களை மையமாகக் கொண்டிராமல், உண்மை இறைவனையும் அவரது இரக்கத்தையும் நாடும் மக்களாக நமது சொல்லும் செயலும் அமைய வேண்டும்.
முதல் வாசகத்தில், எசாயா சினையாடுகளைக் கவனமுடன் நடத்திச் செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் நம் கடவுள் வலுவற்றவர்களின் மீதும் அக்கறை காட்டுகிறார் என்பது இப்படி சித்தரிக்கப்படுகிறது.
நாம் ஒவ்வொருவரும் ஓர் ஆயனாக நம்மை ஏற்க வேண்டும். நம்மை விட்டுப் பிரிந்தோரைத் தேடிச் சென்று அரவணைப்போமானால், ஆண்டவர் அவர்களது உள்ளத்தில் மனமாற்றம் ஏற்படச் செய்வார். சமூகத்தில் உள்ள விளிம்பு நிலையில் உள்ளவர்களையும் நாடிச் சென்று நற்செய்தியின் மகிழ்ச்சியைப் பகிர நாம்தான் முற்பட வேண்டும். இந்த இயேசு பிறப்பு பெருவிழாவில் ஒரு மாற்றம் வரட்டும். அது நம்மில் தொடங்கட்டும்.
இறைவேண்டல்
நல்லாயனாம் என் இயேசுவே, உம் மந்தையாகிய திருஅவையிலிருந்து தொலைந்த நம்பிக்கையாளர்களைத் தேடிக் கண்டடையும் கடமையுணர்வு என்னில் அதிகரிக்கவும் பொறுப்பை ஏற்று வாழவும் எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452