உங்கள் நியாயம்! | Veritas Tamil

அலுவலக பணியின் நேரம் என்றாலும் அழைத்தது நெருங்கிய நண்பன் என்பதால் அலையயேசியின் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தார் மேனேஜர் செல்வா. பேச்சு குடும்பநலன்களை விசாரிப்பதில் தொடங்கி ஊர், உறவு நிலைமைகளைப் பற்றிய செய்திகளில் விரிந்து, உலகச் செய்திகளைப்பற்றி பேசும் அளவுக்கு நீண்டு கொண்டுச் சென்றது. "ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர்ற மாதிரி தெரியலையே!" என்றார் அந்தப் பக்கத்திலிருந்து நண்பர். "ஆமா,ஆமா, ரொம்ப நாளா, போர் போர்ன்னு தாப்பா செய்தியா இருக்கு . இந்த ரஷ்ய நாட்டுக்காரன் ஈஸியா உக்னரனை புடிச்சிரலாமுனு நென்னச்சுக்திட்டுதான் இறங்கிருக்காங்க.  ஆனா உக்ரைன் ஆர்மி விட்டுக்கொடுக்குற மாதிரி இல்ல. ஸ்டராங்கா போராடுறாங்கப்பா. என்னதான் இருந்தாலும் அந்த ரஷ்ய நாட்டு அதிபர், புதினுக்கு இவ்வளவு கொடுமையான மனசு இருக்க கூடாதுப்பா,பாவம்! எவ்வளவு பேர் சாவுறாங்க" என்றார் செல்வா. "புதினு ரொம்ப மோசமாம். தான் நெனச்சத செஞ்சே தீருவானாம். எதிர்த்து யாரையும் பேசவிடறது இல்லையாம்" என தனது பங்குக்கு பேசினார் எதிர்முனை நண்பர். 

தொடர்ந்த செல்வா, "ஆமாப்பா நானும் கேள்விப்பட்டேன். அந்த நாட்டுல சாதாரண மக்களைக்கூட தனக்கு எதிரா பேசவிடறது இல்லையாம். பேஸ்புக், டுவிட்டர்னனு சோசியல் மீடியாவுல கூட போருக்கு எதிரா ஒரு வார்த்தை கூட எழுதக் கூடாதாம். உடனே அரெஸ்ட் தானாம். ரீசென்ட் -ஆ கூட ஒரு பையன் பேஸ்புக்-ல போர் வேண்டாம்ன்னு, ஒரு போஸ்ட் போட்டதுக்காக, போஸ்ட் போட்ட அரை மணி நேரத்திலேயே போலிஸ் அந்த பையன் வீட்டுக்குப் போய் அரெஸ்ட் பன்னிட்டாங்களாம். இதுல்லாம் ரொம்ப கொடுமைப்பார்" என்று சொல்லி முடிக்க, ஆபிஸின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. "ஒரு நிமிஷம்" என்று நன்பரிடம் சொல்லி விட்டு, "எஸ் கம் இன்" என்று குரலை உயர்த்தி அழைத்தார் செல்வா.கையில் பைல்களுடன் வந்த கவிதா, "சார் பைல்ஸ்· நான் அப்பவே ரெடி பன்னிட்டேன், நீங்க போன்ல பேசிக்கிட்டு இருந்த மாதிரி இருந்தது அதான் வெயிட் பன்ணினேன்" என்றார். "ஓ, ஓகே, எல்லாம் கரெக்டா இருக்கா? இயர் வைஸ்சா தானே அரேஞ்ச் பன்னிருக்கீங்க?". "ஆமா சார், நீங்க சொன்ன மாதிரியேதான் அரேஞ் பண்ணிருக்கேன்" என்று கவிதா பதிலளித்துவிட்டு திரும்ப, "கவிதா" என்று அழைத்த செல்வா, அந்த கம்பௌன்ட் பாக்ஸ்ல ஏதோ ஒரு லெட்டர் இருக்குதுன்னு சொன்னீங்களே, அது என்னன்னு எடுத்து பார்த்தீங்களா?" என்று கேட்க "ஆமா சார், நீங்க சொன்னதால், அதை பிரிச்சும் படிச்சேன் சார், இதோ எடுத்துட்டு வாரேன்" என்றார் கவிதா. "அது இருக்கட்டும், என்ன லெட்டர் அது ?" "சார் அது உங்களப் பத்திய கம்பௌண்ட் தான் சார்." "என்னைப் பத்தியா?"  "ஆமா சார், யார் எழுதியிருக்கிறதுன்னு தெரியல" "ஓ  அப்படியா!  என்மேலே கம்பௌண்ட் எழுதுறாங்களா? அந்த லெட்டரை எடுத்துட்டு வாங்க, அது யார்னு நான் பார்த்துக்கிறேன், நான் எங்க கவனிக்கனுமோ அங்க கவனிச்சுக்கிறேன்" என்று கோவப்பட்டார் செல்வா. "வீட்டுக்குப் போறதுக்கு முன்னால் லெட்டனர் மட்டும் என் டேபிள்ல வச்சிட்டுச்டு போங்க", என்று காட்டமாக சொன்னார் செல்வா. "சரிங்க சார்" என்று சொல்லி கவிதா திரும்பிய உடன்,  நீண்ட நேரம் அலைபேசியில் காத்திருந்த நண்பரிடம் "ஹலோ" என்று சொல்லி அவர் இருப்பை உறுதி செய்தி கொண்டு, எதைப் பத்தி பேசிக் கொண்டிருந்தோம், அந்த புதினைப் பற்றி என்று சொல்ல,அறைக்கு வெளியில் சென்று கதவை மூடும் இடுக்கு வழியில் மேனஜரின் முகத்தைப் பார்க்கையில் புதின் முகம் போலவே தெரிந்தது.

உலகச் செய்திகளில் நியாயம் பேச முயற்சிக்கும் முன் உங்கள் வீட்டில், அலுவலகங்களில் உங்கள் நியாயங்களையும் யோசித்துப் பாருங்கள்!

எழுத்து: அருட்பணி: ராஜன் SdC