உம் பிள்ளை நான்

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது - திருப்பாடல்கள் 19-1. ஆண்டவர் நம்மோடு  பேசுகிறவர். அவர் இயற்கையின் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார். வானத்தைப் பார்க்கும்போது அது கடவுளுடைய மகிமையை சொல்லுகிறது.  வானத்திலுள்ள மேகங்களையெல்லாம் அவருடைய கை வன்மையை காட்டுகிறது.

வயல் வெளி  மலர்களைப் பார்க்கும் போது அந்த மலர்களை உடுத்தி மகிழ்ந்த கடவுளின் அன்பு தெரிகிறது. வானத்து பறவைகளை பார்க்கும் போது அவற்றுக்கு உணவூட்டி மகிழும் இறைவனின் இரக்கம் தெரிகிறது. 

கடலலைகளின் ஆரவாரத்தை பார்த்தால் அவற்றுக்கு எல்லை வைத்து அதை தாண்டி வராதே என்று சொல்லும் ஆண்டவருடைய ஆளுமைத்தன்மை தெரிகிறது.  ஆகாயத்தில் உள்ள விண்மீன்களை கோள்களை பார்க்கும் போது அதன் அச்சிலிருந்து நகராது சுழல வைக்கும் கடவுளின் மேலான அறிவுத்திறன் தெரிகிறது.  

சூரியன் அஸ்தமிக்கும் காட்சி, நீர்வீழ்ச்சிகள் , அழகிய மலைத்தொடர்ச்சிகள், வயல் வெளிகள், அனைத்தையும் பார்க்கும்போது நம் உள்ளத்தின் கவலைகளெல்லாம் நீங்கிப் போகிறது. மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது.அனைத்துமே தானாக உருவாக வில்லை . கடவுள் தன்  வார்த்தையால் உண்டாக்கினார். அவை அனைத்துமே அவருடைய மகிமைமையை எடுத்து சொல்கிறது . 

 இயற்கையில் இத்தனை அற்புதக் காரியங்களை செய்தகடவுள் நமக்காக யாவையும் செய்து முடிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார். நம் தேவைகளை அவரிடம் சொல்லுவோம். வேண்டுதல் உருவாகும் முன்பே கட்டளை இடும் தந்தையல்லவா அவர். நம்மை கைவிடுவாரோ?.

ஜெபம் :. ஆண்டவரே இந்த அதிகாலையில் உம்மை துதிக்கிறேன் . அனைத்தும் உம்மால் நேர்த்தியாக படைக்கப்பட்டு காலை தோறும் அவை உம் மகிமையை எடுத்து சொல்லி நன்றி கூறும் போது உம் பிள்ளை நான் துதியாது இருப்பேனா?.  உமக்கு நன்றி சொல்கிறேன். ஆண்டவரே உம் சாயலாக படைக்கப்பட்ட எனக்கு  அந்த அந்த காலத்தில்,  என் தேவை என்ன என்று அறிந்து செய்வீர் என்று முழுமையாக நம்புகிறேன். ஆமென்.

Add new comment

4 + 1 =