இறையாட்சியின் வித்துக்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின் மூன்றாம் வெள்ளி
I: எபி: 10: 32-39
II: திபா 37: 3-4. 5-6. 23-24. 39-40
III: மாற்: 4: 26-34

இத்தனை சிறிய விதையிலிருந்து எத்தனை பெரிய மரம் வந்தது என்கிறது ஒரு அழகான பாடல் வரிகள். சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு விதையும் அதிலிருந்து வளர்கின்ற செடியோ அல்லது மரமோ, கொடியோ விசித்திரமானதே. இவ்வாறு ஒரு விதை வளர்ந்து மரமாக உருமாற பல சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. 

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."(யோவான் 12:24) என்ற இறைவார்த்தைக்கேற்ப
விதையானது முளைத்து வளர்வதற்கு அது மடிவது மிக அவசியம். அது மடியும் போது தான் புதிய முளை தோன்றும். அவ்வாறு தோன்றிய முளை தரையை முட்டி முளைப்பதற்குள் கற்களையும் முட்களையும் தாண்டி, வளைந்து கொடுத்து வெளிவர வேண்டும். வெளிவந்த பின்னரும் மாறுகின்ற தட்பவெப்ப நிலை, வளமை, வறட்சி என அனைத்தையும் சகித்துக்கொண்டு வளர வேண்டும். இத்தனை கடினப்பாடுகளுக்கிடையிலும் அதன் வேரும் ஆழமாக வளர்ந்து பூமியில் தன்னை நிலைநிறுத்த வேண்டும். பின் தான் அவ்விதை மரமாகவோ செடியாகவோ உருமாற முடியும்.

இன்றைய நற்செய்தியில் இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பிடப்படுகிறது. சிறிய கடுகு விதையானது நாம் மேற்கூறிய எல்லா சோதனைகளையும் கடந்து மரமாக உருவெடுக்கும் போது பறவைகள் தங்குமளவிற்கு பெரியதாகவும் பயனுள்ளதாகவும் மாறுகிறது.
இது நமக்குச் சுட்டிக் காட்டும் செய்தி என்னவென்றால் இறையாட்சிக்காக நாம் உழைக்கும் போது நாமும் இத்தகைய இன்னல்களையும் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும் என்பதே. இருப்பினும் அவற்றை சகித்துக் கொண்டு நாம் தொடர்ந்து உழைக்கும் போது நிச்சயமாக நாம் இறையாட்சியின் வித்துக்களாய் வாழ முடியும். இறைவனை நம் மூலம் பலர் உணர முடியும். 

இன்றைய முதல் வாசகத்தின் மூலம் பிரச்சினைகளைக் கண்டு பின்வாங்காத மக்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.எத்தகைய சூழ்நிலையிலும் கிறிஸ்துவிடம் நம்பிக்கையும் நேர்மறையான எதிர் நோக்குடன் வாழும் மக்களாய் வாழ்ந்து இறையாட்சிக்காக உழைக்கும் மக்களாய்த் திகழ இறையருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பின் இறைவா! இன்னல்களையும் இடையூறுகளையும் கண்டு பின்வாங்காமல் எதிர் நோக்குடன் இறையாட்சியை உலகில் விளைவிக்கும் வித்துக்களாக வாழ அருள் தாரும். ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்