பயனுள்ள வார்த்தைகளைப் பேசுவோம்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் - முதல் செவ்வாய் 
I: எசா: 55: 10-11
II: திபா 34: 3-4. 5-6. 15-16. 17-18
III: மத்:   6: 7-15

தவக்காலம் என்பது மனமாற்றத்திகான காலம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மனமாற்றத்தை நாம் எவ்வாறெல்லாம் நமதாக்கலாம் என சிந்தித்தால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சின்னச் சின்ன விஷயங்களை முழு விழிப்புணர்வோடு நாம் சரியானதாக மாற்றினாலே நமக்குள் நல்ல மனமாற்றம் நிகழும். நேற்றைய நாளில் அடுத்திருப்போரை எந்தெந்த வகைகளிலெல்லாம் அன்பு செய்யலாம் என தியானித்தோம். இன்று நம்முடைய சொற்களை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றி மனமாற்றத்தை உணரலாம் என சற்று தியானிப்போம். 

"ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் " என்பார்கள். சொற்களுக்கு பலமுண்டு. சக்தி உண்டு. அது நேர்மறையாகவும் இருக்கும்.  எதிர்மறையாகவும் இருக்கும். பயன்படுத்துபவரை பொறுத்தே அது அமையும். உதாரணமாக காலையில் உங்கள் பணித்தளத்தில் நீங்கள் பார்க்கும் நபரிடம் "Good morning. Have a good day!"  என்று சிரித்த முகத்துடன் வாழ்த்தி பாருங்கள். அது அவர்களுக்கு அந்த நாளுக்கான உற்சாகத்தை கொடுக்கும். துன்பத்தில் இருக்கும் உங்கள் நண்பரிடம் நான் இருக்கிறேன் என்று சொல்லும் போது அவர்களின் மனப்பாரம் குறையும். அதே நேரத்தில் யாராவது பிறரைப் பார்த்து "நீ நல்லாவே இருக்கமாட்ட " என்று சொன்னாலோ அல்லது துன்பத்திலிருப்பரைப் பார்த்து "அவனுக்கு இதெல்லாம் தேவைதான் " என்று சொன்னாலோ அது அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்மறை உணர்வுகளையும் மனவலியையும் உண்டாக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் விண்ணகத்தந்தை தன்னுடைய வார்த்தையின் வலிமையைக் கூறுகிறார். மழை மண்ணுக்கு வந்து பலன் தராமல் திரும்பாது. அதைப்போல விண்ணகத்தந்தையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்கு பலன் தராமல் போகாது.  அப்படி இருக்க அவருடைய பிள்ளைகளாகிய நாம் பேசும் வார்த்தைகள் அவருடைய வார்த்தைகளை ஒத்திருக்க வேண்டாமா?

நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு நம்முடைய இறைவேண்டலில் அடங்கியுள்ள வார்த்தைகள் கூட மிகைப்படுத்துவதாக அல்லாமல் பிதற்றக் கூடியதாக அல்லாமல் நம் உள்ளத்து உண்மைகளை சொல்லக்கூடியதாக எளியவையாக அதே நேரத்தில் கடவுள் எனக்கு அருளையும் மன்னிப்பையும் தருவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்று கூறி தன் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுத் தருகிறார் என்பதை வாசிக்கிறோம்.  இத்தவக்காலத்தில் நம்முடைய சொற்களில் நல்ல மாற்றகங்ளைக் கொணர முயல்வோம்.  இறைவனிடம் பேசும் போதும் ,சக மனிதரிடம் பேசும் போதும் நமது சொற்கள் எளியவையாக, இனியவையாக, பயனுள்ளவையாக இருக்கட்டும்.மேலும் முழு விழிப்புணர்வோடு பிதற்றக்கூடிய, பிறரைப் புண்படுத்தக்கூடிய ,பயனற்ற வார்த்தைகளைப் பேசுவதை தவிர்ப்போம். இவை நம் வாழ்வில் பல பிரச்சினைகள் வராமல் தடுக்கும். 

இதை செய்ய இறைவார்த்தையை நாள்தோறும் ஆர்வத்தோடு வாசித்து தியானிக்க முயற்சி எடுப்போம்.

இறைவேண்டல் 
அன்பு இறைவா! எங்கள் வார்த்தைகள் உமது வார்த்தைகளைப் போல இனியவையாய் பயனுள்ளவையாய் மாற எம் நாவுகளை ஆசிர்வதித்தருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்