பொதுநலம் பேணுவோர் அருள் வாழ்வுக்குரியவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

10 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 18ஆம் வாரம் -சனி
புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி-விழா
2 கொரி 9: 6-10                                                                               

யோவான் 12: 24-26 

 பொதுநலம் பேணுவோர் அருள் வாழ்வுக்குரியவர்!


இன்று திருஅவை புனித லாரன்ஸின் விழாவைக் கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இன்று மாற்று வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாசகங்களைத் தியானிக்கும் முன்பாக, இன்றைய புனிதர் லாரன்ஸ் குறித்து சில முக்கிய விபரங்களை அறிவது சிறப்பு.

புனித லாரன்ஸ். 

இவரை உரோமை நகர புனித லாரன்ஸ் என்றும் அழைப்பர். இவர் ஒரு திருத்தொண்டர். இவர்  மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இவரது காலம் கிபி 225 – 258 ஆகும்.       

இவர் திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் என்பவரிடத்தில் திருத்தொண்டராகப் பணியாற்றினார்.  அக்காலத்தில்  (கி.பி. 254) உரோமை பேரரசை வலேரியான் என்பவன் ஆண்டு வந்தான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தான். ஆனால் பின்னர் தன் நண்பனின் தூண்டுதலால் திருஅவையின் எதிரியாக மாறினான்.  இதனிமித்தம், குறிப்பாக ஆறாம் (235-238), ஏழாம் (249-251)  வேதகலாபனை காலங்களில்  இவனும்  கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினான். 

பேரரசன் வலேரியான்   திருஅவையின்  சொத்துக்களை அவரிடத்தில்  ஒப்படைக்க திருத்தொண்டரை  வற்புறுத்திய போது, இவர் அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். இதனால்  வலேரியான் சினமுற்று, 256 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்தவன்   திருத்தந்தையையும், அங்கே இருந்த மற்ற ஆறு திருத்தொண்டர்களையும் வெட்டி வீழ்த்தினான். 

இதை நேரடியாகக் கண்ணுற்ற   திருத்தொண்டர் லாரன்ஸ்,  “திருத்தந்தை அவர்களே, உம்மைப் போன்று நானும் மறைசாட்சியாக இறக்க விரும்புகிறேன் என்றார்.  அரசன் திருத்தொண்டரிடம் திருஅவையின் சொத்துக்களைக் கேட்டபோது, அவர் இறைமக்களைக் காட்டி இவர்களே திருஅவையின் சொத்து என்றார். இதனால், அரசன் திருத்தொண்டரை ஒரு இரும்புக் கட்டிலில் படுக்க வைத்து, அதற்கு கீழே தீ  மூட்டினான். 

திருத்தொண்டர் லாரன்ஸோ எதைப் பற்றியும் கவலைப்படாது, துன்பத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். சிறுது நேரம் கழித்து, அவர் அங்கே இருந்த படைவீரர்களிடம், “என்னுடைய உடம்பில் ஒரு பக்கம் நன்றாக எரிந்துவிட்டது, இன்னொரு பக்கமும் வேகும்படியாக என்னுடைய உடலைத் திருப்பிப் போடுங்கள்” என்றார். அதன்படியே அவர்கள் அவரது உடலைத் திருப்பிப்போட்டார்கள். திருத்தொண்டர் லாரன்ஸ் அந்த கட்டிலிலேயே எரிந்து இறந்து போனார்.

இப்படியாக திருத்தொண்டர் லாரன்ஸ் கிறிஸ்துவின் போதனையின்படி   வாழ்ந்து, கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் துறந்தார் என திருஅவை வரலாறு கூறுகிறது.  இவருடைய கல்லறையின் மீது பெரிய கொன்ஸ்தாந்தின் நோபுள் என்ற மன்னன் ஒரு சிறிய ஆலயம் எழுப்பினான். அதன்பிறகு வந்தவர்கள் அந்த ஆலயத்தை மிகவும் அழகுற கட்டியெழுப்பினார்கள்.


