சுயநலத்தை அகற்றுவோமா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - இரண்டாம் செவ்வாய்
I: எசா: 1: 10, 16-20
II: திபா: 50: 8-9. 16-17. 21,23
III: மத்: 23: 1-12
இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக தங்களைக் காட்டிக் கொண்டனர். சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் அடித்தட்டு மக்களின் வாழ்வின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். கடினமான பளுவை மக்கள் மீது சுமத்தினார். மறைநூலைக் கரைத்துக் குடித்தவர்கள் போல, போதனைகள் பல செய்தனர். ஆனால் அவர்களுடைய வார்த்தைக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தன. எனவே ''இயேசு, 'மறைநூல் அறிஞரும் பரிசேயரும்...செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்.
ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்" (மத்தேயு 23:2,3) என்று கூறினார். இதற்குக் காரணம் அவர்களின் சுயநலம். அவர்கள் சுயநலத்திற்காக மக்களைத் தவறாக வழிநடத்தி ஆதாயம் தேடினார்கள். அவற்றிலிருந்து முற்றிலும் விலக வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருமுறை ஒரு கல்லூரியில் ஆசிரியர் மாணவர்கள் வருங்காலத்தில் மது அருந்தக்கூடாது என்று அறிவுரை கூறினார். மது அருந்தினால் தன் வாழ்வும் குடும்ப வாழ்வும் சமூக வாழ்வு பாதிக்கப்படும் என்று பல உதாரணங்களைக் கூறி அறிவுரை கூறினார். இப்படி அறிவுரை கூறிய அந்தப் பேராசிரியர் ஒவ்வொரு நாளும் தன் வீட்டின் வாசல்படியை மாலை வேளையில் மது அருந்தாமல் மிதிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மது அருந்தி தனது குடும்பத்தினருக்கு இடையூறாக இருந்தார்.
இப்படித்தான் ஊருக்கு உபதேசம் சொல்லும் எத்தனையோ நபர்கள் தங்களுடைய வாழ்வில் எதையும் கடைபிடிப்பதில்லை. இதைத்தான் இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் சிறப்பான போதனைகள் செய்தாலும், தங்கள் வாழ்வில் ஒன்றை கூட கடைப்பிடிக்காதவர்களாக வாழ்ந்தனர். இதை ஆண்டவர் இயேசு விமர்சனம் செய்யும் விதமாக அவர்கள் செய்வதைப் போல செய்யாதீர்கள் என கூறுகிறார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் பல நபர்களுக்கு பல நல்ல அறிவுரைகளைக் கூறுகிறோம். பிறரும் சமூகமும் மாற வேண்டும் என்று கருத்துக்கள் பல சொல்லுகிறோம். ஆனால் பல நேரங்களில் அதை நாம் கடைபிடிக்க மறந்துவிடுகிறோம். இப்படிப்பட்ட கூற்றை நாம் கைவிடுவது கடவுளுக்கு உகந்த வாழ்வாகும். நம்முடைய சுயநலத்திற்காக இறைவனின் வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. இறைவனின் வார்த்தையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யக்கூடாது. ஏனெனில் இறைவனின் வார்த்தை உயிருள்ளது; ஆற்றல் வாய்ந்தது. எனவே அவற்றை ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வாக்க வேண்டும். வாழ்வாக்கி பெற்ற இறை அனுபவத்தை நம்முடைய அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தும் விதமாக அதைப் பிறருக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய வாழ்வு ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த வாழ்வாக மாறும். எனவே நம்முடைய சுயநலத்தைக் களைந்து பொது நலத்தோடு வாழ ஆண்டவரின் வார்த்தையை வாழ்ந்து, அதை பிறருக்கு நற்செய்தியாக கொடுக்க முயற்சி செய்வோம். நம்முடைய சொல்லும் செயலும் இணைந்து செல்லத் தேவையான அருளை இறைவனிடம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இயேசுவே! எங்களுடைய சுயநலத்தை களைந்து எந்நாளும் உம்முடைய வார்த்தையை வாழ்வாக்கி, வாழ்வாக்கிய இறைவார்த்தையை பிறருக்கு அறிவித்திட வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்