மனக் கண்களைத் திறப்போம்! ஐயம் தவிர்ப்போம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம் முதல் வாரம் வியாழன்
I: திப: 3:11-26
II: திபா :8:1, 4, 5-6, 7-8
III:லூக்: 24: 35-48
ஒரு வீட்டிலே தாய் தந்தை மகன் என மூவர் வசித்து வந்தனர். அந்தப் பையன் படிப்பிலே சற்று பின் தங்கி இருந்தான். இதனால் அவனுடைய தந்தை இந்தப் பையன் மேல் எப்போதும் கோபத்தையே வெளிப்படுத்துவார். இதனால் அந்தப் பையன் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகினான். தன் தாயின் உதவியுடன் ஒருமுறை சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண் வாங்கினான். இம்முறை தந்தை தன்னைப் பாராட்டுவார் என நம்பிக்கையோடு வந்த பையனுக்கு காத்திருந்ததோ அதிருப்தியும் வேதனையும். ஏனென்றால் அவன் தந்தைக்கு இந்தப்பையன் படித்து இத்தனை மதிப்பெண் வாங்கியுள்ளான் என்ற நம்பிக்கையே இல்லை. அவன் விடைத்தாளை வாங்கிப் பார்க்கக் கூட மறுத்துவிட்டார். அவன் யாரையாவது பார்த்து எழுதியிருப்பான் என்று கூறிவிட்டு அந்தப் பையன் மனதை மிகவும் காயப்படுத்தினார். தன் தந்தை தன்னை நம்பாததைக் கண்டு மிகவும் மனம் வருந்தினான் அப்பையன்.
வாழ்க்கையில் சில சமயங்களில் யாரையும் நம்பத்தோன்றாததற்கு காரணம் நாம் பெற்ற அனுவங்கள். அதற்காக நாம் யாரையுமே நம்பக்கூடாது என்பதல்ல. எல்லாரையும் சந்தேகப்பட வேண்டியமும் அவசியமில்லை. அவ்வாறு நம்கண்முன் நடக்கின்றவற்றை நாம் நம்பத் தயங்கினால் கடவுளையும் நம்ப நாம் தயங்கிக்கொண்டே இருப்போம். இத்தகைய ஐயத்தை நம்மிடமிருந்து அகற்ற நாம் நம் மனக்கண்களைத் திறக்க வேண்டும். நம் அனுபவங்களை ஆராய வேண்டும். இதைத்தான் இன்றைய இரு வாசங்களும் நமக்குக் கூறுகின்றன.
நற்செய்தி வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் சீடருக்குத் தோன்றிய நிகழ்வு நமக்குத் தரப்பட்டுள்ளது. கல்லறையில் இயேசுவின் உடலைக் காணவில்லை எனப் பெண்கள் கூறியஉடனே பேதுருவும் யோவானும் சென்று அப்பெண்கள் சொன்னாவாறே இருக்கக் கண்டனர். ஆயினும் அவர்களால் நம்ப இயலவில்லை. எம்மாவுஸ் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சகோதரர்களின் கூற்றையும் நம்பவில்லை. இயேசுவே நேரடியாக வந்த போதும் நம்பவில்லை. ஆவி என நினைத்தார்கள். அவர்களை நம்பவைக்க இயேசு தன் கைகளையும் கால்களையும் காட்டினார். சாப்பிட ஏதாவது உள்ளதா எனக் கேட்டு வாங்கி சாப்பிட்டு தான் உயிர்த்ததை எண்பிக்க வேண்டியதாயிற்று. மேலும் அவர்கள் மனக்கண்களைத் திறக்க ஐயத்தை நீக்க இயேசு மறைநூலை மீண்டுமாக விவரிக்க வேண்டியதாயிற்று.
இதைப்போலவே முதல் வாசகத்திலும் பேதுரு மக்களிடம் இயேசுவைக் குறித்த நற்செய்தியை அறிவித்து அவர்களுடைய சந்தேகங்களைப் போக்க உழைக்க வேண்டியதாயிற்று. ஆம் சகோதர சகோதரிகளே இயேசுவின் இறப்பு சீடர்களை முடக்கிப்போட்டு அவர்கள் மனதை இருளடையச் செய்ததால் அவர்களால் இயேசுவின் உயிர்ப்பை எளிதில் நம்ப முடியவில்லை. சந்தேகம் அவர்கள் கண்களை மூடியது. நம் வாழ்க்கையிலும் இத்தகைய நிகழ்வுகள் இருக்கும். நம்முடைய சில கசப்பான அனுபவங்கள் மனதை இருளடையச்செய்யும்.நம்பிக்கையின்மையை உருவாக்கும். அவற்றையும் தாண்டி நம் மனக்கண்களைத் திறக்க வேண்டுமானால் நம் வாழ்விலே கடவுள் தந்த பல நல்ல அனுபவங்களை நாம் திருப்பிப் பார்க்க வேண்டும். அதே போல நம் சக சகோதர சகோதரிகளையும் சந்தேகக் கண்கொண்டு பாராமல் நம்பிக்கையோடு பார்க்கவும் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் வாழ்வில் இறைஅருளை அதிகமாக அனுபவிக்க இயலும். மனக்கண்களைத் திறந்து ஐயத்தை நீக்கத் தயாரா?
இறைவேண்டல்
நம்பிக்கையின் நாயகனே! இருளடைந்த எம் மனக்கண்களைத் திறந்து, ஐயம் தவிர்த்து உயிர்ப்பின் மக்களாய் வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்