யார் இந்த 'ஷா'?
94 வயது வரை எழுதி, நோபல் பரிசு பெற்று, உலக இலக்கிய வரலாற்றில் ஒரு பெயரை தனக்கென தக்க வைத்துக்கொண்ட ஆங்கிலப் படைப்பாளர் ஜியார்ஜ் பெர்னார்ட்ஷா. இவர் ஒரு 'மேதை' எனப் பலராலும் புகழப்படுகிறார். 'ஷா' என்று ஒற்றை எழுத்தால் உலகெலாம் அறியப்பட்ட அற்புத மனிதர். இவரது காலம் 1856-1950. ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் வரை வாழ்ந்த சமகால அறிஞர். மிகச் சிறந்த நாடக ஆசிரியர், நாவல் ஆசிரியர், திறனாய்வாளர், நகைச் சுவையாளர், விமர்சகர், புத்தி கூர்மைமிக்க நகைச் சுவைக் கிண்டல்காரர், பேச்சாளர் என்று இவர் திறனை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அயர்லாந்தில் உள்ள, டப்ளின் என்ற நகரில் இவர் பிறந்தார். பள்ளிக்கல்வியில் இவர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. தனது வீட்டில் தாமாகவேப் படித்து இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தனது பதினைந்தாம் வயதில் முதலில் ஓர் அலுவலகத்தில் வேலைக்குச் சென்றார். ஆனால், இவரது எண்ணம் ஓர் எழுத்தாளர் ஆவது என்றே இருந்தது. இதற்காகவே இவர் 1876இல் புகழ்பெற்ற லண்டன் சென்றார்.
இசை, நாடகம் பற்றிய திறனாய்வுகளை, தொடர்ந்து லண்டன் பத்திரிகைகளில் எழுதி வந்தார். அதன்மூலம் புகழும் பெற்றார். இவரது எழுத்து, முறை, நடை பலரையும் கவர்ந்தது.
1879-1883இல் இவர் 4 நாவல்களை எழுதினார். இதில் சிறந்த சிந்தனைகள் இடம்பெற்றன. இருந்தும் இந்நாவல்கள் வெற்றிபெற்றன என்று கூறிட முடியாது.
இக்காலத்தில், காரல்மார்க்ஸின், பொதுவுடைமைத் தத்துவம் இவரைப் பெரிதும் கவர்ந்தது. 1884இல் பேபி யன் கழகம் என்ற அமைப்பில் சேர்ந்து, சோஷலிசக் கருத்துக்களைப் பரப்பினார். விரைவில் அதில் ஒரு முக்கிய தலைவராகவும் ஆனார். அடுத்து இவர் நாடகத்துறையில் கவனம் செலுத்தி னார். இத்துறையே இவருக்கு பெருமையும் புகழும் தந்தது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதினார். ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு அடுத்து, புகழ்பெற்றது இவரது நாடகங்களே.
இவர் தனது நாடகங்களில், சமூகத் தீமைகளைச் சாடி, மனித வாழ்வின் உண்மைகளை வெளியிட்டு எழுதினார். இவை கருத்துகள் அடங்கிய நாடகங்கள் (Drama of ideas) என்று கூறப்படுபவை. படிப்பதற்கும் நாவல் போல சுவையானவை எனக் கூறலாம். நாடகத்தில் சிரிப்பு, கேலி, கிண்டல் உணர்வுகள் பிரதிபலித்தன. இப்படி எழுதுவது இவரது பாணி (Style) எனக் கருதப்பட்டது. சொந்த வாழ்விலும் அப்படியே பேசுவார். ஒருமுறை இவரை ஓர் அழகான நடிகை சந்தித்தார். இவரிடம், நீங்கள் அறிவில் சிறந்தவர், நான் அழகில் சிறந்தவள். நாம் திருமணம் செய்து கொள்ள லாம். நமக்கு ஒரு குழந்தை பிறந்தால், உங்களை மாதிரி அறிவிலும், என்னைமாதிரி அழகிலும் சிறந்து பிறக்குமே என்றார். அதற்கு பெர்னார்ட்ஷா அவர்கள், சரி அழகில் என்னைப்போலவும், அறிவில் உன்னைப் போலவும் பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று சிரித்தபடி கூறினாராம். இவ்வாறு சமயோசிதமாக, கிண்டலாகப் பேசுவதிலும் இவர் வல்லவர்.
வாரன் அம்மையார் தொழில் (Mrs. Warren's Profession), ஆயுதங்களும் மனிதனும் (Arms and the man), ஆப்பிள் வண்டி (The Apple cart), புனித ஜோன் (St. John) இவருடைய படைப்பில் சிறப்பானவை. அதுபோலவே 'டாக்டர்ஸ் டைலமா' - மருத்துவத்துறை விஷயங்களை நயமுடன் சாடும் நாடகமாகும். தற்காலத்தில் இவை பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலமொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது இவரின் எழுத்தாற்றலுக்கு ஓர் சான்றாகும்.
'நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்' என்பது இவர் தந்த நற்கருத்து.
'மாற்றம் இல்லாது முன்னேற்றம் ஏற்பட முடியாது' என்று கூறி மாற்றங்களை வரவேற்றவர் இவர்.
'செல்வர்களின் ஆடம்பர வாழ்வு கண்டு மற்றவர்கள் ஏமாந்து போகக்கூடாது' என்று எச்சரித்தவர் இவர். 'நம்மை நாமே திருத்திக் கொள்வதுதான் தலையான முதற்கடமை' என்ற நல்ல நீதியைக் கூறியவர் இவர்.
'தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் முழு அமைதி நிலவும்' இவர் கூறிய வித்தியாசமான கருத்து. பல அழகான அற்புதமான கருத்துகளை நயமாகச் சொல்லிச் சென்ற சாதனையாளர் இவர் எனலாம்.