சுயத்தை இழந்து நிலைவாழ்வைப் பெறுவோமா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 8 செவ்வாய்
I: சீஞா: 35: 1-12
II: திபா :50: 5-6. 7-8. 14,23
III:மாற் :10: 28-31
இழத்தல் என்பது பல நேரங்களில் துன்பத்தைப் போல தெரியும். ஆனால் நம் வாழ்வில் இழத்தல் சுகமானது. மரம் தன் ஆற்றலை இழந்தால்தான் பூ பூக்கும். பூ தன்னுடைய தன்மையை இழந்தால் தான், அது காயாக மாறும். காய் தன் தன்மையை இழந்தால் தான், அது பழமாக மாறும். பழம் உணவாக மாறினால்தான், அது மனிதனுக்கு ஆற்றலாக மாறுகிறது. அந்த ஆற்றல் தான் அந்த மனிதனை இயக்க வைக்கின்றது.
நம்முடைய வாழ்வில் இழத்தல் சுமையல்ல; மாறாக, இழத்தல் நம் வாழ்வில் சுகமானது. யாரெல்லாம் தன்னுடைய வாழ்வில் தன்னிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொண்டு இவ்வுலகம் சார்ந்த பொருட்களைப் பிறர் வாழ்வு நலம் பெற இழக்கிறார்களோ, அவர்களுக்கு இன்னும் அதிகமாக அனைத்தும் கொடுக்கப்படும்.
இன்றைய நற்செய்தியில் இழத்தலின் மேன்மையை ஆண்டவர் இயேசு வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். இக்கேள்வி சீடர்களின் இவ்வுலகம் சார்ந்த எதிர்பார்ப்பை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் ஆண்டவர் இயேசு , ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்'' என்றார்.
நம் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிற பொழுது, இழப்புகளும் துன்பங்களும் வருவது இயல்பு. ஆனால் அந்தத் துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக ஆண்டவரைப் பின்பற்றும் பொழுது, கடவுளின் நிறைவான ஆசீர்வாதத்தைப் பெற முடியும். ஆண்டவர் இயேசு விட்டுச்சென்ற இறையாட்சி பணியை நாம் ஒவ்வொருவரும் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். பிறர் நலத்தோடு பிறர் வாழ்வு நலம் பெற நம்மிடம் இருப்பதை இழக்கும் பொழுது, கடவுளின் ஆசீர்வாதத்தை இரட்டிப்பாக பெறமுடியும். இழத்தலில் சுகம் காண வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! இழத்தலில் சுகம் காணும் நல்ல மனநிலையைத் தாரும். பிறரின் வாழ்வு வளம் பெற எங்களால் முடிந்ததை பிறருக்காக இழக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Daily Program
