கரிபால்டியின் கனவும் உறுதியும் | Greek

ரோமானிய பேரரசின் தலைமைப் பீடமாக விளங்கிய இத்தாலி கலை - கல்வி, இலக்கியம் - சிற்பம் ஓவியம் என உயர்நிலையில் இருந்த காலம் மாறி, வீழ்ச்சி அடைந்தபோது, எழுச்சிபெற இள இரத்தம் செலுத்திய மாஜினியைத் தொடர்ந்து நாம் அறியப்பட வேண்டியவர் கரிபால்டி.

 

1807இல் நீஸ் நகரில் கரிபால்டி பிறந்தார். இவரது முழுப்பெயர் ஜோசப் கரிபால்டி. இவரது பெற்றோர் இவரை ஒரு பாதிரியார் ஆக்கவே விரும்பினார்கள். ஆனால் இவரோ திரைகடல் ஓடும் வாழ்வை தேர்வு செய்தார். மாஜினியால் ஆரம்பிக்கப்பட்டு, தீவிர மாக செயல்பட்ட இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்து, அதன் தீவிர உறுப்பினராக திகழ்ந்தவர். மாஜினியால் தீட்டப்பட்ட புரட்சியில் பெரும்பங்கு வகித்தவர். புரட்சி தோற்றது. கரிபால்டியின் தலைக்கு விலை வைக்கப் பட்டது. அவரை ஒப்படைப்பவர்க்கு பரிசு அறிவிக்கப் பட்டது. கரிபால்டி தென் அமெரிக்கா தப்பிச் சென்றார். அங்கு 14 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

 

1848இல் இத்தாலியில் புரட்சி வெடித்தபோது. கரிபால்டி தாய்நாடாகிய இத்தாலிக்கு மீண்டும் திரும்பினார். இவர் தலைமையில் எண்ணற்ற மக்கள் திரண்டனர். ஆஸ்திரியப் போர் நடைபெற்றது. போர் தோல்வியில் முடிந்தது.

 

பிறகு, ரோமாபுரியில் நிறுவப்பட்ட குடியரசுக்கு, உதவியாக கரிபால்டி ரோம் சென்றார். பிறகு பிரஞ்சுப் படையால் அக்குடியரசு வீழ்ந்தது. இவரை ஆஸ்திரிய, பிரஞ்சுப்படை தேடியது. இவர் மலை, காடுகளில் பதுங்கி வாழ்ந்தார்.

 

இக்காலம் இவர் வாழ்வில் ஓர் இருண்ட காலம். பல துயரங்களை தன் நாட்டுக்காக அடைந்தார். இக்காலத்தில் இவர், தனது மனைவி அனிதாவை இழந்தார். இந்த இழப்பில் கரிபால்டி பெரிய அதிர்ச்சி அடைந்தார். இதன் காரணமாக இவர் அமெரிக்கா சென்றார்.

 

அமெரிக்காவில் இருந்து 1854இல் மீண்டும் இத்தாலி திரும்பினார். கொஞ்சகாலம் விவசாயத்தில் ஈடுபட்டார். அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார். 1859 போர் இவரை மீண்டும் அரசியலுக்கு இழுத்தது.

 

இத்தாலிய இளைஞர்கள் இவரின் தீவிர ஆதரவாளர்கள் ஆனார்கள். 1860இல் சிசிலியில் புரட்சி வெடித்தது. கரிபால்டி சிசிலிக்கு உதவினார். பல ஆயிரம் வீரர்களை, கரிபால்டியின் சில ஆயிரம் செஞ்சட்டை வீரர்கள் வென்றனர்.

 

விக்டர் இமானுவேல் சார்பாக, சிசிலியின் சர்வாதிகார ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். பிறகு நேப்பிள்ஸ் வெற்றிக்கும் உதவினார். அதோடு நிற்காது ரோமா புரியையும் வெல்ல கரிபால்டி திட்டமிட்டார். விக்டர் இமானுவேல் அளித்த பட்டம், பதவியையும் துறந்தார் கரிபால்டி. இவரின் ஒரே நோக்கம் ஒன்றுபட்ட இத்தாலி என்பதே.

 

மாஜினியின் லட்சியக் கோட்பாடு, கவூர் என்பாரின் ராஜதந்திரம், அதோடு இறுதியில் கரிபால்டியின் வீரத்தாலும் இத்தாலி ஒன்றுபட்டது. இதற்கு விக்டர்

இமானுவேலின் இனிய ஒத்துழைப்பும் கிடைத்தது. ஐக்கியமடைந்த இத்தாலி, ஐரோப்பிய நாடுகளில் தனக்கென ஓரிடம் பிடித்தது. இதற்கு பெரிதும் உழைத்தவர் கரிபால்டி எனலாம்.

 

சிசிலி - நேப்பிள்ஸ் இரண்டையும் விக்டர் இமானுவேலிடம் ஒப்படைத்த இவரின் தியாகம் மகத்தானது. மன்னர் இமானுவேலிடம் இவர் மிக உயர்ந்த மதிப்பு கொண்டவர்.

 

மன்னர் அளித்த பட்டங்கள் பதவிகளை இவர் மனம் விரும்பித் துறந்தார். கரிபால்டி தன் வாழ்நாளின் மீதிப் பகுதியை விவசாயம் செய்து கழிக்க விரும்பினார். காப்ரேரா தீவில் 20 ஆண்டுகாலத்தைக் கழித்த கரிபால்டி, நடுநடுவே தன் தாய்நாடு குரல்கொடுத்தபோதெல்லாம் உதவிக்கு விரைந்து ஓடிவந்தார்.

 

1861இல் பிப்ரவரி 18இல் ஐக்கியமுற்ற இத்தாலியின் முதல் பாராளுமன்றம் டூரினில் கூடியது. அடுத்த மாதமே இத்தாலிய அரசராக விக்டர் இமானுவேல் முடிசூட்டிக் கொண்டார். இத்தாலிய மக்கள் மனம் குளிர்ந்தனர். இருப்பினும் வெனிஸ், ரோமாபுரி இல்லாத இத்தாலி அவர்களுக்கு நிறைவளிக்கவில்லை. ஆனாலும் பிறகு அதுவும் இத்தாலியுடன் சேர்ந்தது.

 

1866இல் பிரஷ்ய அமைச்சரான பிஸ்மார்க் தூண்டுதலால் பிரஷ்யாவிற்கும் - ஆஸ்திரியாவிற்கும் இடையே ஓர் போர் மூண்டது. இத்தாலி பிரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் காரணமாக இத்தாலியும் போரில் தலையிட்டது. இப்போரினால் இத்தாலிக்கு வெனிஷியா கிடைத்தது.

 

தற்போது ரோமாபுரி மட்டுமே தனித்து இருந்தது. 1870இல் பிரான்ஸிற்கும், பிரஷ்யாவிற்கும் ஒரு போர் மூண்டது. பிரஞ்சுப்படை ரோமாபுரியில் இருந்து விலகியது. அந்த கணமே விக்டர் இமானுவேல் தன் படையுடன் சென்று ரோமையும் கைப்பற்றினார்.

 

மீண்டும் ரோம் இத்தாலியின் தலைநகர் ஆயிற்று. ஓர் ஐக்கிய இத்தாலி உதயமாயிற்று.

 

மாஜினியின் லட்சியக் கோட்பாடு, கவூரின் தந்திரம், கரிபால்டியின் உறுதி, விக்டர் இமானுவேல் ஒத்துழைப்பு எல்லாம் சேர்ந்து - கரிபால்டியின் கனவு நிறைவேறியது.