‘இருக்கிறவராய் இருக்கிறவர்’ நம் கடவுள் | ஆர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு

10 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 5ஆம் வாரம் - சனி
முதல் அரசர் 12: 26-32; 13: 33-34          
மாற்கு  8: 1-10


 ‘இருக்கிறராய் இருக்கிறவர்’ நம் கடவுள்


முதல் வாசகம்


இன்றைய இரு வாசகங்களையும் கூர்ந்து கவனித்தால், அவை வழிபாட்டை மையமாகக் கொண்டிருப்பதை உணரலாம்.  முதல் வாசகத்தில், நேற்று பகிர்ந்ததைப் போல், இஸ்ரயேல் குலங்கள் இரண்டாகப் பிரிந்து வட நாடு மற்றும் தென்நாடு என்றானது. வடநாட்டு அரசனான எரொபவாம் தென்நாட்டுக்கு எதிராகச் செயல்படலானான். தென்நாட்டில் உள்ள எருசலேம் ஆலயத்திற்கு அவனது மக்கள் வராமல் தடுக்க, வடநாட்டில் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்து, ஒன்றை பெத்தேல் என்ற இடத்திலும் மற்றொன்றை தாண் என்ற இடத்திலும் கோயில்கள் கட்டி வழிபடச் செய்தான்.

 மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி, லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான். இது முற்றிலும் கடவுளின் நியமனத்திற்கு விரோதமாக அமைந்தது.  எரொபவாம் இக்குற்றத்தைத் துணிந்து செய்தான். அடுத்து, எருசலேம் ஆலயத்திற்கு எதிராகப் புதியதொரு விழாக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி, வடநாட்டு மக்கள் எருசலேமுக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தினான். இதன் காரணமாக  வடநாடு  அசீரியர்களால் கி.மு.722-ல் படையெடுக்கப்பட்டு முற்றிலும் வீழ்ச்சியடைந்தது என்று பின்னர் அறிய வருகிறோம். 


நற்செய்தி


நற்செய்தியில், இயேசு பெருந்திரளான மக்கள் மத்தியில் தம்முடைய போதனையை முடித்தப்பின் அவர்கள் மூன்று நாள்கள் இல்லம் செல்லாமல் அங்கிருப்பது கண்டு பரிவு கொள்கிறார்.  சோர்ந்திருக்கும் அந்த கூட்டத்தினருக்கு உணவளிக்க விரும்புகிறார்.

அவரது சீடரோ, “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கைவிரித்தார்கள்.  ஆனால், இயேசுவின் சிந்தனை அவ்வாறில்லை.  அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு  அவர்களின் உடலைத் தேற்றும்  உணவை, சீடர்கள் அளித்த   ஏழு அப்பங்களைக் கொண்டு, அவற்றைப் பலுகச் செய்து, அங்கிருந்த ஏறக்குறைய நாலாயிரம் பேருக்கு  உணவளிக்கிறார். மீதம் ஏழு கூடை அப்பத்துண்டுகள்  இருந்ததாக மாற்கு கூறுகிறார்.


சிந்தனைக்கு.


தூய வழிபாடு என்பது கடவுளுக்கு மட்டும் உரியது. இங்கே ‘கடவுள்' என்பவர் மனிதரின் கைவினை பொருள்களால் ஆனவர் அல்ல. அவர்  தொடக்கமும் முடிவும் அற்றவர், என்றும் இருகிறவராய் இருப்பவர்.  மனித கைவினையால் உண்டானவை அனைத்தும் தெய்வங்கள். நம்  கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள் (இ.ச 10:17). ஆகவே,’தெய்வமும்' கடவுளும் ஒன்றல்ல. வடநாட்டு அரசனான எரொபவாம் சிலைகைள உண்டாக்கி, அவற்றை கடவுளாக வழிபட மக்களைத் தூண்டினான். இறுதியில்  அவன் அழிந்தான் என்பது வரலாறு. 

