மனிதரையல்ல கடவுளையே நம்புவோம்! அவர் நம்மை மாட்சிப் படுத்துவார்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -புனித வாரம் செவ்வாய்
I:எசா:  49:1-6
II: திபா 71: 1-2,3-4,5-6,15,17
III:யோவா:  13:21-33,36-38

ஒரு மனிதர் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாராம். அவரைக் காணச் சென்ற நண்பர் "ஏன் அழுகிறாய்? " என வினவினார்.  தன் அலுவலகத்தில் தன்னுடைய மேலாளர் செய்த ஒரு தவறுக்கு தான் உடந்தையாக இருந்ததாகவும் அது வெளியே தெரிந்த உடன் அவர் அனைத்து குற்றத்தையும் தன்மேல் சுமத்திவிட்டு அவர் தப்பித்துக்கொண்டதாகவும் கூறினார். பின் அந்த மேலாளரை நம்பி ஏமார்ந்து விட்டதாகவும் அவர் துரோகம் செய்தது மிகவும் வருத்தமாய் இருக்கிறது என்று சொல்லி வருந்தினார். அதற்கு அந்த நண்பர் " மேலாளர் உனக்கு துரோகம் செய்யவில்லை. உனக்கு நீயே துரோகம் செய்துவிட்டாய். தவறு எனத் தெரிந்தும் அதை செய்தாய். அதற்கான வலியை நீ அனுபவிக்கிறாய். இனிமேல் யாரையும் நம்பாதே. மனசாட்சியோடு நல்ல மனநிலையோடு வாழ்ந்தால் அதற்கான பரிசு நிச்சயம் கிடைக்கும் "என்று சொல்லி ஆறுதல்படுத்தினார்.

காட்டிக்கொடுத்தல், நம்பியவரை ஏமாற்றுதல், துரோகம் இவையெல்லாம் மலிந்து கிடக்கின்ற உலகம் இது. இந்த காலத்தில் மட்டுமல்ல. இயேசு வாழ்ந்த காலத்திலும் அப்படித்தான். அதிகாரம், பெருமை, பதவி,சொத்து இவற்றிற்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணியும் மனிதர்கள் பலர். தனக்கு ஆதாயம் கிடைக்கிறதென்றால் யாருடைய பெயரையும் கெடுக்க தயங்காத குணம் இன்று நம்மிலும் கூட உள்ளது அல்லவா! நேற்றுவரை ஒரு கட்சியில் தொண்டன் தொண்டன் என தொண்டை கிழிய பேசியவர்கள் இன்று அதே கட்சியை மற்றவரோடு சேர்ந்து நார் நாராய் கிழிக்கும் அவல நிலை நம் நாட்டில் உண்டல்லவா. கூடவே இருந்து குழிபறிக்கும் குணம் இன்று யாரையும் விட்டுவைக்கவில்லை.

இயேசுவின் வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது. தன்னோடு கூட இருந்தவன் இன்று தன்னையே காட்டிக்கொடுக்கத் துணிந்தான்.  தனக்காக உயிரைக் கொடுப்பேன் என்றவன் தன்னை யாரென்று தெரியாது என மறுதலித்தான். இத்தனையையும் அனுபவித்த பிறகும் கடவுள் என்னை மாட்சிப்படுத்துகிறார் என எவ்வாறு இயேசுவால் கூறமுடிந்தது? ஏனென்றால் அவர் முழுமையாக நம்பியது கடவுளையே. மனிதர் தன்னைத் தூற்றினர் என்ற வேதனை அவருக்குள் இருந்தாலும், கடவுள் முன் தான் மதிப்பு மிக்கவன் ;அவர் தன்னை அவருடைய பணிக்காகத் தேர்ந்துள்ளார்; தன்னைக் கைவிட மாட்டார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவரை மாட்சிப்படுத்தியது.

எனக்கு துரோகம் செய்துவிட்டார்களே! என்னைக் காட்டிக்கொடுத்து விட்டார்களே! நான் ஏமார்ந்து விட்டேனே!  என கண்ணீரோடு கலங்குகிறோமா ......நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். நம்முடைய நம்பிக்கையை அவர்களிடமிருந்து இடம் மாற்றி கடவுளிடம் வைக்க வேண்டும். வலி இருக்கும். வேதனைகள் இருக்கும். ஆயினும் நம்மிடம் உள்ள இந்த நம்பிக்கையும் நல்ல மனநிலையும் நம்மை நிச்சயம் மாட்சிபடுத்தும். உணர்வோம். அத்தோடு பிறரை மறுதலிக்காத காட்டிக்கொடுக்காக ஏமாற்றாத மனிதர்களாய் நாமும் வாழ்ந்து கடவுளை மாட்சிப்படுத்துவோம்.

இறைவேண்டல் 
அன்பு இறைவா! மனிதர்களை நம்பாமல் உம்மையே நம்பி நாங்களும் மாட்சிபெறவும் உம்மை மாட்சிப்படுத்தவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்