வெள்ளைப் பூக்கள் | Ashwin


"அக்கா ஒரு நிமிசம் இங்க வாங்களேன்..."

"என்னாம்மா சொல்லு..., ஆமா அந்த இரண்டாவது பெட்டு தாத்தாவுக்கு மெடிசின் கொடுக்கணும்ல கொடுத்துட்டியா?"

"அது அப்பவே கொடுத்துட்டேன்க்கா"

"சரி சரி...சொல்லுமா எதுக்கு கூப்பிட்ட"

"அக்கா ரொம்ப முடியலக்கா அவசரமா பாத்துரூம் வருது"

"என்னம்மா, இப்போ இப்படி சொல்லுற டூட்டி முடிய இன்னும் இரண்டு மணிநேரம் இருக்குல, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கலாம்ல..."

"நானும் முடிஞ்ச வர பொறுத்துகிட்டேன் இப்போ ரொம்ப முடியலக்கா...."

"இது கொரோனா வார்டுங்கிறதால பீபீ கிட் போட்டுட்டு அடிக்கடி வெளிய போக அலொவ் பண்ணமாட்டாங்க, கொஞ்சம் பொறுத்துக்கோடா"

"என்னம்மா? சும்மா எப்போபாரு பேசிக்கிட்டே இருக்கீங்க நீங்க எல்லாம் எங்க உசிர எடுக்கணும்முன்னே வேலைக்கு வாறீங்களா??"

"இல்ல மேம் அஜிதாவுக்கு ரெஸ்ட் ரூம் போணும்னு சொன்னா அதான்..."

"ஒரு நாளைக்கு நீங்க போடுற பீபீ கிட்டோட வில ஆயிரம் ரூபா ஒருவாட்டி களட்டீட்டா அப்புறம் வேறதான் போடணும் அதுக்கு காசு இருக்குனா போயிட்டு வாங்க இல்லேனா போய் வேலைய பாருங்க போங்க..."

"ஏங்கா எப்போவும் இந்த மேம் கத்திக்கிட்டே இருக்காங்க, அவங்களும் பொண்ணுதானே அவங்களுக்கு நம்ம கஷ்டம் புரியாதா?"

"அவங்கள சொல்லி என்ன ஆக போகுது கொரோனாவுக்கு அப்புறம் பேசியன்டும் மேனேஜ்மென்ட்டும் கொடுக்குற பிரஷ்ஷர்ல வற்ர கோவத்ததான் நம்ம கிட்ட காமிக்குறாங்க..."

"ம்ம்ம்... நமக்கே இந்த நிலைமைனா டாக்டர் எல்லாம் பாவம்ல...."

"ஆமாமா, இந்த நோய் வந்ததால இப்போ எல்லாமே மாறிடுச்சு, ஊரு முழுக்க ஒண்ணுக்கொண்ணு நோய பரப்புறாங்க, ஊரடங்கு போட்டாலும் அடங்க மாட்டேங்குறாங்க, அரசாங்கமும் தனித்திரு! விழித்திரு! விலகியிருன்னு எவ்வளவு சொன்னாலும் ஒருத்தரும் கேட்க்கல, கடைசியா நம்ம கிட்ட வந்து நம்ம உசிர வாங்குறாங்க, சரிமா அதவிடு நான் போயி பேஸியண்ட்ட பாத்துக்குறேன் நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு...."

"ஷீலா சிஸ்டர், உங்கள டாக்டர் கூப்பிடுறாங்க சீக்கிரமா வரணுமாம்..."

"என்னாச்சு அண்ணா??"

"நாலாவது பெட்டுல இருக்குற தாத்தாவுக்கு சீரியஸா இருக்கு, எப்படியும் ரெபரல் இருக்கும்னு நினைக்குறேன்..."

"ஐயோ கடவுளே அப்போ இண்ணைக்கும் நேரத்துக்கு வீட்டுக்கு போக முடியாதா??? சரி போங்கண்ணா வர்றேன்.... அஜிதா நீ உட்காந்துக்கோமா நான் போய் பாத்துட்டு வர்றேன்..."

"ம்ம்ம்... சரிக்கா...."

"சிஸ்டர் உடனே ஆம்புலேன்ஸ் ரெடி பண்ண சொல்லுங்க, பல்ஸ் வேற கம்மியா இருக்கு உடனே மெயின் காஸ்பிடலுக்கு ஷிஃப்ட் பண்ணணும். வேற யாரு இருக்கா டியூட்டில..."

"அஜிதா இருக்குற சார் அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியல..."

"அதுக்கு என்ன பண்ண சொல்லுறீங்க சிஸ்டர், இங்க பேசியண்ட்ஸ் இருக்குற நிலைமைக்கு சீனியர் ஸ்டாப் நீங்க இங்கதான் இருக்கணும். சும்மா ஆம்புலேன்ஸ்ல போயிட்டு வர்றது தானே ஒண்ணும் ஆகாது போயிட்டு வர சொல்லுங்க..."

"சார் அது வந்து...."

"என்ன சிஸ்டர் நிலைமை தெரிஞ்சும் மசமசனு நிக்குறீங்க... போங்க போயி அந்த சிஸ்டர வரச்சொல்லுங்க..."

"ஒகே சார்...."

"அஜி ரெபரல் நீதான் போணுமாம்டா இங்க சீனியர் ஸ்டாப் யாரும் இல்லேணு என்ன போக வேணாமுன்னு சொல்லுறாங்க..."

"அக்கா ஏன் இவங்க இப்படி இருக்குறாங்க? நம்மையெல்லாம் மனுஷங்கள இவங்களுக்கு தெரியலையா...?"

எனக் கூறிக் கொண்டே அஜிதாவின் கண்கள் கண்ணீரை கசிந்தது அதை கைகளால் துடைத்தவள் முகமூடியை சரிசெய்துவிட்டு நோயாளியை நோக்கி விரைந்தாள்...

"சிஸ்டர் ஆம்புலன்ஸ் வந்துடுச்சு கிளம்பலாம்...."

என அட்டண்டர் கூறியதும்...

புன் முறுவலுடன்
கண்களில் கருணையும்,
கன்னத்தில் கண்ணீரும்,
அடிவயிற்றில் கையையும்,
வைத்துக்கொண்டு விடைபெற்றாள்
அந்த தேவதை வலிகளை மறந்து
அந்த வயதானவர் உயிர் காக்க.....

 

-அஸ்வின்

Add new comment

7 + 10 =