தீய வழிகளை விட்டு விலகத் தயாரா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - முதல் புதன்
I:யோனா:3: 1-10
II: திபா:51: 1-2. 10-11. 16-17
III: லூக்: 11: 29-32
ஒரு இளைஞன் குடிநோய்க்கு அடிமையாகி தன் வாழ்க்கையை ஒவ்வொருநாளும் இழந்து கொண்டிருந்தான்.அந்த இளைஞனால் வீட்டில் தினம்தோறும் பிரச்சினை. ஒருமுறை போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்ற அவன் நூலிழையில் பெரிய விபத்திலிருந்து தப்பினான். நிதானத்திற்கு வந்த பிறகு தான் தனக்குள் சிந்தித்தான் தன் தாய் பல முறை தன்னிடம் போதையில் வாகனம் ஓட்டாதே என்று சொன்னதை. இந்த நிகழ்வு அவனுக்கு பெரிய மனமாற்றத்தை தந்தது. குடியை நிறுத்தினான். இழந்த தன் வாழ்வை மீண்டும் பெறத் தொடங்கினான்.
யாரும் இவ்வுலகில் தீயவர்களாக பிறப்பதில்லை. நம்முடைய ஒருசில பலவீனங்களின் காரணமாக தீயவற்றை உள்வாங்கி அவை தீயவை என்ற உள்ளுணர்வு இல்லாமலேயே அத்தீய வழிகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். திடீரென நமக்கென்று பாதிப்புகள் வரும்போதுதான் இச்செயலை நான் செய்திருக்கக்கூடாது என்ற உணர்வு நம்முள் வருகிறது. கண்களை விழித்துப்பார்க்கிறோம்.
இப்படித்தான் பாவத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த நினவே மக்கள் தாங்கள் பாவ நிலையில் இருப்பதை உணரவேயில்லை, இன்னும் நாற்பது நாளில் தங்கள் நகரம் அழிந்துவிடும் என்ற சேதி கேட்கும் வரை. நினவே மக்களிடம் உள்ள சிறப்பு என்வென்றால் கடவுள் கொடுக்கவிருக்கும் தண்டனையைப் பற்றி கேட்டவுடன் அவர்கள் மனம்மாறி செபத்திலும் தவத்திலும் நிலைத்திருந்தது. எந்த அளவுக்கு அவர்கள் மனம் மாறினார்கள் என்றால் கடவுளே தன் மனதை மாற்றிக்கொண்டு தண்டனைத் தீர்ப்பை விலக்கினார். ஆம் நினவே மக்கள் தீய வழிகளை விலக்கியதால் வரவிருந்த தீமை அவர்களை விட்டு விலகியது.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களுக்கு மீட்பின் வரலாற்றில் கடவுள் புரிந்த அளப்பெரிய செயல்கள் தெரிந்திருந்தும் உண்மையான மனம்மாற்றம் கொள்ளாமல் கல்நெஞ்சத்தினராய் இயேசுவிடம் அடையாளம் கேட்டனர். எனவே இயேசு அவர்களை நினைத்து வருந்துகிறார்.
நம்முடைய அன்றாட வாழ்விலே நாமும் ஒருசில தீய வழிகளுக்கு அடிமைகளாக இருக்கிறோம். அவற்றால் நாம் சில சமயங்களில் துன்பப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் தப்பித்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவற்றை நாம் பாடங்களாக ஏற்றுக்கொண்டு தீய வழிகளை விலக்கினால் வரவிருக்கும் தீமையிலிருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள இயலும். எனவே மனம்மாறி தீமையை விலக்கி இறை இரக்கத்தைப் பெற இறையருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! இரக்கமுள்ளவரே!நாங்கள் தீய வழிகளை விலக்கி உம் இரக்கத்தைப் பெற வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்