வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றிபெறத் தேவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்

கிரேக்கம் தந்த தத்துவ மும்மணிகளில் ஒருவர் அரிஸ்டாட்டில். இவர் பிளேட்டோவின் மிகச் சிறந்த மாணவர். அதோடு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் ஆசிரியர்.

கவிதை, வானியல், தாவரவியல் எனப் பல்கலைக் கற்ற மேதையும் இவர். கிரீஸ் நாட்டில் 'ஸ்டாகிரா' என்ற ஒரு பகுதி மாசிடோனியாவில் உள்ளது. இது அலெக் ஸாண்டரின் நாடு. இதுவே இவர் பிறந்த இடம். இவரது காலம் கி.மு. 384 322.

இவர் தனது 17ஆம் வயதில், ஏதென்ஸ் நகரில் பிளேட்டோவால் உருவாக்கப்பட்ட அகாடமியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிறகு, பிளேட்டோ நிறுவிய பள்ளியில் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆசிரியரா கவும் பணி செய்தார். இக்காலத்தில்தான், இவர் அலெக்ஸாண்டருக்கும் கல்வி போதித்தார். அலெக் ஸாண்டரின் திறனுக்கும், வல்லமைக்கும் இவரும் ஓர் காரணம் எனலாம்.

பிளேட்டோவின் மறைவிற்குப் பிறகு, அக்கல்வி நிறுவனத்தில் இருந்து அரிஸ்டாட்டில் விலகினார். பிறகு அலெக்ஸாண்டர் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் ஏதென்ஸ் நகர் திரும்பினார். அங்கு அவரே 'லைசியம்' (Lyceum) என்ற கல்விச் சாலையை நிறுவி கி.மு. 323 வரை அதன் தலைவராக விளங்கினார்.

தத்துவம், மருத்துவம், அரசியல் எனப் பல்துறை யிலும் இவர் சிறந்து விளங்கினார். 62 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார். "தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக் கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி நடக்கிறார்கள்' மனிதர்கள் குறித்த அரிஸ்டாட்டிலின் விமர்சனம் இது. பேச்சுக்கலை பற்றி இவர் - "பேச்சுக்கலை என்பது கேட்போரிடம் நம்பிக்கையை உண்டாக்குவது" என்று விளக்கம் தருவார். பண்டைய கிரேக்கத்தில் குடியரசும் இருந்ததால், பேச்சாற்றல் விரும்பப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் ஆண் - பெண் பற்றி குறிப்பிடும்போது, 'ஆண்களின் துணிவு ஆள்வதில் இருக்கிறது. பெண்களின் துணிவு பணிவதில் இருக்கிறது" என்பார்.

வாழ்விற்கு வழிகாட்டும் பல தத்துவ முத்துக்களை இவர் உதிர்த்தார். அவை ஒவ்வொன்றும் சுருக்கமாக, நமக்கு வழிகாட்டும் பொன்மொழிகளாக விளங்கு கின்றன.

"வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றிபெறத் தேவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்" - என்பது இவர்தரும் உயர்ந்த சுயமுன்னேற்றச் சிந்தனையாகும்.

மனிதனுக்கு மன்னிப்பு அவசியம் என வலியுறுத்தினார்.

"கடவுளைப் போல பிறர் குற்றங்களை பல முறை மன்னிக்கப் பழக வேண்டும்" என்பார் இவர். அதுபோலவே நம்மிடம் விலக்கப்பட வேண்டியது அச்சம் என்பார்.

''ஒருவனிடம் அச்சம்கொண்டால் அவனிடம் அன்பு கொள்ள முடியாது" என்பது இவர் கருத்தாகும்.

"இன்பம் வரும்போது அதைப்பற்றி சிந்தனை செய்யாதே. அதுபோகும் போது அதைப்பற்றி சிந்தனை செய்" என்பது இவர் யோசனை.

வாழ்வின் முற்பகுதி (இளமை)க்கு சுறுசுறுப்பு. ஊக்கம் தேவை என்ற இவர், வாழ்வின் பிற்பகுதி பற்றி கூறும்போது,

"பொறுமையும், தன்னடக்கமும் இருப்பதே வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாக்கும்' என்பார். இவ்வாறு மிகப் பழங்காலத்தில் கூறப்பட்டாலும், எக்காலத்திலும் மனிதவாழ்விற்கு, எந்நாளும் பயன் படும் பல தத்துவங் களைத் தந்தவர் அரிஸ்டாட்டில். இவர் அழியாத ஓர் வரலாறு, தத்துவ நாயகர் எனலாம். உலகை, உலக வரலாற்றை மாற்றியவர்களில், இந்த மூன்று தத்துவ ஞானிகளும் பெரும்பங்கு ஆற்றியவர்கள் எனலாம்.

Daily Program

Livesteam thumbnail