இயேசுவே விண்ணிலிருந்து இறங்கிய கடவுளின் அடையாளம் | ஆர்.கே. சாமி | VeritasTamil

இன்றைய இறை உணவு

12 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 6ஆம் வாரம் - திங்கள்
யாக்கோபு  1: 1-11       
மாற்கு  8: 11-13


இயேசுவே வானிலிருந்து இறங்கிய கடவுளின் அடையாளம்.


முதல் வாசகம்

மனித  எண்ணங்களும், புரிதலும்  கடவுளின் எண்ணத்திற்கும் செயல்பாட்டுக்கும் இணையாகாது.  

இன்றைய இவ்வாசகத்தில், வேதகலாபனையின் போது உரோமையர்களால் துபுறுத்தப்பட்ட கிறிஸ்தவ யூதர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஆறுதல் வார்த்தைகளைப் பகிர்கிறார். சாலமோனுக்குப் பின் பாலஸ்தீனாவை விட்டு சிதறுண்டுப் போன பன்னிரு குலத்தினரை மனதில் கொண்டு, இத்திருமுகத்தைத்  திருத்தூதர் யாக்கோபு எழுதுகிறார்.  

துன்பத்தின், துயரத்தின் எல்லையில் இருப்போருக்கு   மிகவும் அவசியமான நற்பண்புகளில் ஒன்று ஞானம் - இது துன்ப காலங்களில்   விடாமுயற்சியுடன் இருக்கவும், கடவுளைப் புரிந்து அவரோடு மேலும் ஒன்றித்திருக்கவும் உதவும் என்று யாக்கோபு வலியுறுத்துகிறார்.

பெரும்பாலான மக்கள் அவர்களின் துன்பச் சூழ்நிலையைக் கண்ணோக்கும்  விதமும், கடவுள் அவர்களைப் பார்க்கும் விதமும் மாறுபட்டவை  என்று யக்கோபு அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். கடவுள் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவர் என்றும், அவரிடத்தில் நம்பிக்கையோடு பலன் பெறுவர் என்றும் தெளிவுப்படுத்துகிறார்.  செல்வர்கள் புல்வெளிப் பூவைப் போல மறைந்தொழிவார்கள். கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும் என்பதால், தங்கள் நம்பிக்கையை இயேசுவில் வைக்க அழைக்கிறார். 


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு பரிசேயர்களிடம் தனது மனவேதனையை வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம்.  ஏனெனில் அவர்கள் இயேசுவை எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு பார்த்தனர். இயேசுவின் பணியையும் போதனையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், இன்று, வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதிக்கின்றனர்.  
 
 பலமுறை பல ஊர்களில் பல வல்ல செயல்களைச் செய்ததைக் கண்டும் மனமாறாத அவர்களின் கோரிக்கையைக் கேட்டு, பெருமூச்சு விட்டார் என்று மாற்கு குறிப்பிடுகிறார். நிறைவாக, இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றுரைத்து, அவர்கள் மத்தியிலிருந்து விலகிப் போனார்.
 

சிந்தனைக்கு.


கடவுள் இரக்கமும் பரிவுள்ளமும் கொண்டவர். எந்தச் சூழலிலும் அவரை அண்டி இருப்போரை  கைவிடமாட்டாதவர். இக்கருத்தினை திருத்தாதர் யாக்கோப்பு முதல் வாசகத்தில் வலியுறுத்துகிறார். தன்னை கடவுளின் மற்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணியாளன் என்று கூறிக்கொள்ளும் இவர், பன்னிரண்டு கோத்திரங்களை இங்கே குறிப்பிடுவதன் வழி,  திருஅவை கடவுள் தேர்ந்துகொண்ட இறைமக்களின் தொடர்ச்சி என்பதில் மகிழ்ச்சி கொண்டு, சோதனைகளை, வேதனைகளை சந்திக்க வலுவூட்டுகிறார்.   

