அன்பினில் இறைவனைக் காண்போமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -மூன்றாம் வாரம் வெள்ளி 
I: ஓசே:  14: 1-9
II: திபா: 81: 5-7. 7-8. 9-10. 13,16
III: மாற்:  12: 28b-34

ஒரு வசதியான குடும்பம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருத்தலத்திற்குப் திருப்பயணம் செல்வது வழக்கம். ஒருமுறை ஒரு திருத்தலத்திற்குத் திருப்பயணமாக சென்றனர். தங்களுடைய நேர்த்திக் கடனை முழங்கால் படியிட்டு செலுத்துவதற்கு முன்பாக,  உணவு அருந்தலாம் என அமர்ந்தனர். அவர்கள் குடும்பமாக உணவு உட்கொண்ட பொழுது, ஒரு வயதான தாய் உணவு தருமாறு கேட்டார். அந்த குடும்பத் தலைவர் அந்த வயதான தாயை உதாசீனப்படுத்தினார் . உணவு தர முடியாது என்று சொல்லித் திட்டி அனுப்பினார். இதை ஒரு அருள்சகோதரி பார்த்துக் கொண்டிருந்தார்.அந்த வயதான தாயாரைப் பின்பற்றி பார்த்த பொழுது, அவர்  அங்குள்ள முடக்குவாதமுற்ற தன் கணவருக்குத்தான்  உணவு கேட்டுள்ளார் எனத் தெரிய வந்தது. உடனே அந்த அருள்சகோதரி வருத்தமுற்றவராய், முதியோர் காப்பகத்திற்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். நேர்த்திக் கடனை செலுத்திக் கொண்டிருந்த அந்த குடும்பத்தினரை அந்த அருள்சகோதரி பார்த்து "நீங்கள் இந்த நேர்த்திக்கடனை செலுத்தியது கடவுளுக்கு அருவருப்பானது "என்று கோபத்தோடு கூறினார். உடனே அந்த குடும்பத்தினர் அந்த அருள்சகோதரியிடம், "ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்? " என்று கேட்டார்.  அதற்கு அவர் "நீங்கள் உணவு உண்ணும் பொழுது, ஒரு வயதான பாட்டி, உங்களிடம் உணவு கேட்டார். ஆனால் நீங்கள் உணவு கொடுக்காமல் அவரை திட்டி அனுப்பி விட்டீர்கள். அவர் உணவு கேட்டது ஒரு வயதான முடக்குவாற்ற தந்தைக்குதான். நீங்கள்  உங்களிடம் வருபவர்களை அன்பு செய்யாமல், உதாசீனப்படுத்தினால் கடவுளின் அன்பை முழுமையாகச் சுவைக்க முடியாது. ஏனெனில் இறையன்பும் பிறரன்பும் ஒன்றை ஒன்று தொடர்புடையது  " என்று கூறினார்.   இவற்றைக் கேட்ட அந்த குடும்பத்தினர் மனம் வருந்தி அந்த வயதான தாயிடம் மன்னிப்பு கேட்டனர்.

உண்மையான அன்பு என்பது கடவுளை அன்பு செய்வது மட்டுமல்ல ;மாறாக,  கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களையும் அன்பு செய்வதாகும். நான் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட இருக்கின்றேன். நான் என்னுடைய குருத்துவ விருதுவாக்காக "மனித சேவையில் புனிதம் காண " என்பதைத் தெரிவு செய்துள்ளேன். இதற்கு முக்கிய காரணம் உண்மையான புனிதம் என்பது நம்முடைய செபத்தினால் மட்டுமல்ல; மாறாக,  மனித சேவை வழியாகவும் பிறரன்பு பணிகள் வழியாகவும்  புனிதத்தை அனுபவிக்கலாம் என்பதை என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். இதைத்தான் எண்ணற்ற புனிதர்கள் தங்கள் வாழ்வில் வாழ்ந்திருக்கின்றனர். உதாரணமாக கூறினோமென்றால், புனிதர்களான  அன்னை தெரசா,  வின்சென்ட் தே பவுல், மார்ட்டின், தமியான், மற்றும் ஜான் போஸ்கோ. இவ்வாறாக புனிதர்களுடைய வரிசைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே இன்றைய நாளில் நற்செய்தி வாசகம் இக்கருத்தை நம்மை சீரிய முறையில் சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது.

நற்செய்தியில் மறைநூல் அறிஞர்கள் ஒருவர் இயேசுவிடம்  "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? " என்று கேட்டார்.  அதற்கு இயேசு,...'உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக...
உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்றார்'' (மாற்கு 12:28-31). இறையன்பு பிறரன்பு இவை இரண்டும் இரண்டு கண்களைப் போன்றது. ஒன்றை ஒன்று தொடர்புடையது. கண்ணால் காணக்கூடிய மனிதரை அன்பு செய்ய முடியாதவர், நிச்சயமாக கடவுளை அன்பு செய்ய முடியாது. இன்றைய கால அறிவியல் உலகில் நம் அயலார் யாரெனவும்,அவரின் பெயர் கூடத் தெரியாத நிலையிலும் வாழுகிறோம் என்பது வேதனைக்குரிய நிலை. நான் ,எனது என்ற கூட்டுக்குள் வாழ்வதால் அயலாரையும் நாளடைவில் கடவுளையுமே மறக்கும் நாம் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்வது சாத்தியமா? நமது எனவே கூட்டுக்குள் இருந்து வெளிவந்தால் சாத்தியம். நம்முடைய சின்னச் சின்ன பிறரன்புச் செயல்கள் வழியாக, மனித நேயம் காக்கும் செயல்பாடுகள் வழியாக அயலாரை அன்புசெய்வோம். அதுவே கடவுளை அன்பு செய்வதற்குச் சமம். எனவே அன்றாட வாழ்வில் மனித சேவையின் வழியாக இந்த உலகம் கடவுளின் அன்பை முழுமையாக அறிந்துகொள்ள தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! நீர் எங்களை அன்பு செய்வது போல, நாங்களும் பிறரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்யத் தேவையான அருளைத் தாரும்.   பிறரன்பின் வழியாக உம்முடைய அன்பை முழுமையாக சுவைக்க நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்