உங்கள் இதயத்தை விருத்தசேதனம் செய்யுங்கள்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
மு.வா: இச: 10: 12-22
ப.பா: திபா: 147: 12-13. 14-15. 19-20
நவ: மத்: 17: 22-27
இன்றைய முதல் வாசகத்தை நாம் சற்று ஆழமாக தியானிப்போம். கடவுள் இஸ்ரயேல் மக்களை எந்த அளவுக்கு ஆழமாக அன்பு செய்தார், அடிமைத்தளையிலிருந்து மீட்டார் என்பதன் சுருக்கம் இது. அவருடைய உள்ளம் அவர்கள் மீது அன்பால் எரிந்தது. பதிலுக்கு, கடவுள் அவரை நேசிக்கவும், அவருக்கு சேவை செய்யவும், அவருடைய கட்டளைகளை பின்பற்றவும் மட்டுமே கேட்கிறார். ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடவுள் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டனர். அவர்கள் கடவுளின் அன்பை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். சிறிய காரியங்களுக்கு கூட அவர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தனர். அவர்கள் தங்கள் நம்பிக்கையில் பின்தங்கியிருந்தனர்.
அதனால்தான் மோசே இஸ்ரயேல் மக்களிடம் அவர்களின் இதயங்களை விருத்தசேதனம் செய்ய வேண்டும் மற்றும் வணங்கா கழுத்துடையவர்களாய் இருக்கக்கூடாது என்று கூறினார். இதயத்தை விருத்தசேதனம் செய்வது என்றால் என்ன? கடவுளுடைய எல்லையற்ற அன்பை உணர்வதற்கு தேவையற்ற அனைத்தையும் இதயத்திலிருந்து நீக்குவதே அவ்விருத்தசேதனம். ஆம் இஸ்ரயேலர் தங்கள் நம்பிக்கையின்மை, முணுமுணுப்பு மனப்பான்மை, பிடிவாதம் நன்றியற்றத்தன்மை போன்றவற்றை தங்கள் இதயத்திலிருந்து அகற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இவற்றையே கடவுள் நம்மிடமிருந்தும் எதிர்பார்க்கிறார். ஏனென்றால் அவர் இஸ்ரயேல் மக்களை நேசித்தது போல நம் அனைவரையும் நேசிக்கிறார்.
உண்மையில் கடவுளை நேசிப்பதும் அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதும் நமக்கு நன்மை அளிக்கிறது. இதை உணர்ந்து நம் இதயங்களை விருத்தசேதனம் செய்வோம். எப்போதும் கடவுளை நேசிப்போம். அவருக்கே பணிவிடை செய்வோம். நம்முடைய கழுத்துகள் அவர் முன் வணங்கட்டும்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உமது எல்லையற்ற அன்பால் எங்கள் இதயங்களை விருத்தசேதனம் செய்யும். நாங்கள் உமது அன்புக்கு தகுந்தவர்களாய் வாழ்ந்து உமக்கே பணிவிடை புரிய வரம் தாரும். ஆமென்.