தாயும் தந்தையுமான இறைவனின் அன்பை அனுபவிப்போமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -நான்காம் வாரம் புதன் 
I: எசா:  49: 8-15
II: திபா: 145: 8-9. 13-14. 17-18
III: யோவா:  5: 17-30

இன்றைய வாசகங்கள் இறைவனைத் தாயாகவும் தந்தையாகவும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அம்மையப்பனாக நம்மீது அளவுகடந்த அன்பைக் கொண்டிருக்கும் இறைவனை நாம் நினைவுகூர்ந்து அவரிடம் சரணடைய நம்மை இன்றைய வழிபாடு அழைக்கிறது.

இறைவன் ஒரு நாள் ஒரு பெண்ணிடம் உனக்கு என்ன வரம் வேண்டும்  எனக் கேட்டாராம். அப்பெண் சற்றும் யோசிக்காமல் என் குழந்தைகள் எல்லா வளத்துடனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வரம் கேட்டாராம். பெண்மையின் சிறப்பே தாய்மை. ஒரு தாயானவள் தன்னைவிட தன் குழந்தைகளின் நலனைக் குறித்து கவலை கொள்பவள். எந்த தாயும் தன் குழந்தைகள் கஷ்டப்படுவதை விரும்பமாட்டார். எத்தனை வயதானாலும் தாய்க்கு தன்குழந்தை சிறுபிள்ளைதான். அப்படிப்பட்ட தாயே தன் பிள்ளையை மறந்தால் கூட நான் மறக்க மாட்டேன் என்று ஆண்டவர் எசாயா இறைவாக்கினர் மூலம் கூறுகிறார்.தன் மக்கள் மேல் கருணை காட்டி, வெயிலும்,பனியும்,பசியும், தாகமும், எதிரிகளும் தாக்காதவாறு பாதுகாப்பாக ஒரு தாய் தன் பிள்ளைகளை வழிநடத்துவதைப் போல வழநடத்துவேன் என ஆறுதல் மொழி கூறுகிறார் இறைவன்.

தெய்வங்களெல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே என்ற பாடல் வரிகள் ஒரு அப்பாவின் பாசத்தைச் சித்தரிக்கிறது. தந்தையானவர் வெளியே கரடு முரடாய்த் தோன்றினாலும் தன் உள்ளத்தில் குழந்தைகளின் மீது அளவற்ற பாசமுடையவராய் இருப்பார். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தன் குழந்தைகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பவர் தந்தை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணகக் கடவுளை தனது தந்தையெனக் கூறி தந்தை தான் விரும்பியவர்களுக்கெல்லாம் வாழ்வளிப்பது மகனும் வாழ்வளிப்பார் என உறுதியாய்க் கூறுகிறார்.

இன்றைய பதிலுரைப்பாடலும் கூட "ஆண்டவர் கனிவும் இரக்கமும் கொண்டவர் " என்ற திருப்பாடல் வரிகளைத் தியானித்து தாயின் அன்பையும் தந்தையின் பரிவையும் ஒருசேரக் கொண்டிருக்கும் இறையன்பை ஆழமாக அனுபவிக்க நம்மை அழைக்கின்றது. 

இறையன்பைப் பற்றி பேசுவது நமக்குப் புதிதல்ல. இறையன்பைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அனுபவித்திருக்கிறோமா? ஒரு சிறு துளியேனும் அவரன்பை அனுபவித்திருந்தால் துன்ப துயர வேதனை நேரங்களில் இறைவன் இருக்கிறாரா என்ற சந்தேகம் நமக்கு எழவே எழாது என்பது தான் உண்மை. நம் வீட்டில் நம்முடைய தாய் தந்தையின் அன்பை நாம் அனுபவிக்கிறோம். அவர்களைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் நம் தாய் தந்தையின் வழியாய் நம்மை நேசிப்பது கடவுள் என்பதை உணர்வோம்.அவ்வனுபவம் நம்மை இறைவனை நம்பச்செய்யும். அந்த நம்பிக்கை நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்லும். நம்மைப் பாவ வாழ்விலிருந்து விலகச் செய்யும். எனவே இக்கருத்துக்களை உள்வாங்கி இறையன்பை அனுபவிக்க வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்
தாயும் தந்தையுமான இறைவா! உமது அன்பை ஆழமாக அனுபவித்து, நிலைவாழ்வு பெறவும் நாள்தோறும் நம்பிக்கையில் வளரவும் வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்