நான் யார்? என் தொடக்கம் எது? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -நான்காம் வாரம் வெள்ளி 
I: சாஞா: 2:1, 12-22
II: திபா: 34: 16-17, 18-19, 20, 22
III: யோவா:  7: 1, 2, 10, 25-30

தன்னிலை அறிந்தவனின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதே பல தத்துவ மேதைகளின் கருத்து. பொதுவாக நம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நம்மைப் பற்றி அறிமுகம் செய்யச் சொன்னால் குறைந்த பட்சம் நாம் கூறுவது, நமது பெயர், பெற்றோர் விவரம், இருப்பிடம், கல்வி தகுதி, வேலை,சில குணாதிசயங்கள் ஒருசில திறமைகள், விருப்பு வெறுப்புகள் மற்றும் எதிர்கால ஆசைகள் போன்றவற்றை கூறுவதுண்டு. "நான் " என்ற ஒருவரின் அடையாளம் இதற்குள் அடங்கி விடுமா? இல்லை.

இவை ஒரு புறமிருக்க சில வேளைகளில் பிறர் நம்மைப்பற்றி கூறும் சில கருத்துக்களைக் கொண்டு இது தான் நான் என நமக்கு நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்கிறோம். பல சமயங்களில் அவை நேர்மறையாக இருக்கும்.சில சமயங்களில் அவை எதிர்மறையாக இருக்கும். ஆகவே "நான்" என்பது பிறருடைய கருத்துக் கணிப்பின் தொகுதியும் அல்ல.

இவ்வுலகில் வாழும் எவராலும் தன்னைத் தானே முழுமையாய் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் அறிந்து கொள்ள முயற்சித்தோமெனில் நமது வாழ்வை நாமே சீர்படுத்திக் கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் இயேசு தன் நிலையை முழுவதும் உணர்ந்தவராய் இருந்ததை நாம் காண்கிறோம். தன்னைப் பற்றி புற அறிவைத் தாண்டி தான் யார்? தான் எங்கிருந்து வந்துள்ளேன்? தன் பணி என்ன? என்பதை அறிந்திருந்தார் இயேசு. தந்தையிடமிருந்து வந்ததால் தந்தையைப் போலவே வாழ்ந்தார். தந்தை செய்தவற்றையே செய்தார். அதை எவ்வித தயக்கமுமின்றி அறிக்கையிட்டார். 

என்னதான் நமக்கு பூவுலக பூர்வீகம் இருந்தாலும் விண்ணுலக பூர்வீகத்தின் படி நாமும் தந்தையிடமிருந்துதானே வந்துள்ளோம். கடவுளின் பிள்ளைகள் நாம் என பெயரளவில் மட்டுமே சொல்லும் நாம் அது தான் நம் உண்மை நிலை என இன்னும் உணரவில்லை என்பதே உண்மை. அதை உணர்ந்தால் நாம் எப்படி வாழ வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை தந்தையே நமக்கு உணர்த்துவார். இறைவேண்டல் செய்வோம். தந்தையை இயேசுவைப் போல நாடுவோம். தந்தையின் பிள்ளைகளாய் நம் நிலை உணர்ந்து வாழ்வோம். 

இறைவேண்டல் 
தந்தையே! நாங்கள் உம்மிடமிருந்தே வந்துள்ளோம் என்பதை உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்