1.  புனித  லாரன்ஸ் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரையும் துறந்தார்.
2.  புனித  லாரன்ஸ் ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்வதில்  மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார்.  

ஆகவே, புனித லாரன்சின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், நம்மால்   கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையின்  வெளிப்பாடாக நமது சொத்து, செல்வங்களை ஏழைகளோடு பகிர முன்வர  இயலுமா? அதற்கான மனம் நம்மில் உள்ளதா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
 
இன்றைய வாசகங்கள்

கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில், புனித பவுல் அடிகள்   கொடுக்கும்போது தாராளமாகக் கொடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.  அவர், ‘குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.


அத்துடன், மற்றொன்றையும் இணைத்து கூறுகிறார். ‘மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்’ எனும் கருத்தை வலியுறுத்துகிறார், மேலும், ‘இறைவன்தான்  எனக்கு தந்திருக்கிறார். இறைவனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பெற்றுக்கொண்ட இந்த கொடையை, நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.

நாம் மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக கொடுத்து வாழ்வதற்கு, ஆண்டவர்  தன்னுடைய அருள்வளத்தால் நம்மை நிரப்புவார் என்று  பவுலடியார் கூறுகிறார்.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்கிறார்.  அத்துடன், ‘தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்’ என்று போதிக்கிறார். 

தொண்டு என்பது அவரது இன்றைய நற்செய்தியின் மையச் செய்தியாக   உள்ளது.  ‘மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று அவரும் அவரது நிலையை எடுத்துரைக்கிறார். (மத்தேயு 20:28) 


சிந்தனைக்கு

இன்றைய காலத்தில்  ஒருவர் ஒரு தர்ம செயலை முன்வந்து செய்கிறார் என்றால், அவரது நோக்கம் என்ன என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. ஏனெனில், கெண்டையைப் போட்டு வராலை இழுக்கிற காலம் இது. பேருக்கும் பகழுக்கும் ‘தர்மம்’ செய்வோரும், சுய விளம்பரத்துக்கென தர்மம் செய்வோரும் மலிந்துவிட்டனர். எனவே, பாலுக்கும் கள்ளுக்கும் வேறுபாடு தெரிவதில்லை.  

செய்த தர்மம் தலைக்காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.  ஆம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். மேலும், பலன் பாரா உதவி, பலன் தராமல் போகாது. செய்த தர்மச் செயல்களைப் பட்டியல் போடவும் கூடாது. ஒரு நல்ல துறவி ‘இதையல்லாம் துறந்தேன்’ என்று பட்டியலிட்டுக்கொண்டிருக்க மாட்டார். 

ஆம், நமது செல்வத்தில்  சிறு பகுதியாகிலும் அருளுக்கு இல்லையேல், அது நம்மை இருளாக்கிவிடும். புனித லாரன்ஸ் இருந்ததெல்லாம் விற்று தேவையில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொண்டார். அவர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார்.  இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை கொள்கை. 

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். ஆம், உலகப் பற்றிலிருந்து நாம் மடியாவிட்டால் நிலைவாழ்வும்  ஒரு கேள்விக் குறியாகவே இருக்கும்.  தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் என்கிறார் ஆண்டவர்.  

இன்று நாம் போற்றுகின்ற புனித லாரன்ஸ் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரிய துறவி, கடவுளிடம் "ஆம்" என்று சொல்லும் வகையில், தனது வாழ்க்கை உட்பட அனைத்தையும் துறந்தார். இவரைப்போன்று, நமது  சொந்த கவலைகளை விட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய தன்னலமற்ற வாழ்வால் நாமும் உயர்த்தப்படுவோம். 


இறைவேண்டல்


அன்பு இயேசுவே, தன் உயிரை ஈந்து உமக்கு சான்று பகர்ந்த புனித லாரன்ஸ் போல, நானும் உமது பிறருக்காக உயிர் துறக்கும் வரத்தை எனக்கும் தந்தருள்வீராக .  ஆமென்

 

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452