சீடத்துவம் - அவர் சொல்வதை நிறைவேற்றும் வாழ்வு!|ஆர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு
05 ஆகஸ்ட் 2024 
பொதுக்காலம் 18ஆம் வாரம் -திங்கள் 
எரேமியா 28: 1-17
மத்தேயு   14: 13-21 


சீடத்துவம் - அவர் சொல்வதை நிறைவேற்றும் வாழ்வு!


முதல் வாசகம்.

தென்னாடான யூதாவின் இறுதி அரசன்  செதேக்கியா. இவரின் ஆட்சி காலத்தில் அக்கம் பக்கம் உள்ள நாடுகளான சீதோம், தீர், ஏதோம், மோவாபு போன்றவை பாபிலோனுக்கு எதிராகப் போரிட கூட்டு சேருமாறு யூதேயாவை வற்புறுத்தின. அதற்குச் சாதகமாக, அனனியா எனும் போலி இறைவாக்கினர்  அரசரின் செல்வாக்கைப் பெறும் பொருட்டு, 'எருசலேமுக்கு எதுவும் நேராது' எனப் பொய்யுரைக்கின்றார். 

ஆனால், எரேமியா அடிமைத்தனத்தின் அடையாளமாக  மரத்தாலான நுகத்தை  செய்து, கழுத்தில் மாட்டிக்கொண்டு, பாபிலோனுக்கு எதிராக மற்ற நாடுகளுடன் கூட்டு சேர வேண்டாம்  என்று அறிவுறுத்தினார். ஏனெனில், அந்நாடுகளைக் கடவுள் தான் பாபிலோனியாவிடம் ஒப்படைத்துள்ளார் என்றும், பாபிலோனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டாம் என்று  செதேக்கியா அரசனை எச்சரித்தார். பாபிலோனியரோடு போர் வேண்டாம் என்று வற்புறுத்தினார்.  

அப்போது  போலி இறைவாக்கினரான அனனியா எரேமியாவுக்கு எதிராகச் செயல்பட்டார். அவன் செதேக்கியா அரசனிடம் பாபிலோன் அரசு விரைவில் வீழ்ச்சியுறும் என்றும், அதன் அச்சுறுத்தல் இனி இருக்கப்போவதில்லை என்றும் பொய்யாக இறைவக்குரைத்தான்.  எரேமியாவின் கழுத்தில் இருந்த  நுகத்தடியை விடுதலையின் அடையாளமாக உடைத்துப்போட்டான்.
 
மேலும், ‘பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்து விட்டேன். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதேயாவிலிருந்து களவாடிச்   சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள்  திரும்பக் கொண்டுவருவேன்’ என்று கடவள் அவனிடம் கூறியதாக அனனியா அரசை நம்பச்செய்தான்.   

ஆனால், கடவுள் எரேமியாவிடம்   “நீ போய் அனனியாவிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மரத்தாலான நுகத்தை முறித்தெறிந்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்துகொள்வாய். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் அதை உன் கழுத்தல் மாட்டுவார்' என்று கடவுள் சார்பாக அனனியாவை எச்சரித்தார். 

 
நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், இயேசு தனது உறவினரான திருமுழுக்கு யோவானின்  தலை துண்டிக்கப்பட்ட செய்தியால் வேதனையுற்ற இயேசு,   சிறிது நேரம் தனியாக இருக்க படகில் புறப்பட்டாலும், அவர் எங்கு செல்கிறார் என்று  அறிந்துகொண்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டதோடு,  அவர்களுக்குப் போதித்தார்.   பொழுது சாயும் நரம் வந்தபோது,  அவர்களின்  உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. 

சீடர்களிடம்  நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று பணித்தார். சீடர்களோ, அவர்களிடம்  ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை என்று பதிலுரைத்தனர். அடுத்து, இயேசு  அவற்றைப் பெற்று,  வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுக்க, சீடர்கள் பரிமாறினார்கள்.  அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம் என்று சீடர்களுள் ஒருவரான தெரிவித்ததை மத்தேயு இன்று நினைவூட்டுகிறார். 
 

சிந்தனைக்கு.

