செல்வச் செருக்கு சீடருக்கு ஆகாது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

09 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 18ஆம் வாரம் -வெள்ளி
நாகூம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7
மத்தேயு 6: 24-28
 

செல்வச் செருக்கு சீடருக்கு ஆகாது!


இன்றை முதல் வாசகம் நாகூம் இறைவாக்கு நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதால் நாகூமைப்  பற்றிய சில முக்கியக் குறிப்புகளை முதலில் கவனத்தில் கொள்வோம். நாகூம் என்றால்  ‘ஆறுதல் தருபவர்' என்று பொருள். அவர் யூதர்களுக்கு ஆறுதலாக இறைவாக்குரைத்தார். வட நாட்டின் மீது படையெடுத்து இஸ்ரயேலரை வீழ்த்திய  அசீரியாவின் வீழ்ச்சி மிக அண்மையில் உள்ளதாக நாகூம் இறைவாக்குரைக்கிறார். அசீரியாவின் தலைநகம் நினிவே. அடக்கு முறைக்குப்  பெயர் போன அசீரியாவின் ஆதிக்கம்  முடிவடையும் காலத்தில் நாகூமின் இறைவாக்குப் பணி தொடங்கியது எனலாம். 

கடவுள் ஒருவரே உலகின்மீதும், அதன் வரலாற்றின் மீதும் முழுமையான ஆதிக்கம் கொண்டுள்ளார் என்பதும், கடவுள் நசுக்கப்பட்டவர் மற்றும்  எளியோரின் காவலன் என்பதும் நாகூமின்  அடிப்படை போதனை.


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில்,  அசீரியாவின் தலைநகரான  நினிவேயும்  அசீரியாவும் அழிக்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்கும்போது,  யூதர்கள் கொண்ட மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாக  நாகூம் குறிப்பிடுகிறார்    

மற்ற நாடுகளை அழித்த இரக்கமற்ற  அசீரியர்களுக்கு இப்போது கேடு வரவுள்ளது.   அசீரியர்கள் பல அக்கம் பக்கம் இருந்த நாடுகளை வீழ்த்தி, அவற்றை இரத்தக்களரியாக்கிக் கொக்கரித்தனர்.  இப்போது அவர்களின் நகரம் அவர்களின் சொந்த இரத்தக்களரி மரணங்களின் இடமாக இருக்கும் என்று நாகூம் இறைவாக்குரைக்கிறார்.


நற்செய்தி. 


நற்செய்தியில்,  இயேசு தம் சீடர்கள் முன்  ஒரு நிபந்தனையை வைக்கிறார். அவரைப் பின்பற்றுவதற்காக அவருடைய சீடர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.   இன்பகரமான, ஆடம்பரமான பொழுது போக்கு மற்றும் வாழ்வுக்கு வழிகளை மட்டுமே தேடுபவர்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்கிறார் ஆண்டவர். சிலுவையை சுமக்க மனமில்லாதவர் அதாவது, துன்பத்தை ஏற்க மனமில்லாதவர் இயேசுவின் சீடராக இருக்கவே முடியாது என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

அத்துடன், உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர் என்றும்  இயேசுவின்  பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்றுகிறார். 
நிறைவாக,  மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் சொந்த  வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? என்று கேள்வியோடு முடிக்கிறார்.


சிந்தனைக்கு.


உலகில் வாழ்ந்தாலும் உலகைச் சாராத மக்களாக தம் சீடர்கள் வாழ வேண்டும் என்பது இயேசு கிறிஸ்துவின் அவா (யோவான் 17:14). கடவுளையும் சக மனதர்களையும் பார்க்க விடாமல் , நினைக்க விடாமல் அகக் கண்களை குருடாக்கிவிடும் ஆற்றல் செல்வத்துக்கும் பணத்துக்கும் உண்டு. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்.  காசேதான் கடவுள் என்ற வாழ்க்கை போலி தத்துவத்தில்   ஊறிப்போனார் பலர். செல்வம் என்பது உலக ஆசை.  அதற்கு இடமளித்து மோசம் போய்விடாதீர்கள் என்று இயேசு இன்று  எச்சரிக்கிறார். 

பங்கு மக்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக, ஆலயம் கட்டுவதற்காக அள்ளி அள்ளி கொடுக்கும் பலர் ஏழை எளியவர்க்குக் கிள்ளியும் கொடுக்கமாட்டார்கள். இவ்வாறு வழிபாட்டுக்கும் அன்றைட வழவுக்கும் சம்பந்தம்  இல்லா ஆன்மீகம் நமது ஆன்மீகமாக மாறிவிட்டது.   திருத்ந்தை பிரான்சிஸ் அவர் வெளியிட்ட ‘நற்செய்தியின் மகிழ்ச்சி' எனும் தூதுரை ஏட்டில் (எண் 27)  “ஒருவகையான தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும் நோய்க்கு திருஅவை இரையாகிவிடாமல் இருக்க அதன் அனைத்துச் செயல்பாடுகளும் நற்செய்தியில் மையமிட்டிருக்க வேண்டும்” என்றார். 

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பாரகள், என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி நாம் கவலைப்படும்போது உலக எண்ணதிற்கு அடிமையாகிறோம். பணத்தின் ஆற்றலை நம்பும் செல்வந்தர் தங்களிடமுள்ள பணம், சொத்துக்களை பெருக்குவதிலேயே கருத்தாய் இருப்பார். இயேசுவின் சீடர்களுக்கு இது தேவையற்ற ஒன்று. தேவைகளை நிறைவேற்ற  போதுமானவை கிடைத்தால் போதும், என்ற அன்றட உழைப்பில் கவனம் செலுத்துபவர்கள் நிம்மதியாக உறங்குவர்.  மற்றவர் பஞ்சனையில் படுத்துப் புறண்டாலும் தூங்கமின்றி தவிப்பர். 

முதல் வாசகத்தில்  இறைவாக்கினர் நூகூம்  பேரசைக் கொண்ட ஆசீரியாவுக்கு அழிவு நெருங்கிவிட்டதாக எச்சரிக்கிறார். ஆகவே, இன்று நமது  ஆசைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.  வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும்? உலகம் முழுவதையும் பெற வேண்டுமா? கடவுளின் திருவுளத்திற்கு உட்பட்ட வாழ்வு வாழ வேண்டுமா? 

‘இன்னொருவனை விட உயர்ந்த செல்வந்தன் நான்’ என்று எண்ணும் இயேசுவின் சீடர் யாராகிலும் அவர்  ஒரு மனநாயாளிகாகத்தான் இருக்க முடியும். செல்வந்தனுக்குக்  காசேதான் கடவுள். காசுக்காகக் கடவுளை இழக்கத் துணிவான். 
 

இறைவேண்டல்.


‘செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’ என்றுரைத்த இயேசுவே, செல்வச் செருக்கால் எனது வாழ்வு அழிவுறாமல் என்னைக் காத்தருள்வீராக. ஆமென்.


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452