பிறருக்கு நன்மை செய்வோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - முதல் வியாழன்
I: எஸ் (கி) 4: 17 ம-அ, ச-வ
II: திபா 138: 1-2. 2,3. 7-8
III: மத்: 7: 7-12
மனித வாழ்க்கையில் பல நேரங்களில் எல்லோரும் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான பார்வை அல்ல. அதேபோல எல்லோரும் நமக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்ற எண்ணமும் சரியான பார்வை அல்ல. எல்லோரும் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியான பார்வை அல்ல. எல்லோரும் நம்மை மதிக்க வேண்டும் என்பது சரியான பார்வை அல்ல. எல்லோரும் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்பது சரியான பார்வை அல்ல. பிறகு எது சரியான பார்வை?
அதற்கான பதிலைத் தான் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு வெளிப்படுத்தியுள்ளார். "பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்ற இறைவார்த்தை தன்னலம் கருதாது பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனநிலையை வலியுறுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையில் பிறர் மாற வேண்டும் பிறர் உதவ வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் முதலில் மாற வேண்டியது நாம்தான். பிறருடைய குறைகளைக் கண்டுபிடித்து விமர்சனம் செய்வது எளிது. ஆனால் நம்முடைய குறைகளை ஏற்று நாம் நம்முடைய பாதையைச் சிறப்பாக அமைப்பது சவாலான ஒன்று.
நாம் வாழும் இந்த சமூகத்தில் தேவையற்ற பிரச்சினைகளுக்குக் காரணம் எதிர்பார்ப்பு. நாம் பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறோமோ, அவற்றை பிறருக்கு செய்வோம். பிறர் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், முதலில் நாம் பிறருக்கு உதவி செய்வோம். ஒரு முறை ஜென் மத குருவிடம் "நிறைவோடு வாழ வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? " என்று சிலர் கேட்டனராம். அதற்கு " உன் மனது உனக்கு நலம் பயக்கும் என எவற்றையெல்லாம் கருதுகின்றதோ, அவற்றை செய்" என்று சொன்னாராம். அவ்வாறே செய்த சிலருடைய வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் காணப்பட்டதாம். எனவே நம்முடைய வாழ்வில் பிறரைத் தேடிச் சென்று நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முயற்சி செய்வோம். பிறர் நமக்கு செய்ய விரும்புவதை மனதில் கொண்டு பிறர் வாழ்வு வளம் பெற நம்மாலான உதவிகளைச் செய்வோம். புனித அன்னை தெரசா எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தனக்கு எவையெல்லாம் நன்மை என தோன்றியதோ, அவற்றைப் பிறருக்கு செய்து மனித சேவையில் புனிதம் கண்டுள்ளார்.
தவக்காலத்தில் பயணிக்கும் நம்மை ஆண்டவர் இயேசு பிறருக்கு நன்மை செய்பவர்களாக வாழ அழைக்கிறார். நாம் பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க, நமக்கு அனைத்தும் நிறைவாக கிடைக்கும். நாம் பிறரிடமிருந்து எடுக்க எடுக்க நம்மிடம் உள்ளதும் ஒவ்வொன்றாகச் சென்றுவிடும். கொடுப்பதில் தான் உண்மையான நிறைவு இருக்கின்றது. எனவே பிறர் நமக்கு செய்ய வேண்டும் என்பதை விட்டுவிட்டு, நம்மால் இயன்ற நல்ல பணிகளைச் செய்ய முயற்சி செய்வோம். தன்னலம் கருதாது பொது நலத்தோடு உழைக்க முன்வருவோம். ஆண்டவர் இயேசுவைப் போல சென்ற இடமெல்லாம் நன்மைகள் பல செய்ய முயற்சி செய்வோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம். பிறர் வாழ வேண்டும் பிறர் உதவ வேண்டும் பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் பிறர் அன்பு செய்ய வேண்டும் என்ற மனநிலையை விட்டுவிட்டு, நாம் பிறரை முழுமையாக அன்பு செய்து சிறப்பான வாழ்வு வாழ்ந்திட நல்ல மனநிலையை வேண்டி இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
ஆண்டவரே ! பிறரிடமிருந்து எதிர்பார்ப்பைக் குறைத்து, நன்மையானதைப் பிறருக்கு எந்நாளும் செய்திடத் தேவையான நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்