ஆண்டவர் இயேசு அடைக்கலப் பாறை. ஆதலின் குறையில்லை!| ஆர்.கே. சாமி | VeritasTamil

திருவருகைக்காலம் முதல் வாரம் - வியாழன்
எசாயா 26: 1b-6
மத்தேயு 7: 21, 24-27
ஆண்டவர் இயேசு அடைக்கலப் பாறை. ஆதலின் குறையில்லை!
முதல் வாசகம்.
ஏசாயா இறைவாக்குரைத்தக் கலாத்தில், யூதேயாவின் ஆற்றலும் வலிமையும் குறைந்தே காணப்பட்டது. இதற்கு காரணம் அவர்கள் கடவுள் மீது நம்பிக்கை இழந்து அவருக்குப் பணியாது செய்த பாவங்களே என்று எசாயா உணர்த்தி வந்தார்.
இதனிமித்தம், எதிரிகளிடமிருந்து யூதேயாவையும் எருசலேமையும் தற்காத்துக்கொள்ள தனது எழுச்சியூட்டும் சொற்களாலும் செயல்களாலும், யூதர்களையும் அவர்கள் தலைவர்களையும் நேர்மையோடும் நீதியோடும் வாழுமாறு அழைத்தார்.
மேலும், எருசலேம் நகரத்தை அமைதி மற்றும் நீதியின் நகரமாக கடவுள் மீண்டும் நிறுவுவார் என்று ஏசாயா உறுதியளிக்கிறார். தாழ்ந்தவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்றும் கடவுளின் ஆட்சியில் கடவுளுக்குரியவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் வலியுறுத்தி போதிக்கிறார்.
நற்செய்தி
நற்செய்தியில், விண்ணகத்தில் உள்ள தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுவரே விண்ணரசுக்குள் செல்வர் என்கிறார் இயேசு. இதற்கு அவர் பயன்படுத்தும் உவமைதான் மணல்மீது வீடு கட்டுதலும், கற்பாறையின்மீது வீடு கட்டுதலும்.
நற்செய்திக்குச் செவிசாய்த்து அதன்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் என்கிறார். ஏனெனில், மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது என்று கூறுகிறார்.
சிந்தனைக்கு
கடவுளின் ஆட்சியின் நீதி சத்தமாகவும் தெளிவாகவும் ஒலிக்கிறது. கடவுளின் ஆட்சியின் தொடக்கத்தை இயேசு அறிவித்தார். அது இப்போது உங்கள் மத்தியல் உள்ளது என்றும் கற்பித்தார். இதனிமித்தம் நாம் நம்மை தூய்மைப்படுத்துவதோடு, இயேசுவின் மறைப்பரப்பு கட்டளையைத் தொடர வேண்டும். கடவுளின் நீதியான ஆட்சியைக் கொண்டுவருவதில் நாம் பங்கேற்பதுதான் ஆட்சியின் முழுமைக்கான கதவைத் திறக்கும் சிறந்த வழியாகும்.
ஆண்டவர் கற்பாறையாக இருக்கின்றார். ‘ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்; என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக! (சாமுவேல் 22:47) என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்பவர், மழை என்ற இறுதித் தீர்ப்பு வருகின்றபோது, அசைவுறாமல் உறுதியாய் இருப்பர் என்கிறார்.
இன்றைய வாசகங்களை ஆழ்ந்து சிந்திக்கும்போது, இயேசுவை ஆண்டவராக ஏற்பதால் மட்டும் நாம் நல்லவர்கள் வல்லவர்கள் என்று கருதிவிட முடியாது. அது வெறும் வார்த்தைகள் என்றாகிவிடும். நமது சொல்லும் செயலும் கடவுளின் ஆட்சியின் நீதி உலகில் செயல்பட வேண்டும் என்பதை ஏற்று அதனை பறைசாற்ற வேண்டும். இதற்காக கடவுளின் கருவிகளாகச் செயல்பட நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
நமது திருஅவை திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாக உள்ளது (எபே 2 :20). எனவேதான் ஈராயிரம் ஆண்டுகளாக அது பல சவால்கள் மத்தியில் தொடர்ந்து பயணிக்கிறது.
அவ்வாறே, ஒவ்வொரு திருமண வாழ்வும் அமைய வேண்டும். திருமண வாக்குறுதி சிலைமேல் எழுத்தாக விளங்க வேண்டும். மாறாக, திருமணம் வாழ்வு என்பது பொருத்தம், அந்தஸ்து, சோதிடம் பார்த்து முடிவெடுப்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படி முடிவெடுப்பது மணல் மீது கட்டப்பட்ட வீட்டிற்குச் சமம். மேலும், குடும்பம் ஒரு குட்டித் திருஅவை என்பதும் ஆட்டம் கண்டுவிடும்.
நமது ஆண்டவரே நமக்கு அடைக்கலப் பாறையாக உள்ளார். எனவே, நமது நம்பிக்கை நமது செயல்களில் உறுதியாக வெளிப்படாவிட்டால், நமது சீடத்துவம் பொருளற்றதாகிவிடும்.
இறைவார்த்தை
எனது கற்பாறையாம் இயேசுவே, நான் எடுக்கும் முயற்சிகள் தோற்றாலும், எனது நம்பிக்கை ஒருபோதும் தோற்காது என்ற நம்பிக்கையில் நான் வேரூன்றி இருக்க உதவியருளும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
