குயவன் (கடவுள்) கரங்களில் களிமண் நாம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

01 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 17ஆம் வாரம் - வியாழன்
எரேமியா 18: 1-6
மத்தேயு  13: 47-53 
 

குயவன் (கடவுள்) கரங்களில் களிமண் நாம்!


முதல் வாசகம்.

 
கடவுள் அவர்தம் எண்ணைத்தை நமக்கு வெளிப்படுத்த பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்.  அவற்றுள் ஒன்று  மனிதன் பயன்படுத்தும் அன்றாட பொருள்கள். அவ்வாறே, இன்று ‘களிமண்' கொண்டு எரேமியாவுக்கு நல்லதொரு செய்தியை விவரிக்கிறார்.   தமது செய்தியை எடுத்துரைக்க தம்மை குயவனாகவும் அவர் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் மக்களைக் களிமண்ணாகவும் ஒப்பிட்டு பேசுகிறார்   

குயவனுக்கும் களிமண்ணுக்கும் உள்ள உறவைப் பற்றி   ஏசாயாவும் கூறியிருக்கின்றார் (45:9)    களிமண் என்பது மனிதர்களுக்குப் பயன்படுத்த பொருத்தமான அடையாளப் பொருள் எனலாம்.   ஏனெனில் களிமண் என்பதற்கான எபிரேய (Hebrew) வார்த்தை அதாமா (adamah). இச்சொலிலிருந்துதான் தொடக்க நூலில் மனிதனுக்கு  "ஆதாம்" என்ற பெயர் வந்தது.

முதல் வாசகத்தில் கடவுளின் சொல்லுக்குப் பணிந்து எரேமியா ஒரு குயவர் வீட்டுக்குச் சென்று, 
குயவன் களிமண்ணால் மண்பாண்டங்கள் வனையப்படுவதைப் பார்க்கிறார்.  குயவர் தம் கையால் செய்த மண்பாண்டங்கள்   சரியாக அமையாதபோதெல்லாம், அதே களிமண்ணை மீண்டும் பிசைந்து, அவற்றை தம் விருப்பப்படி வேறொரு மண்பாண்டமாக வடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டவர் எரேமியாவிடம்,   அந்த  குயவன் சரியாக வனைக்கப்படாத பானைகளை   மீண்டும் பிசைந்து வேறு ஒன்று செய்வது போல் கடவுளும் ஏன் இஸ்ரயேலருக்குச் செய்ய முடியாது என்ற கேளவியைக் கேட்டு, அந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போலவே  இஸ்ரயேலரும் கடவுள்  கையில் இருக்கின்றார்கள் என்கிறார்.


நற்செய்தி.


விண்ணரசைப் பற்றிய இயேசுவின் விளக்கம் இன்றும் தொடர்கிறது. புதையல், முத்து  ஆகிய இரு பொருள்களை விண்ணரசுக்கு ஒப்பட்டதைப்போல், இன்று  ஆண்டவர் இயேசு கடலில் வீசப்பட்ட வலை உவமையைப் பற்றி பேசுகிறார். கடலில் வீசப்படும் வலை எல்லா வகையான மீன்களையும் இழுத்துக்கொண்டு வரும். கரைக்கு வந்தபிறகு  மீனவர் நல்ல மீன்களையும் வேண்டாத மீன்களையும் பிரித்து,  நல்லவற்றை  கூடைகளில் போட்டுவிட்டு,   வேண்டதவற்றை  வெளியே தூக்கி எறிந்துவிடுவர்  என்கிறார். அது போன்றுதான் உலக முடிவிலும் நல்லவர்கள் விண்ணகத்திற்கும்  தீயவர்கள் நரகத்திற்குமாக  பரித்தெடுக்கப்படுவார்கள்  என்று உரைக்கிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில், குயவன் மற்றும் அவர் வனையும் மண்பாண்டம் உருவகத்தைப் பற்றி சிந்திக்கும்போது  ஒரு முறை கோல சிலாங்கூர் பகுதியில் ஒரு  குயவர்  களிமண்ணைப்  பிசைந்து, சுழற்சி  இயந்திரத்தால் அழகான பானைகளை வனைவதைப் பார்த்து மகிழ்ந்தேன். சில வேளைகளில் அவரது விருப்பப்படி அழகாக உருவாகாதப் பானையை மீண்டும் பிசைந்து, அதே களிமண்ணால் வேறு பானை செய்வதை நேரில் கண்டேன். அது அற்புதமான கைவினை. அவர் அந்த பானைகளை வனையும்போது அவரது முகத்தில் மகிழ்ச்சியைத் தவிற வேறெதையும் நான் பார்க்கவில்லை.