அது வேதகலாபனை காலம். பரிசேயரும், சதுசேயரும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர்வதைக் கண்டு கடுஞ்சினம் கொண்டு, கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க முற்பட்ட காலம். இயேசுவில் கொண்ட நம்பிக்கை வாழ்வுக்காக துன்புற்ற கிறிஸ்தவ சமூககங்களுக்குப்   புத்திமதியாகவும் ஆறுதலாகவும் தருத்தூதர் யாக்கோபின் மடல் அமைகிறது. அவர்களை நோக்கி, ‘உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.? என்கிறார். இது அவர்களின் துன்புறும் தற்கால வாழ்க்கையை மட்டுமல்ல, வாழ்வில் இறுதியில் வரவிருக்கும் நிலைவாழ்வை உணர்த்துவதாகவும் உள்ளது. 

நற்செய்தியில் இயேசு பரிசேயர்களால் சோதிக்கப்படுகிறார். ஏற்கனவே, பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்த அலகை தோல்லி கண்டது (மத் 4:1-11). பரிசேயர் எம்மாத்திரம்? ஆனாலும், இயேசு பரிசேயரைப் பொருட்படுத்தாது, ‘இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது’ என்று கடந்து செல்கிறார்.  உண்மைதான், எகிப்திலிருந்து கடவுள் மீட்டு வந்த இஸ்ரயேலர், அவரில் நம்பிக்கை வைக்கவில்லை. பொற்கன்று செய்து வழிபட்டனர். கடவுளுக்கு எதிராக முனுமுனுத்தனர். எனவே, 40 ஆண்டுகள் அவர்களை பாலைநிலத்தில் அலைக்கழித்து, அவர்களில் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கி வாக்களித்த நாட்டில் குடிவைத்தார். 

அவ்வாறே, இயேசு தோற்றுவிக்கவிருக்கும் புதிய தலைமுறையான திருஅவைக்கே இனி வானின்று அடையாளங்கள் அளிக்கப்படும் என்பதை முன்னடையாளமாக கூறுகிறார்.  

கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட புதிய தலைமுறையினர் நாம். விருத்தசேதனத்தால் அல்ல, திருமுழுக்கால் நாம் பிறப்பிக்கப்பட்டுள்ளோம். உயிர்த்த ஆண்டவரை மூலைக்கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் நாம். இனியும் பரிசேயர்களைப் போல், வெளி அடையாளங்களில் அன்றி, கடவுளின் வார்த்தையிலும், அருளடையாளங்கள் வாயிலாக அவர் ஆற்றும் வல்ல செயல்களிலும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

மீட்பராகிய இயேசுவைத் தொடர்ந்து புறக்கணித்து, சதி செய்து கொன்ற யூதர்கள்அகதிகளாக இதர நாடுகளில் வாழலாயினர். அதே நிலை அவரது திருவுடலாகிய திருஅவையில் இருந்துகொண்டு, அதில்  நம்பிக்கையற்றோராக வாழ்வோருக்கும்   நேரிடக்கூடும். இது வரலாற்று உண்மை. இயேசுவே நமது நம்பிக்கையின் மூலைக்கல். அவரே வானிலிருந்து இறங்கி வந்த கடவுளின் அடையாளம். 


இறைவேண்டல்.

 அன்பு இயேசுவே, என்னில்  கிடக்கும் பரிசேயக் குணத்தை நான் விட்டொழித்து, உம்மில் முழுமையாக, புது தலைமுறையாக வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.


 ஆர்.கே. சாமி. (மலேசியா)
 ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

S,Xavier (not verified), Feb 11 2024 - 10:17pm
இயேசு நம் நம்பிக்கையின் மூலைக்கல் என்ற உண்மையை வருகின்ற தவ நாட்களில் உணர்ந்து உயிருள்ள இறைவனில் உறைந்திட அருள்தாரும் , ஆமென்