உள்ளிருந்து தூயவற்றை வெளிப்படுத்துவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 5 புதன்
I: தொநூ: 2: 4b-9,15-17
II: திபா 104: 1-2. 27-28. 29-30
III: மாற்: 7: 14-23

 ஒரு ஊரில் இரண்டு நபர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். ஒருவரின்  வியாபாரம் மிகச் சிறப்பான வெற்றியையும் இலாபத்தையும் தந்தது.அவர் நாளுக்கு நாள் பொருளாதாரத்திலும் வாழ்வின் பிற படிநிலைகளிலும் வளர்ந்துகொண்டிருந்தார். மற்றவரின் வியாபாரம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது.அந்த வியாபாரத்தைப் பெருக்க பல குறுக்கு வழிகளையும் அவர் கையாளத் தொடங்கினார். ஆயினும் பயனில்லை. எனவே அவருடைய மனதில் மற்றவரைப் பற்றி பொறாமையும் வஞ்சகம் நிறைந்த எண்ணங்களும் பெருகத் தொடங்கின. வியாபாரத்தின் தோல்வி அவருடைய வாழ்வையும் தோல்வியின் பாதைக்கே அழைத்துச் சென்றது.  வியாபாரத்தில் வெற்றி கண்ட  அந்த நபரைப் பார்த்து "எவ்வாறு உங்களால் இவ்வளவு தூரம் வியாபாரத்தில் வெற்றி அடைய முடிகிறது? "என்று கேட்டார் அந்த பின்தங்கிய நபர். அதற்கு  வெற்றி அடைந்த அந்த நபர் "என் வெற்றியின் அடிப்படை நேர்மறையானதும் தூய்மையானதுமான  எண்ணங்கள் மற்றும் முயற்சிகள்   " என பதிலளித்தார்.  

உளவியல் அறிஞர்கள் நேர்மறையான ,தூய எண்ணத்திற்கு அதிக சக்தியுள்ளது  எனக் கூறுகின்றனர். எண்ணத்திற்கு ஆக்கவும் அழிக்கவும் சக்தியுண்டு. நம்முடைய எண்ணம் நேர்மறையாகவும் தூயதாகவும்  இருக்கின்ற பொழுது, நம் வாழ்வும் நேர்மறையாகவும் தூயதாகவும் இருக்கும். நம்முடைய எண்ணம் எதிர்மறையாக அசுத்தமாக இருக்கின்ற பொழுது, நம் வாழ்வும் எதிர்மறையாகவும் அசுத்தமாகவும் இருக்கும்.  நம்முடைய வாழ்வு நேர்மறையாகவும் தூயதாகவும் இருப்பது நமது கையில் தான் உள்ளது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம். 

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் படைப்பை பற்றி வாசிக்கின்றோம். கடவுளின் படைப்பு நேர்மறையானது.நல்லது. தூயது. ஏனெனில் கடவுள் தான் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார்.  தன்னுடைய உருவிலும் சாயலிலும் மனிதனைப் படைத்து கடவுள் அவரின் மூச்சுக்காற்றை ஊதி மனிதனுக்கு உயிர் கொடுத்தார். இதற்கு முக்கிய காரணம் நாமும் அவரைப் போல உள்ளிருந்து நல்லவற்றை நேர்மறையானவற்றை தூயவற்றை வெளிக்கொணர வேண்டும்   என்பதற்காகவே. கடவுளும் ஒவ்வொருவரின் வாழ்வை பொறுப்புள்ளதாக  வாழ நன்மை மற்றும்  தீமையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மனிதனுக்கு கொடுத்துள்ளார்.  இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறுதியில் ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம்  "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும்  உண்ணாதே ; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் "  (தொநூ: 2: 17) என்று கட்டளையிட்டு சொன்னதை   நாம்  வாசிக்கின்றோம்.   

நாம் வாழ்வை பெறுவதும் நாம் கடவுளின் அருளை இழப்பதும் நம்முடைய. உள்ளத்தில் உள்ளவற்றை பொருத்தும் செயல்பாட்டைப் பொருத்தும் தான் அமைந்துள்ளது. நம் உள்ளம் தூய்மையாக இருக்கின்ற பொழுது நம்முடைய செயல்பாடும் தூய்மையாக இருக்கும். இதைத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து " மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும் " எனக் கூறியுள்ளார்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம் எண்ணத்தையும் உள்ளத்தையும் தூய்மையாக்குவோம். நம்முடைய செயல்பாட்டில் தூய்மையான வாழ்வை வாழ்வோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

 இறைவேண்டல்
தூய்மையுள்ள இறைவா! நாங்கள் எந்நாளும் தூய வாழ்வுக்கு சான்று பகர எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும். அதற்கு தேவையான தூய ஆவியின் வல்லமை தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்