அன்னையின் தியாகத்தில் பிறந்த குழந்தை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
இறந்தாலும் பிள்ளைகளைக் காப்பாற்றும் இதயம், தாயின் இதயம்.
மாக்ஸ் மற்றும் எலிசபெத் ஜாய்ஸ் ஆகிய இருவரும் மகிழ்வான தம்பதியினர். ஆயினும் இவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. 2010ஆம் ஆண்டு ஜாய்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இடியென விழுந்த இந்நோயால் துவண்டுபோன ஜாய்ஸ் அதற்கான மருத்துவம் செய்துகொண்டார். புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் அறுவைச் சிகிச்சை செய்து, ஹீமோ சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தம்பதியினர் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என விரும்பினர். ஆனால், ஜாய்ஸ் கருவுறுதலுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இருந்த போதிலும் ஜாய்ஸ் கருத்தரித்தார்.
2013ஆம் ஆண்டு ஜாய்ஸ் கருவுற்றிருந்தபொழுது, மீண்டும் அவரது புற்று நோய் தீவிரம் அடைந்துள்ளது என்பதை அறிந்தார். மூன்று ஆண்டுகளுக்குமுன் பாதித்த அதே நோய் மீண்டும் உடல் முழுவதும் பரவியிருந்தது. கருவைக் கலைத்துவிட்டு மீண்டும் உடனடியாக மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் அறிவுரை கூறினர். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து நேரிடக் கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். ஆனால், என்ன நடந்தாலும் கருவைக் கலைக்க ஜாய்ஸ் அனுமதிக்கவே இல்லை. தமது உயிரா, குழந்தையின் உயிரா என்ற குழப்பத்தில், குழந்தையின் உயிர்தான் தனக்கு முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார் ஜாய்ஸ்.
2013ஆம் ஆண்டு சனவரி மாதம் குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலமாக வெளியே எடுத்தனர். தனக்குப் பிறந்த அழகான பெண் குழந்தைக்கு லில்லி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆனால், அதே ஆண்டு மார்ச் 9ஆம் நாள் ஜாய்ஸ் மரணத்தைத் தழுவினார்.
யார் இல்லாவிட்டால் நாம் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாதோ, யாரை இழந்தால் நாம் திரும்பப் பெற முடியாதோ, அவருக்குப் பெயர்தான் தாய்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