கடவுள் குயவன் என்றும், நாம் களிமண் என்றும், நாம் கடவுளின் கைவேலை என்றும் சிந்திக்கையில் பெருமைபட வேண்டும்.  ஆகவே, குயவனாக தம்மை வெளிப்படுத்தும் கடவுள் நம்மை அவரது விருப்பப்படி  வடிவமைக்கவும்  உருவாக்கவும் அனுமதிக்க வேண்டும்.  சில வேளைகளில் நாம் கடவுளின் திட்டத்திற்கு மாறாக நடந்து கொண்டாலும்,  கடவுள் பொறுமையாக நம்மை மீண்டும் வடிவமைத்து சிறந்த மகனாக, மகளாக  உருவாக்க தயாராக இருக்கிறார் என்பதை இன்றைய வாசகம் உணர்த்துகிறது.
 
இன்றைய நற்செய்தியில்   காலத்தின் இறுதியில் நல்லது மற்றும் கெட்டது என்று பிரிக்கும் கருத்தை மீண்டும் நம்முடன் இயேசு வலியுறுத்தியப் பின், இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?  என்று இயேசு தம்  சீடர்களிடம்  கேட்க, சீடர்கள், “ஆம்'' என்றார்கள் என மத்தேயு குறிப்பிடுகிறார். 

விண்ணரசு நமது கண்களுக்குப் புலப்படாத ஒன்று. அதை விவரித்து கூறுவதற்கு இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். அறிந்தவற்றைக் கொண்டு அறிய இயலாதவற்றை விளக்குவதற்கு உவமைகளே சிறந்த உபகரணங்கள். 

இயேசு பன்னிருவரிடம் கேட்ட ‘இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?’ என்ற கேள்வியை இன்று நம்மிடமும் கேட்கிறார்.   நாம் விவிலியத்தை  வாசிக்கும்போது, கடவுள் வெளிப்படுத்தும் செய்தியை நாம் அறிந்துணர முயற்சிக்கிறாமா? கடவுள் நம்மில்   என்ன விரும்புகிறார் என்பது நமக்குப் புரிகிறதா?  

சில சமயங்களில் வேண்டா வெறுப்போடும்  கடமைக்காவும் மறைநூலை வாசிக்கிறோம். இறைவார்த்தை திருப்பலியில் அறிக்கையிடப்படும்போது,  அலைப்பேசியில் புலனச் செய்திகளை (வாட்செப் மெசெச்)  வாசிக்கிறோம்.  அங்கும் இங்குமாகத் திரும்பி கவனத்தைச் சிதறடிக்கிறோம். விதை விதைப்பவர் உவமையில் கண்டதைப்போல் நமது உள்ளம் நல்ல நிலமாக இருப்பதில்லை. எனவே, ‘இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?’  என்று இயேசு கேட்க, நம்மால், “ஆம்'' என்று மனதாரக் கூற முடிவதில்லை.  அலகை நம்மோடு ஒட்டிக்கொண்டுதான் உள்ளான்.

இன்றைய நற்செய்தி இறுதி தீர்ப்பு நாளில் நமக்கு நிகழவுள்ளதை விவரிக்கிறது. நாம் ஆண்டவர் வனைந்த நல்ல மண்பாண்டங்களாக அவரால் தேர்ந்துகொள்ளப்படுவோமா? அல்லது உடைந்த பாண்டமாக நரகத்தில் வீசி எறியப்படுவோமா?  நேர்மையாளர்கள் மட்டுமே தீர்வை நாளில் மதிக்கப்படுவார்கள்  என்பது திண்ணம்.  

நிறைவாக, குயவனின் கையையும் களிமண்ணையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஏனெனில், களிமண் தனக்குத்தானே பலன் தரமுடியாது. அது குயவனின் கரங்களால் தான் ஓர் அழகிய பாண்டமாக மாறுகிறது. அவ்வாறே, கடவுள் கரங்களில் இருக்கும் போதுதான் நாம் விண்ணரசுக்கான மக்களாக உருமாற்றம் பெற முடியும். 

இறைவார்த்தை.


ஆண்டவராகிய இயேசுவே, உம் திருக்கரங்களில் களிமண் நான். உமது திருவுளப்படி என்னை வனைந்தருள்வீராக. ஆமென்.  

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452