மீட்பின் கரம்
எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
கலாத்தியர் 2-20
இனி வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று நாம் சொல்ல வேண்டுமென்றால் நாம் முழுவதுமாக பாவ பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். பாவம் மன்னிக்கப்படுவது வேறு. பாவப் பழக்கங்களிலிருந்து விடுபடுவது வேறு. பாவமன்னிப்பு மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆனால் பாவ பழக்கங்களோ தொடர்ந்து வருகின்றன.
அதிலிருந்து மீண்டு வருவது எப்படி.?. அதை ஜெயிப்பது எப்படி? நாம் தூய ஆவியின் துணையோடு யேசுவின் துணையோடு தான் அதை ஜெயிக்க முடியும். ஒவ்வொரு நாளும் நம் உடலையும், ஆத்துமாவையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். உடலின் உறுப்புகளை ஒப்பு கொடுத்து ஜெபிப்போம்.
பாவ பழக்கத்திலிருந்து மீண்டு வந்த நல்ல ஆன்மாவை குறித்து ஆண்டவர் 'நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்' என்று சொல்கிறார்.
சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு நம்மை கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக படைப்போம். இதுவே நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.
இந்த உலகத்தின் போக்கின்படி நடக்காமல் , நம் உள்ளம் பாவகறையின்றி புதுப்பிக்கப் பட வேண்டும் . அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் அவர் நமக்கு தெளிவு படுத்துவார். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் நமக்கு தெளிவாகத் தெரியும்.
தூய ஆவியார் நமக்குள் வரும் போது பாவ சுபாவங்களை, பாவ ஆசைகளை தடுத்து நிறுத்துகிறார். பாவம் செய்ய அவர் நம்மை அனுமதிப்பதேயில்லை. நம் உள்ளத்தில் இது பாவம் இதை செய்யாதே .இந்த இடத்துக்கு போகாதே.இந்த வார்த்தைகளை பேசாதே என உணர்த்துவார்.
ஜெபம் : ஆண்டவரே, என் எண்ணங்களை கட்டுபடுத்தியருளும்.இருமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் தராது இருக்க செய்தருளும். தீய நாட்டங்கள் தகாத விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள் என்னை மேற்கொள்ள விடாதே யும். உலகத்துக்கு நான் அடிமை ஆகாமலும் தீய சூழ்நிலைகளுக்குள் விழுந்து விடாமலும் என்னை காத்தருளும். என்னை புனிதனாக்கும் தூய ஆவியார் எப்பொழுதும் என் மீது அசைவாட செய்தருளும். உம் மீட்பின் கரம் எப்பொழுதும் என்னை தாங்கட்டும். ஆமென்.