கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாகச் செய்யத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 29 செவ்வாய்
மு.வ: உரோ: 5: 12, 15b, 17-19. 20b-21
ப.பா: திபா 40: 6-7, 7b-8. 9. 16
லூக்: 12: 35-38
கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாகச் செய்யத் தயாரா?
"செய்வனத் திருந்தச் செய்" என்பது வள்ளுவன் வாக்கு. நமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை மனசாட்சிக்குப் பயந்து முழு ஆர்வத்துடன் செய்யும்போது வேலையும் வெற்றியாய் முடியும். அது நமது மனதிற்கும் ஒரு நிறைவைத் தரும். அதைவிடுத்து ஏதோ கடமைக்கு செய்யும் மனநிலையோடு செய்யும் போது நமக்கு சங்கடங்களே மிஞ்சும். ஆம் அன்புக்குரியவர்களே நம்மை கடைமையை கருத்தாய் விழிப்புடன் ஆற்றும் பணியாளர்களாய் வாழ நம் ஆண்டவர் இயேசு அழைக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் தலைவருக்காக காத்திருந்து பணிவிடை புரியும் பணியாளரை நமக்கு எடுத்துக்காட்டாகக் கூறி அவரைப் போலவே நம்மையும் வாழ அழைக்கிறார். அந்தப் பணியாளரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
முதலாவதாக அவருடைய கடமை உணர்வு. தன் தலைவரை கவனிப்பது தனக்குக் கொடுக்கப்பட்ட கடமை என்பதை உணர்ந்த அவர் அவருக்கு பணிவிடை புரிய காத்திருக்கிறார். இதைப்போல நம்முடைய பணிகளைச் செய்வதில் நாம் எப்போதும் கடைமை உணர்வு மிக்கவர்களாய் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக தயார்நிலை. தன் தலைவர் வெளியே சென்றிருக்கிறார் என எண்ணி மெத்தனமாக இல்லாமல் அவருடைய வருகையை எதிர்பார்த்து தயார் நிலையில் இருக்கிறார். அதைப்போல நாமும் நமது மெத்தனப்போக்குகளைக் களைந்து எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பணியாளருக்கு கிடைக்கும் பரிசையும் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறியுள்ளார்.
தன்னுடைய பணியாளரின் ஆர்வத்தையும் தயார்நிலையையும் காணும் தலைவர், தன் பணியாளருக்குப் பணிவிடை புரிவார் என்று கூறியுள்ளார். அன்புக்குரியவர்களே நாம் வாழும் இவ்வுலகில் நாம் எவ்வளவு சிறப்பாகப் பணிபுரிந்தாலும் நமது உரிமையாளர்களோ அல்லது முதலாளிகளோ நமக்கு நிச்சயம் பணிவிடை புரியப்போவதில்லை. ஆனால் இறையாட்சி விழுமியங்களை நம் மனதிலே கொண்டு நமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை நாம் கடைமை உணர்வோடும் தயார் மனநிலையோடும் செய்யும் போது ஆண்டவர் இயேசு நமக்குக் கைமாறு அளிப்பார். எனவே நமக்கு கொடுக்கப்பட்டவை எத்தகைய பணியாக இருந்தாலும் ஆர்வத்தோடும் கடமை உணர்வோடும் இறைமகிமைக்காய் செய்ய கற்றுக்கொள்வோம். இறையாசிர் பெறுவோம்.
இறைவேண்டல் :
அன்பு இறைவா! எமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாகச் செய்யவும், இறையாட்சிக்காய் கடமை உணர்வோடும் தயாரான மனநிலையோடும் பணிபுரியவும் வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்