அரசனின் ஆணவம்.... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

முற்காலத்தில், ஓர் அரசனும் துறவியும் நெருங்கிய நண்பர்களாகப் பழகிவந்தனர். அரசன் துறவியை அடிக்கடி தனது அரச மாளிகைக்கு அழைப்பான். துறவியும் நல்ல ஆலோசனைகளை வழங்குவார். அவர் கொடுக்கும் ஆலோசனைகளும், ஆசீர்வாதமும் அரசனுக்கு நாட்டை நல்லாட்சி செய்ய மிகவும் உதவியாக இருந்தது.

துறவி கடவுள் பக்தி உள்ளவர். உண்மையைத் துணிவுடன் எடுத்துக் கூறுவார். உண்மையைக் கூறுவதில் எவருக்கும் அஞ்சமாட்டார். ஒருநாள் அரசனிடம், அவர் மகன் செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டினார் துறவி "பணத்தை வீண் செலவு செய்கிறான். தீய வழியில் சென்று கொண்டிருக்கிறான். அவனைத் திருத்தவில்லையென்றால் இன்னும் ஒரு வருடத்தில் இறந்துவிடுவான்' என்றார். அரசனுக்கு ஒரே மகன், செல்லமாக வளர்க்கப்பட்டான். அவனை திருத்த முடியவில்லை.

துறவி கூறியபடியே அரசனுடைய மகன் ஒரு வருடத்தில் இறந்துவிட்டான். அரசன் மிகவும் மனம்வருந்தி, தனக்குப்பின் நாட்டை யார் ஆள்வார்? என்று கவலைப்பட்டான். மகனுடைய இறப்புக்கு துறவிதான் காரணம் என்று நினைத்து துறவிமீது கடுங்கோபம் கொண்டு அவரைத் தண்டிக்க முடிவு செய்தான். அரசன் துறவியை அழைத்து, "என் மகனின் இறப்பின் காலத்தை குறிப்பிட்டுக் கூறினீர். நீர் எப்போது இறப்பீர் என்று கூறமுடியுமா? என வினா எழுப்பினான். உமது உயிர் என்கையில் இருக்கிறது" என்றான்.

உடனே துறவி, "அரசே! நீங்கள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நான் இறப்பேன். தங்களின் இறப்பு, நான் இறந்த இரண்டாம் நாளில் இருக்கும்" என்றார்.

அரசனுக்கு சாவைப் பற்றிய பயம் ஏற்பட்டது. வீண்கோபத்தையும் ஆணவத்தையும் கைவிட்டான். அன்று முதல் துறவிக்கு சாவு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

"விழிப்பாயிருங்கள்; ஏனெனில் எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது" மத். 24:42

ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கிவிடும். 
( நீமொ21:6)


எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image