இயேசுவைப் பற்றிக்கொள்வோர் வெற்றி பெறுவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

07 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன் 
எரேமியா 31: 1-714
மத்தேயு 15: 21-28

 
இயேசுவைப் பற்றிக்கொள்வோர் வெற்றி பெறுவர்!


 முதல் வாசகம்.


கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களை  பாபிலோனிலிருந்து மீட்டெடுப்பதாக  வாக்களிக்கிறார்.  கடவுள் அளித்த வாக்குறுதியைப் பற்றி  பாபிலோனுக்கு  நாடுகடத்தப்பட்டவர்களிடம் எரேமியா பேசுகிறார்.  ஒரு நாள் அவர்கள் மீண்டும் தாயகம்   திரும்புவார்கள் என்றும்  இது மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்கும் என்றும் எரேமியா அறிவிக்கிறார். 

குறிப்பாக, கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய், என்றும், மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக்கொண்டு நீ வெளியேறுவாய் என்றும்  பாபிலோனில் துன்புறும் யூதர்களுக்கு கடவுள் ஆறுதல் கூறுகிறார்.


நற்செய்தி.


நற்செய்தியில், தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார் என்று மத்தேயு கிறிப்பிடுகிறார்,  இவை கலிலேயாவுக்கு வடக்கே உள்ள நகரங்கள். அங்கு யூதர்களைக் காண இயலாது. கானானியர்கள் அதிகம் வாழும் பகுதிகள். கானானியர்கள் என்றாலே ஆபெலைக் கொன்ற  காயினின் வழிமரபினர் ஆவர். 

இயேசு, அவ்வழியே வருவதை அறிந்த ஒரு கானானியப் பெண், அவர் யூதர் என்று அறிந்தும்,  இயேசுவிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினாள். கானானியர்கள் ஒரு காலத்தில் யோசுவா தலைமையில் இஸ்ரயேலர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்ட மக்கள். சிலை வழிபாட்டில் ஊறிப்பொனவர்கள்.  எனவே, யூதர்கள் அவர்களை மதிப்பதில்லை.

இயேசு தனது மகளைக் குணப்படுத்துவதற்காக தன்னிடம் வந்த கானானியப் பெண்ணிடம் ஐயா, தாவீதின் மகனே’ என்று அவள் அழைத்தும், முதலில்  அவள் மீது பரிவு காட்டதாவர் போல பேசுகிறார்.   அவளும் இயேசுவை விட்டபாடில்லை. ஆனாலும், “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்று இயேசு அப்பெண்ணைப் புறக்கணிக்கிறார்.  இறுதியாக, ஐயா, எனக்கு உதவியருளும்”  என்று கண்ணீர்விட்ட அவளை நோக்கி, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.

இயேசுவுக்கு நல்லதொரு பதிலாக, “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றாள் அந்த தாய்.

இயேசு, அம்மா, உமது நம்பிக்கை பெரிது என்று அவளது மன்றாட்டை ஏற்றார். 


சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தியில்  இரு வித மக்கள் நம் கண்முன் தெரிகின்றனர். 

1.மேசையில் அமர்ந்து உணவு உண்போர் (உரிமைக்குரியவர்) 
2.மேசையிலிருந்து கீழே சிதறி விழுவதை உண்ணுவோர் (தாழ்த்தப்பட்டவர்)

இயேசு அன்று நிலவிய சூழலுக்கு ஏற்ப, யூதர்களை மேசையில் அமர்ந்திருக்கும் உரிமை பேறு  பெற்றவர்களாகப்  பார்க்கிறார். அந்த கானானியப் பெண்ணையோ  கீழே உள்ள நாய்களுக்கு ஒப்பாகக் குறிப்பிடுகிறார்.  கானானியர்களை நாய்களுக்கு ஒப்பாகப் பேசுவது அக்காலத்தில் யூதர்கள் மட்டில் வழக்கத்தில் இருந்த ஒன்று. 
 
இறுதியில் தன் தாழ்ச்சியாலும் விடாமுயற்சியாலும்  இயேசுவின் தயவைப் பெறுகிறாள். ஆம் கடவுளிடம் நாம் எப்படி தாழ்ந்து, பணிந்து மன்றாட வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி விவரிக்கிறது. 


இன்று நற்செய்தியில் இந்தப் பகுதியை சற்று ஆழ்ந்து சிந்தித்தால், இயேசு தீர், சீதோன் பகுதிகளுக்குச் சென்றதும், அந்த கானானியப் பெண்  இயேசுவிடம் வந்ததும்  கடவுளின் ஏற்பாடாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.   ஏனெனில், இயேசு இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே அனுப்பப்பட்டிருந்தாலும், அவர் அனைவருக்கும் மீட்பர் என்பதை இங்கே தெளிவாகிறது. மேலும், பற இனத்தவளான  அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை, பல யூதர்களைப் போலல்லாமல், இயேசுவே மெசியா என்பதில் அவள் நம்பிக்கை கொண்டாள். எனவேதான் அவள் இயேசுவை "தாவீதின் மகனே" என்று அழைத்தாள்.  

நாம் அந்த கானானியப் பெண்ணாக இருந்திருந்தால், ஆண்டவராகிய இயேசுவின் உதவியைத் தொடர்ந்து தேடும் தைரியமும் நம்பிக்கையும் நமக்கு இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
அவள் விடாப்பிடியாக இருந்தாள்.  இயேசு அவளை நாய்க்குட்டிகளுக்கு ஈடாகக்  குறிப்பிட்ட போதும்   இயேசுவிடம் உதவி பெற வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறாள்.  அவள் இயேசுவைப் பற்றிக் கொண்டாள், வெற்றிப் பெற்றாள்.

இறைவேண்டல்.


‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது’ என்று, கானானியப் பெண்ணை பாராட்டிய ஆண்டவரே, இறைவேண்டுதலில் இருக்க வேண்டிய விடாமுயற்சியில் நானும் நிலைத்திருக்கச் செய்வீராக.  ஆமென். 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452