நமது திருப்பலி உட்பட இதர  திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும், அதிகாரப்பூர்வ இறைவேண்டல்களிலும் ‘தெய்வம்' என்ற சொல் இருப்பது கிடையாது. எங்கும், எவ்விடத்திலும் திருவழிபாட்டில், நமது அருள்பணியாளர்கள் ‘எல்லாம் வல்ல தெயவமே' என்று வேண்டுவதும் கிடையாது. 

ஆனாலும், சிலர் நமது பாடல்களில் ‘தெய்வம்' என்று எழுதுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘என் தேடல் நீ, என் தெய்வமே' என்று பாட வைக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். நமது திருவழிபாடானது, இயேசுவை மையமாகக் கொண்டது. அவர் ஆண்டவர், கடவுள், ‘தெய்வம்’ அல்ல. அவர் தெய்வங்களுக்கெல்லாம் கடவுள். 'தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; (திபா. 50:1) என்றுதான் மறைநூலும் கூறுகிறது. உண்மையில், புற இனத்தார் வழிபாட்டின் தக்கத்திற்கு நாம் அடிமையாகியுள்ளோம். நம் கடவுளை எரொபவாம் போன்று தெய்வங்களாகப் பார்க்கவும் வழிபடவும் இயலாது. 

நற்செய்தியில், இயேசு பசியுற்றிருக்கும் மக்கள் மீது இரக்கம் காட்டவில்ல, மாறாக, பரிவு காட்டினார் என்று மாற்கு குறிப்பிட்டுள்ளார். இரக்கம் என்பது, ஒருவரைப் பார்த்து ‘ஐயோ பாவம்’ என்பதோடு முடிந்துவிடுவது.  ஆனால், பரிவு என்பது இறங்கி உதவுவது. எடுத்துக்காட்டாக, நல்ல சமாரித்தன் உவமையில் மூன்றாவதாக வருபவர் மற்றவர்களைப் போலன்றி, இறங்கி உதவி செய்தார். அவர் பரிவு காட்டினார். 


நம்மில் பலர்,  பிறர் மீது இரக்கம் காட்டுவதில் வல்லவர்களாக இருக்கிறோம். இயேசுவுக்குத் தேவை பரிவு காட்டும் சீடர்கள். இயேசு ஒவ்வொரு நோயாளியையும் பார்க்கும் போது, ‘ஐயோ, பாவம்' என்று கடந்து போகவில்லை. அவர்களைக் குணப்படுத்தி தமது பரிவை வெளிப்படுத்தினார். இன்று திருஅவைக்குத் தேவை ‘ஐயோ பாவம்’ என்ற பக்தர்கள் அல்ல. மாறாக, மத்தேயு  25-ம் அதிகாரத்தில் இயேசு குறிப்பிடும் பரிவுமிக்க செயல்களுக்கு உட்பட்ட சீடர்கள். 


நிறைவாக, இன்றைய நற்செய்தி இடம்பெற்றுள்ள  அப்பம் பலுகுதல் நிகழ்வு நமது நற்கருணை கொண்டாட்டத்திற்கு முன்னடையாளமாக இயேசு உணர்த்தியதாகவும் பார்க்க வேண்டும்.   இயேசு தன்னை நம்பி வந்தவர்களுக்கு உணவளித்தார். இன்று  தன்னில் நம்பிக்கைக்கொண்டு வாழ்வோருக்கு  அவரது  திருவுடலையே  (நற்கருணையாக) உணவாகிக்கொண்டிருக்கிறார். 


எனவே, ‘நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள்’ என்று  பரிவுக்கொண்ட இயேசுவை, நமது வாழ்க்கையின் தளர்ச்சி காலங்களில் மதுவை, நஞ்சை, தூக்குக் கயிறை நாடாமல் நற்கருணையை நாடுவோம், வாழ்வுப் பெறுவோம். 

இறைவேண்டல்.

 
பரிவிரக்கத்தின்  ஆண்டவரே, உமது சீடராக வாழும் நானும், என்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கும் உள்ளம் கொண்டு வாழ துணைபுரிவீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments