பிறர் பெயரைக் கெடுக்காத நல் மனம் பெற்றுக்கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின் மூன்றாம் திங்கள்
I: எபி: 9: 15, 24-28
II: திபா 98: 1. 2-3. 3-4. 5-6
III: மாற்: 3: 22-30


உலகில் வாழும் எல்லாரும் நல்லவர்களல்ல. அதே போல எல்லாரும் தீயவர்களுமல்ல. ஒரு மனிதன் பலம்  பலவீனம் என இரண்டையுமே பெற்றிருப்பான். இதுதான் எதார்த்தம். எனவே யாரையும் ஒன்றிரண்டு செயல்களின் அடிப்படையில் நல்லவன் என்றும் தீயவன் என்றும் நாம் தீர்ப்பிட்டுவிட முடியாது. அதேபோல நமக்கு பிடித்திருந்தால் அவர்களுக்கு நற்பெயரும் பிடிக்கவில்லை என்றால் வேறுபெயரும் நாம் கொடுத்துவிட முடியாது. 

இத்தகைய வாழ்வின் எதார்த்தமான கருத்துக்களை நமக்கு வழங்குகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு பேய்களால் பேய்களை ஓட்டுகிறார். அவரிடம் இருப்பது தீய சக்தி என பரிசேயர் விமர்சிப்பதை நாம் வாசிக்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக இயேசு இறைபணியில் ஆர்வமாய் இருந்ததை பார்த்து மக்கள் அவரை அதிகமாகப் பின்தொடர்ந்ததைக் கண்ட சிலர் அவர் மதிமயங்கி இருக்கிறார் என பெயர்கொடுத்தனர் என்பதை வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று பேய்பிடித்தவன் என்ற பெயரையும் பெறுகிறார் இயேசு. இயேசு ஏன் பிறரால் இவ்வாறு விமர்சிக்கப்படுகிறார் என சிந்தித்தால் பரிசேயர்களின் பொறாமை எண்ணம் தான் அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. பொறாமை எண்ணம் இயேசுவின் பெயரையே கெடுக்கும் அளவுக்கு அவர்களைத் தூண்டுகிறது. ஆனால் இயேசு இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

அன்புக்குரியவர்களே!  நம்வாழ்வில் இத்தகைய நிகழ்வுகள் பல நடந்தேறியிருக்கலாம். முதலாவதாக நமது பெயர் கெடுக்கப்பட்டிருக்கலாம். அந்நிகழ்வுகள் நமக்கு பல மனவேதனைகளைத் தந்திருக்கலாம். இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இயேசுவின் மனநிலையில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா?

இரண்டாவதாக பிறர் பெயரை நாம் கெடுத்திருக்கலாம். அச்செயல் வழியாக பிறரை நாம் காயப்படுத்தி இருக்கலாம். இனிமேலும் அத்தகைய எண்ணங்கள் நம்முள் எழாமல் இருக்க நம்மை பக்குவப்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா?  சிந்திப்போம். பிறர் பெயரைக் கெடுப்பது கொலை செய்வதற்கு சமம். அத்தகைய எண்ணங்களை அறவே களைந்திட ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா பிறர் பெயரைக்கெடுக்கும் பரிசேய மனநிலையைக் களைய அருள்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்