பாடுகளின் புதன்

சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள் - 1 பேதுரு 2:24. இயேசு யூதாஸால் காட்டிக்கொடுக்கப்பட்டு பிரதான ஆசாரியனிடத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய முகத்தில் துப்பி,  அவரைக் கன்னத்திலஅறைந்தார்கள். 

பிலாத்து இயேசுவை, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். கல்தூணில் கட்டி அடித்தார்கள். முள்முடி சூட்டினார்கள். அடித்தல் என்பது ஏதோ ஒரு சாட்டையாலோ, பெல்ட்டாலோ அடிப்பது அல்ல. ரோம அரசாங்கம், பயங்கரமான தண்டனையைப் உடலிலே கொடுக்க நினைத்தால் வாரினால்தான் (Scourge) அடிப்பார்கள். இந்த வாரானது, ஒரு மரப்பிடியிலே இணைந்துள்ள 12 தோல் வார்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு தோல்வாரின் இருபுறமும், எலும்பு அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட வெளியே நீட்டப்பட்ட கூர்மையான வளைந்த நிலையிலிருக்கும் துண்டுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட வாரினால் அடிக்கும்போது கடுமையான வலி யோடு, சதையும் பிய்த்து கொண்டு வரும். இந்த கொடூரமான வாரினால், ஆடையில்லாத வெறுமையான உடலில் அடிப்பார்கள். ஒவ்வொரு அடியின்போதும், சதையானது பல இடங்களில் பிய்க்கப்பட்டு விழும். இது பயங்கரமான தண்டனையாதலால், குற்றவாளி அடிக்கடி மயங்கி விழுவான். சில நேரங்களில், கட்டப்பட்ட மரத்தின் கீழேயே மடிந்தும் கூட போவான்.

ஒருசில அடிகள் ஒரே இடத்திலேயே விழுந்திருந்தால், ஒவ்வொரு முறையும் எவ்வளவு ஆழத்திலிருந்து அவரின் சதைகள் கிழிக்கப்பட்டிருக்கும்; இயேசுவினுடைய உடல் எவ்வளவு கொடுமையை சந்திச்சு இருக்கும். எத்தனை வெட்டுக்கள் உருவாகியிருக்கும்! அவரது முதுகு உழுதநிலம் போல ஆயிற்று. பின் வெள்ளிக்கிழமை காலையில் ரோம வழக்ககப்படி சிலுவையை தூக்கினார்.

2. 5 கி.மீ. தூரம் சுமந்திருக்கிறார். இரவு தூங்காமலும் காலையில் சாப்பிடாமலும் தளர்வான நிலை. இதோடு முட்கீரீடம்  தலையில் அழுத்தியதால் தலையிலுள்ள வேதனை அதிகம். உடலெல்லாம் இரத்தம். இவ்வளவு வேதனை வலியுடன் சிலுவையை தூக்கி பயணம். தோள்கள் இரண்டும் எடையை சுமக்க முடியாமல் பாரம் தாங்காமல் தரையில் விழுந்ததால் புழுதியில் புரண்ட காயங்கள், உடம்பெல்லாம் ஒட்டியிருந்த ஆடைகளை அவிழ்க்கும் போது தோலும் சதையும் சேர்ந்து பிய்த்து கொண்டு வந்தது. காலிலும் கையிலும் ஆணிகளை கொண்டு அடித்தார்கள். கைகளில் உள்ள ஆணிகள்தான் இயேசுவின் முழு எடையையும் தாங்கனும். பின் கால்களை சேர்த்துவைத்து அடித்தார்கள். தாகத்துக்கு கசப்பான கடர்காடி கொடுக்கப்படுகிறது. இவையெல்லாமே மனிதன் இரத்தம் முழுதும் இழந்து இறக்கனும் என்பதே. இதையெல்லாம் இயேசு ஏற்றுக்கொண்டு மதியம் மூன்று மணிக்கு மரித்தார்.

ஜெபம்: ஆண்டவரே எங்களை மன்னியும்  எங்கள் மீருதல்களை மன்னியும். ஆண்டவரே உமது  பாடுகள், காயங்கள் அனைத்தும் எங்களுக்காக. உமது குணமாக்கும் காயங்களாலே நாங்கள் சுகமாகிறோம். உலகம் எங்கும் ஆட்டி படைக்கும் வைரஸிடமிருந்து வரும் வியாதியை மட்டுமல்ல, ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய எல்லாவற்றிலும் வரும் ஆரோக்கியமில்லாத, தேவையில்லாத அத்தனை காரியங்களையும் நீக்கிப் போடும். நன்றி. ஆமென்!