இறையும் இயற்கையும் | ஜெயசீலி

இயற்கையோடு இணக்கம் இன்பம்!

இறை உறவோடு இணக்கம் பேரின்பம்!

இயற்கையில் எதுவும் குழப்பம் இல்லை

பெரியது. சிறியது என்ற பேதமில்லை !

வலியது, மெலிந்தது என்பதும் இல்லை

இயற்கையின் முன் அனைத்தும் சமமே!

இறை உறவில் எதுவும் கலக்கமில்லை!

பெரியவர் சிறியவர் பேதமில்லை!

வலியவர் - மெலியவர் என்ற பாகுபாடு இல்லை

இறை உறவில் அனைவரும் ஒருவரே!

இயற்கையைப் புரிந்துகொள்ள பேதமற்ற சமத்துவ மனம் வேண்டும். இறை உறவைப் புரிந்து கொள்ள இறை ஆவியின் ஞானம் வேண்டும்.

மலைகளைக் காண மலைகளைவிட உயரமான உச்சிக்கு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். இறை உறவை உணர மன உணர்வுகளைக் கடந்து இறை ஆவியின் ஆற்றலும், சக்தியும் தேவை.

நம் இறை அன்னை இறைவனிடம் பரிந்து பேசி, அனைத்து வரங்களையும், நலன்களையும் பெற்றுத் தருவதுபோல, சுற்றுச்சூழல் ஆர்வலர் வாங்கரி மாத்தாய் இயற்கை அன்னையிடம் பரிந்து பேசி இயற்கை வளங்களையும் பெற்று தருவாள் என்பது உறுதி.

இயற்கை உணவு நம்முடைய காலடியிலேயே விழுந்து கிடக்கிறது. இயற்கை உணவு உண்மை யான கலாச்சாரத்தின் வெளிப்பாடு, உண்மையான கலாச்சாரம் இயற்கையினுள்ளிலிருந்து பிறக்கிறது அது எளிமையானது. கலாச்சாரம் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்படும் கூட்டில் இருந்து தான் உதிக்கிறது. இறைவன் அளிக்கும் தெய்வீக உணவு இறைமகன் இயேசுவின் திருவுடல், திரு இரத்தம் என்னும் உணவு. இதுதான் நம்மை வாழ வைக்கும் உணவு. இதுதான் நாம் வாழ்வாகும் உணவு. இதுதான் நம்மை வானகம் சேர்க்கும் உணவு. எவ்வாறு இயற்கை உணவு நம்மைச் சூழ்ந்து பரவிக்கிடக்கின்றதோ அது போன்றே இறை உணவும் நம்மைச் சூழ்ந்து நிரம்பி நிற்கின்றது. நமது முயற்சியும், நமது மன ஆர்வமும்தான் இயற்கை உணவையும், இறை உணவையும் பெற்றுக் கொள்ள உதவும் சாதனங்கள். விரைந்து செல்வோம் இருவுணவையும் பெற்று மகிழ்வோம். இயற்கை உணவை உண்பது இன்பம்! இறை உணவை உண்பது பேரின்பம்.

இயற்கையிலிருந்து மக்கள் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்களோ, அவ்வளவு தூரம் அதன் மையத்திலிருந்து கழற்றி எறியப்படுகிறார்கள். மனிதன் தனது அகந்தையான விருப்பங்களைக் கைவிட்டு இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இயற்கை அவனுக்குச் சகலத்தையும் அளித்து, பாதுகாத்துக் கொள்ளும். நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையைக் கண்திறந்து பார்ப்போம். இயற்கையில் கொட்டிக் கிடக்கும் கோடான நன்மைகளை நம் மனக்கண் திறந்து பார்ப்போம். இயற்கையும் நம் இதயமும் கை கோர்த்துக் கொள்ளட்டும். இயற்கையோடு இணைவோம்.

மருத்துவர்கள் நோயாளிகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். இயற்கை ஆரோக்கியமானவர்களை கவனித்துக் கொள்கிறது. உணவும், மருந்தும் வேறு வேறல்ல ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள். இயற்கை சிறந்த மருத்துவராகவும், மருந்தாகவும் இருப்பதால் இயற்கையோடு இணைந்தால் மருந்தும், மருத்துவரும் என்றும் நம்மோடு! வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமே இல்லாதபடி இயற்கை நம்மைச் சரிசெய்துவிடும்.

பத்து குளிர் சாதனப்பெட்டிகள் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது. ஒரு மனிதனுக்கு பிராண வாயு வழங்க 16 மரங்கள் தேவை. எனவே இயற்கையின் அவசியத்தை அறிவோம்.

உணர்வோம். இயற்கையோடு இயற்கையாக இணைவோம்

இயற்கையோடு இணக்கம் இன்பம்!

இறை உறவோடு இணக்கம் பேரின்பம்!

இயற்கையோடும், இறை உறவோடும்

இணக்கம் கொண்டு

இன்பமும், பேரின்பமும் எய்துவோம்!

 

சகோ. ஜெயசீலி, சின்னமலை

 

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,

ஆசிரியர்,

இருக்கிறவர் நாமே

[email protected]

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.