புறக்கணித்தால் புறக்கணிப்பு, அரவணைத்தால் அரவணைப்பு! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

02 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 17ஆம் வாரம் -  வெள்ளி
எரேமியா 26: 1-9
மத்தேயு  13: 54-58

 
புறக்கணித்தால் புறக்கணிப்பு, அரவணைத்தால் அரவணைப்பு!  


முதல் வாசகம்.

 
 முதல் வாசகத்தில் ஓர் இறைவாக்கினர் மக்கள் மத்தியில் எதிர்நோக்கும் துன்பங்களை  மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்படுகிறோம்.  இது யோயாக்கிம் அரசருடைய  ஆட்சியின் காலம். இன்னும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் யூதேயா பாபிலோனியர்களால் தாக்கப்படவுள்ளது.  கடவுள் எரேமியாவை அழைத்து, எருசலேம் ஆலயத்தின் முன் நின்று   அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதேயாவின்   எல்லா நகர மக்களிடமும்   கடவுள் பக்கம் திரும்புமாறு அறிக்கையிடுமாறு பணிக்கிறார்.

எரேமியாவும் அவ்வாறு ஆலயத்தின் முன் நின்று அறிக்கையிட்டு, யூதர்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.  யூதர்கள் மனமாறினால் கடவுளின் தண்டனையில் தப்பிக்கலாம் என்று உரக்கக் கூறினார். 

ஆனால், எரேமியா அறிவித்த  கடவுளின் வார்த்தையை ஏற்க மறுத்த  மக்கள், அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதை விட, அவரைத் தீரத்துக்கட்டுவது எளிதானது என்று முடிவு செய்தனர். எரேமியா சொந்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில் இயேசுவும் எரேமியாவைப் தம் மக்கள் மத்தியில் எதிர்ப்பை எதிர்கொள்கிறார்.   தன்னுடைய சொந்த ஊருக்குக் வந்து போதிக்கும் இயேசுவைப் பார்த்து, முதலில் வியக்கும் மக்கள், “இவர் தச்சருடைய மகன் அல்லவா?”, “இவருடைய தாய் மரியா என்பவர்தானே?” என்று புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இயேசுவின் பெற்றோர் யார் என்றும், அவருடைய உறவினர் யார் என்றும் தெரிந்திருந்ததால் இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் தானே என முடிவுசெய்துவிடுகிறார்கள். 

ஆக, இயேசுவைப் பற்றிய ''வியப்பு'' ஒருபுறம், அவரைப் பற்றித் நமக்கு எல்லாம் தெரியுமே என்னும் அலட்சியப் போக்கு மறுபுறம் - இவை நாசரேத்து மக்களின் கண்களை மறைத்துவிட்டன. எனவேதான்,  இயேசு, அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை என்று மத்தேயு குறிப்பிடுகிறார். 


சிந்தனைக்கு.


இறைப்பணியாளர்கள் சொந்த மக்களால் புறக்கணிக்கப்படுவதை இன்றைய இரு வாசகங்களும் முன்வைக்கின்றன.  எரேமியாவை ‘நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்' எனக் கூச்சலிட்டதோடு,  கொல்ல முயற்சிக்கின்றனர். இயேசுவை ஏற்க மறுக்கின்றனர். இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் புறக்கணித்ததற்குக் காரணம், அவருடைய போதனையல்ல.   அவருடைய குடும்பப் பின்னணி. அவரது , பின்புலம், உடன்பிறந்தோர், தந்தையின் தொழில் போன்றவற்றின் அடிப்படையில்  இயேசு ஊரார் பார்வையில் தகுதியற்றவரானார்.    இன்றும்கூட நாம் ஒருவருடைய வெளியடையாளம், அவருடைய குடும்பம், சமூகப் பின்னணி, கல்வித் தகுதி,  வீடு வாசல், வாகனம் ஆகியவற்றைக் பார்த்தே அவருடனான உறவைத் தீர்மானிக்கிறோம்.  

நாசரேத்தில் இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும், நம்பாமலும் போனதால், அவர் அவர்களிடம் தொடர்ந்து வல்ல செயல்களை அவர்  செய்யவில்லை.  ஆம். இயேசுவை நாம் புறக்கணித்து, அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்கின்றபொழுது நாம்தான் பெரிய இழப்பை அடைகிறோம்  என்பதைச் சிந்திக்க வேண்டும்.  

சொந்த ஊர் மக்களை அவர்களே ஏற்றுக்கொள்ளாதபோது, ஊர் இரண்டுபடும். ஊர் இரண்டுபட்டால் அது அந்நியருக்குக் கொண்டாட்டம்.   அவ்வாறே சொந்த பங்கு மக்களை நம் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் போதுதான் பங்கின் வளர்ச்சியைக் காண முடியும்.  கடவுளின் வாக்கை அறிவித்த இறைவாக்கினர் எரேமியவும் இயேசுவும்  யூதர்கள். எனவே, யூதர்கள் அவல்கள்மேல்  அன்பு செலுத்தியிருக்க வேண்டும். அவர்கள்  அறிவித்த வார்த்தையில் உண்மை இருக்கிறதா? என்றுதான் அவர்கள்  எண்ணிப்பார்த்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மேல்  குற்றம் பார்த்தலும்  குறைகூறலும்தான் மிஞ்சியது. 

சில வேளைகளில் நமது சொந்த விட்டிலும்  குடும்பங்களிலும்  கூட  ஒருவருக்கு   மதிப்பு இருப்பதில்லை. இவனுக்கு அல்லது இவளுக்கு  என்ன தெரியும்? என்னை விட அதிகம் படித்தவனா, படித்தவளா?  என்றெல்லாம் மட்டம் தட்டி பேசுவதுண்டு.   ஒருவர் செய்யும் வேலை, வருமானம் இவற்றை வைத்தும் தரக்குறைவாகப் பேசுவதுண்டு. சிலரை வீட்டில் நிகழும் கொண்டாடங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், அவர்களுக்கு நாகரீகமாக உடுத்தத் தெரியாது. 

இயேசு, இத்தகையோருக்கு நல்ல பாடம் கற்பிக்கிறார். தன்னை ஏற்காத அந்த ஊர் மக்களைவிட்டு போகிறார். ஆம், ‘உன்னை மதிப்பவர்களிடம் நீ தாழ்ந்து பேசனும், உன்னை மிதிப்பவர்களிடம் நீ வாழ்ந்து பேசனும்' என்பார்கள். தன்னை புறகணித்தவர்களிடம் வாழ்ந்து பேசவே இயேசு அங்கிருந்து புறப்படுட்டுப் போனார்.  


இறைவேண்டல். 


உம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இயேசுவே, அத்தகையக் கூட்டத்தில் நானும் ஒருவராக இருந்திடாமல்,  எங்கும் எப்போதும் உம்மை  வெளிப்படுத்தும்  சீடராக வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென். 


இன்று எனது துணைவியார்   ‘மரியம்மாள்’ அவர்களின் 34-ம் ஆண்டு நினைவுநாள். அவரது ஆன்ம இளைப்பாற்றிற்காக வேண்டிக்கொள்ள வேண்டுகிறேன்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452