பல சமயங்களில் நாம் கடவுளிடம் இருந்து எதையாவது அதிகமாக விரும்பும் மக்கள் கூட்டத்தைப் போல இருக்கிறோம் என்றால் மிகையாகாது. அண்டையில் இருக்கும் ஆண்டவரை அடையளம் காணாமல், கடவுளிடம் உதவிகள்  கேட்ட கேட்டு அங்கும் இங்குமாக திருவிழாக்களுக்குத் தவறாமல் படையெடுக்கிறோம். சீடர்களைப் பொறுத்தமட்டில் பசியோடிருக்கும் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி அவர்களைப் பொழுது சாய்வதற்குள் விரைவில் அனுப்பிவிடுவதாகும்.  

இயேசுவோ, அதே இடத்திலேயே பசி பிரச்சனையைத் தீர்க்க நினைக்கிறார்.  'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.' என்கிறார். அது இயலும் என்பது அவருக்குத் தெரியும். 
இயேசுவின் அருகில்  இருக்கும்போது சீடர்களின் ஆற்றல் பெரிது என்பதை அவர்களுக்கு உணர்த்த இது நல்லதொரு வாய்ப்பு.  இறுதியில், சீடர்கள் அனைவருக்கும் உணவளித்தனர். 

அன்னை மரியாவின்  போதனையான “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:4) என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.   அவர் சொல்வதை நம்பிக்கையோடு நிறைவேற்றும்போதுதான் நமது ஆற்றல் நம்மில் வெளிப்படும். எந்ந பிரச்சனையானாலும் அதை இறைவனின் கண்கொண்டு பார்க்க வேண்டும். பூட்டு இல்லாத சாவியை மனிதன் உருவிக்குவதில்லை. அவ்வாறே தீர்வு இல்லாத பிரச்சனையைக் கடவுளும் அனுமதிப்பதுமில்லை. 

இன்றைய முதல் வாசகத்தில் போலிக்கும் உண்மைக்கும் இடையிலான போராட்டத்தைப் பார்த்தோம். இரு இறைவாக்கினர்களைக் காண்கின்றோம். அனனியா என்னும் பொய் இறைவாக்கினர், எரேமியா என்னும் உண்மையான இறைவாக்கினர்.  அனனியா பொய்யுரைத்து அரசனையும் மக்களையும்  கவர நினைக்கிறான்.  சில சமயங்களில் நம்மில் சிலரும் இப்படித்தான். அந்த சபையில் நன்றாக போதிக்கிறார்கள், நோயாளிகள் குணமாகிறார்கள், இந்த சபையில் நன்றாக செபிக்கிறார்கள் என்றெல்லாம் பொய்யுரைத்து மக்களை ஏமாற்றுகிறோம். 

அடுத்து, இன்று ஏனோ நமது நாட்டம் எல்லாம் திருவிழாக்களில் முகாமிட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த வீட்டில் அடுப்பு எரிகிறதோ இல்லையோ, அடுத்த ஊர் பங்குத்  திருவிழாவுக்குத் தவறாமல்  செல்வதில் அக்கறைக் காட்டுகிறோம், மகிழ்கிறோம். இயேசுவைப் போலவும் அவருடைய அடியொற்றி வாழ்ந்து காட்டியுள்ள புனிதர்களைப் போலவும் நாம் பணி வாழ்வுக்கு மாறாவிடில், திருவிழாக் கொண்டாட்டங்கள் இறையாட்சியை நோக்கிய வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லாது.   ‘மக்களை அனுப்பிவிடுவோம' என்ற சீடர்களை மடக்கி, அவர்கள் கைகளாலே அனைவருக்கும் உணவளிக்க வைத்தவர் நம் ஆண்டவர். சீடத்துவம் என்பது “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்பதை ஏற்று அதன்படி வாழ்வதில் அடங்கியது. 

இறைவேண்டல்.

இறையாட்சிதான் எங்களின் இலக்கு என்பதை நீனைவூட்டிவரும் ஆண்டவரே, உமது பணியில் நான் தளராமல் நிலைத்திருக்க என்னை நாளும் திடப்படுத்துவீராக. ஆமென்.

 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments