விண்ணக பூமி.... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
இளைஞன் ஒருவன் ஞானியிடம் சென்று, "ஐயா, மோட்சம், நரகம் எங்கே இருக்கிறது?" என்று கேட்டான். ஞானி அவனை ஒரு உயர்ந்த மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, "இதோ பார் இயற்கையின் இருப்பிடம். மேலே தலையை முட்டக்கூடிய மேகக்கூட்டங்கள், உயர்ந்து வளர்ந்த மரங்கள், இனிமையான தென்றல் காற்று, நறுமணம் வீசும் மலர்கள், இந்த இடம் தான் இறைவன் படைத்த மோட்சம்" என்றார்.
ஆனால் இந்த மலையின் மறு பகுதியில் மனிதர்கள் மரங்களை வெட்டி, காடுகளை அழித்து கடவுளுக்கென்று கோயில்களைக் கட்டி, மோட்சமாக இருக்கும் இறைவனுடைய படைப்பை, நரகமாக மாற்றுகிறார்கள். இறைவன், மக்கள் மத்தியில் இருப்பதை அறியாமல், இயற்கையை அழிப்பது மிகப் பெரிய சமூகக் குற்றமாகும். இறைவன் பெயரைச் சொல்லிக் கொண்டு காடுகளை அழிக்க வேண்டாம்.
மீண்டும் ஞானி அந்த இளைஞனை, ஒரு குடிசைப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு குடிகாரர்கள், சோம்பேறிகள் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். மேலும் அங்கு கொலையும், களவும் நடப்பதைப் பார்த்த அவன், "நரகமாக இருக்கும் இந்த இடத்தில் மக்கள் எப்படி வாழ முடியும்?" என்று கேட்டான். அதற்கு ஞானி, ''இங்குதான் நான் குடி இருக்கிறேன்" என்று கூறினார். "நான் வசிக்கின்ற இந்த இடத்திலும், சுற்றியுள்ள பகுதியிலும் யாரும் குடிக்கமாட்டார்கள்,சண்டையும் போட மாட்டார்கள். நரகமாக இருக்கும் இந்த இடத்தை மோட்சமாக மாற்றி வருகிறேன் " என்றார்.
இறுதியாக இளைஞன், ஞானியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். களைப்போடும், பசியோடும் வந்த அவர்களை, இளைஞனின் தாய் மகிழ்ச்சியோடு வரவேற்று உணவு வழங்கினார். களைப்பு, பசி தீர்ந்தவுடன் ஞானி, "இந்த வீடு தான் மோட்சம்" என்று கூறினார். 'காரணம் இங்குதான் அன்பும், அமைதியும், பகிர்வும் கிடைத்தது. ஆகவே இந்த இல்லம் தான் மோட்சம்" என்றார்.
நம்மில் பலர் மோட்சமாக இருக்கும் இடத்தை நரகமாக மாற்றுவர், சிலர் மட்டும், நரகமாக இருக்கும் இடத்தை மோட்சமாக மாற்றுவர். நம்முடைய செப, தப, தியாக முயற்சிகளால், நாம் வாழ்கின்ற இடத்தை மோட்சமாக மாற்றுவோம்.
ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவார்; மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார். (நீமொ 13:20)
