நமது உள்ளம் ஏழையரின் உள்ளமாகட்டும்! | | ஆர்.கே. சாமி | VeritasTamil

13 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 19 ஆம் வாரம் -செவ்வாய்
எசேக்கியேல் 2: 8- 3: 4
மத்தேயு   18: 1-5, 10-14


 நமது உள்ளம் ஏழையரின் உள்ளமாகட்டும்!


முதல் வாசகம்.


நாம் எசேக்கியேல் நூலின் முதற் பகுதியில் இன்றைய வாசகப் பகுதியைக் காண்கிறோம். கடவுளின் வார்த்தை எழுதப்பட்ட ஏட்டுச்சுருளை எசேக்கியேல் காட்சியாகக் காண்கிறார். அந்த ஏட்டுச்சுருளை உண்டு, கடவுளின் நோக்கங்களை, உணர்வுகளை, திருவுளத்தை தன்வயமாக்க வேண்டும். வாயில் இருக்கும்போது இனிக்கும் இந்த வார்த்தைகள்  வயிற்றுக்குள் சென்றபின்  கசப்பதீக எசேக்கியேல் உணர்கிறார்

கடவுளின் வார்த்தைகளை வாழ்வில் பின்பற்றுவது என்பது எளிமையான காரியம் அல்ல. எனவே தொடக்கத்தில் கடவுளுடன் உறவில் இருப்பது கடினமானதாகத்  தோன்றலாம்.  ஆனால், கடவுளுடனான  உறவை நாம் எவ்வளவுக்கு அதிகமாக ஏற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு எளிதாகவும் இனிமையாகவும் மாறும்.  கடவுள் தெய்வீக கட்டளைகளையும் செய்திகளையும்  எழுதப்பட்ட சுருளை எடுக்க எசேக்கியேல் கேட்கப்படுகிறார்.  அவர் அதை சாப்பிடும்படி கேட்கப்படுகிறார். பின்னர், அவரை கடவுள் “மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு” என்று அனுப்புகிறார்.

கடவுளின் வார்த்தையை எடுத்துக்கொண்டு அதை நம்மில் ஒரு பகுதியாக மாற்றுவது எவ்வளவு இனிமையானது என்பதை இன்றைய பதிலுரைப் பாடலில் கேட்கிறோம்.  அது தேனை விட இனிமையானது என் விவரிக்கப்படுகிறது.


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள்   சீடர்களில் ஒருவர் செய்யும் காரியங்களை வைத்தே  அந்த சீடனை மற்றவர்களை விட சிறந்தவர் ஆக்குகிறார் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.  இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,     “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என்று ஒரு சிறு பிள்ளையை எடுத்துக்காட்டாக  கொண்டு விவரிக்கிறார். 

மேலும் இரு தன்மைகளை வலியுறுத்திக் கூறுகிறார்.

1.சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும். 
2.சிறு பிள்ளை ஒன்றை இயேசுவின்  பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் அவரையே ஏற்றுக்கொள்கிறார்.

தொடர்ந்து, இயேசு தனது கடவுளோடான அப்பா-தந்தையின் அன்பை   காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லும் அக்கறையுள்ள மேய்ப்பனுடன் ஒப்பிடுகிறார்.  வழிதவறிச் செல்லாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் வழிதவறிச் சென்ற ஒரு ஆடு கிடைத்ததில் மேய்ப்பன் அதிக மகிழ்ச்சி அடைகிறான் என்று முடிக்கிறார். 


சிந்தனைக்கு.


சிறு பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளைகளாகவே இருந்துவிடுவதில்லை. 'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்' என இயேசு அறிவுறுத்துகிறார். சிறு வயதிலேயே சமூகத்தால் உதறித்தள்ளப்படுவோர் நாளை அவர்கள் அச்சமூகத்திற்குப் பயனற்றவர்களாக மாறிவிடுவர். 

குசேலன் எனும் திரைப்படத்தின் இறுதியில் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு பள்ளி  மாணவர்களோடு உரையாற்றும்போது, ‘ இந்த வயதில் உங்கள் நண்பர்களைத் தேர்வுச் செய்யுங்கள், அவர்கள்தான் எந்த வேறுபாடும் காட்டாமல் உண்மை நண்பர்களாக இருப்பார்கள்' என்றதொரு கூற்றைப் பகிர்ந்துகொள்வார். உண்மைதான் சிறு வயதினர் கள்ளங் கபடு அற்றவர்கள். இதையே இயேசு ஓர் உதாரணமாகக் கொண்டு விண்ணரசின் தன்மையை சீடர்களுக்கு விவரிக்கிறார். 

சிறுபிள்ளையை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்தல். வெறுமனே ஏற்றுக் கொள்வதலல்ல. குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும்போது அதை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்ளும் போது நாம் இறைவனை மாட்சிபடுத்துகின்றோம். சிறுவர்கள்  நாளையப் பொழுதைப் பற்றிய   கவலையற்றவர்கள்.   அவர்கள் தூய்மையானவர்கள் என்பதோடு,   தூய உள்ளத்தோர் விண்ணரசின் சொந்தக்காரர்கள் என்பதை இயேசு தனது மலைப்பொழிவில் கூறியுள்ளார்.

குழந்தை உள்ளமானது மன்னிக்கும் உள்ளம் என்றால் மிகையாகாது. எப்படி திட்டினாலும், கண்டித்தாலும்  சிறிது நேரத்தில் அனைத்தையும் மறந்துவிட்டு ஓடி வந்து கட்டிக் கொள்பவர்கள்தான் சிறுவர்கள்.  விண்ணகம் செல்ல   அத்தகைய  உள்ளம் கொண்டோராக நாம் மாற வேண்டும்.   

இயேசு இன்று காணாமல் போன ஓர் ஆட்டைப் பற்றியும் கருத்துரைக்கிறார். ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒரு ஆடு காணாமல் போகிறது. அவர் மீதமுள்ள 99 ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டு விட்டு, காணாமல் போனதைக் கண்டுபிடிக்கச் செல்வார்.

இங்கு, காணாமல் போனதாகச் சொன்ன ஆடு, பாவ வழியில் சென்று, கடவுளை விட்டு தூரமாக உள்ள மனிதரை குறிக்கிறது. அவன், மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படும். மனம் மாறா 99 நேர்மையானவர்களையும் குறித்த மகிழ்ச்சியை விட, மனம் மாறிய பாவியைக் கண்டே அதிக மகிழ்ச்சி உண்டாகும் என்கிறார். 

நிறைவாக, இயேசு நம்மை சிறுவர்களாக மாற அல்ல, மாறாக  சிறுவர் உள்ளம் கொண்டோராக மாறவே அழைக்கிறார். ஆகவே,  சிறுவர்களைப் போல உள்ளத் தூய்மையோடு வாழக் கற்றுக் கொள்வோம், வாழ்வுப் பெறுவோம்.


இறைவேண்டல்.

 
சிறுவர் உள்ளம் கொண்டு வாழ எமை அழைக்கும் ஆண்டவரே, எனது சொல்லிலும், செயலிலும் அன்பும் தாழ்ச்சியும் நிறைந்திருக்க அருள்புரிவீராக. ஆமென். 


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452