தூய ஆவியாரின் துணையே துணிவு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

26 மே 2025
பாஸ்கா 6-ம் வாரம் – திங்கள்
தி.பணிகள் 16: 11-15
யோவான் 15: 26- 16: 4
தூய ஆவியாரின் துணையே துணிவு!
முதல் வாசகம்.
பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நால்வரும் மாசிதோனியாப் பகுதியில் முக்கிய நகரான பிலிப்பிற்கு செல்கிறார்கள். அங்கு அவர் தியத்திரா நகரைச் சேர்ந்த லீதியா என்பரை சந்திக்க நேர்ந்தது. ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். லிதியாவும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். பின்னர், அவர் பவுல் மற்றும் அவரது உடன் பணியாளர்களுக்கும் (லூக்கா உட்பட) மறைத்தூதுப்பணிக்கு ஆதரவு அளித்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு தனது இராவுணவு உரையைத் தொடரும்போது, ஒரு வாக்குறுதியையும் எச்சரிக்கையையும் தருகிறார். அவர் சென்று தந்தையிடமிருந்து தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களிக்கிறார்.
தூய ஆவியார் வந்ததும் சீடர்களுக்கு இயேசுவைப் பற்றிய மேலும் பல உண்மைகளை எடுத்துரைப்பார் என்றும், திருஅவை துயருறும் காலங்களில் சீடர்கள் நம்பிக்கையை இழக்காதபடி போராட ஊக்குவிக்கும் பொருட்டு தூய ஆவியானவர் துணையிருப்பார் என்றும் மொழிகிறார். தந்தையை மற்றும் இயேசுவைப் பற்றிய அறியாதவர்களால் சீடர்கள், திருத்தூதர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்றும் விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களில் மூவொரு கடவுள் குடும்பத்தில் ஒருவாகிய தூய ஆவியாரின் வருகை பற்றி அறிகிறோம். இயேசு தனது இறுதி இராவுணவில், துணையாளாராம் தூய ஆவியாரைப் பற்றிப் பேசுகின்றார். தூய ஆவியார் இவ்வுலகில் உண்மையை வெளிப்படுத்துபவராகவும் உண்மைக்குச் சான்று பகர்கிறவராகவும் இருப்பார் என்று நமக்கு கூறப்படுகிறது.
உண்மையில், வெகு காலமாக தூய ஆவியார் திருஅவையில் மறக்கப்பட்ட இறைவனாக இருந்தார் என்பது வரலாறு. மேலும், திருஅவையின் உயிர் மூச்சாகவும், அனைத்து இறைமக்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகவும் இருக்கிறார் என்பதை நாம் அண்மையக் காலங்களில் நினைவூட்டப்படுகிறோம். தூய ஆவியார் இறைமக்களை உண்மையை (இயேசுவை) நோக்கி வழிநடத்துபவராகவும், நம் நம்பிக்கையை ஆழப்படுத்துபவராகவும் இருக்கிறார்.
இத்தூய ஆவியார்தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவரும், இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், இவர்தான் என்பது நாம் அறிந்த ஒன்று.
ஆனாலும், காலத்தின் சூழல் காரணமாக நாம் நம்மில் இருக்கும் கடவுளின் ஆவியாம் தூய ஆவியாரைப் புரிந்து கொள்வதில்லை. இந்த தூய ஆவியை மறந்து தீய ஆவியின் செயல்களுக்கே முன்னுரிமை தருகிறோம். குழந்தைப் பருவத்திலும் இளம் வயதிலும் அருளடையாளங்கள் வழியாக நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியானவரை மறந்த தருணங்களுக்காக மனம் வருந்தி, அவரின் குரல் கேட்டு வாழ முற்படுவது நமது சீடத்துவத்தைத் திடப்படுத்தும்.
தூய ஆவியானவர் கிறிஸ்துவுக்கு சாட்சியமளிப்பதோடு, நம் வழியாகவே கிறிஸ்துவின் பணியைத் தொடர்கிறார். ஆகவே, நாம் அவருக்குத் தேவை, அவர் நமக்குத் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. தொடர்ந்து, 'ஊனியல்பு' மற்றும் 'ஆவிக்குரிய இயல்பு' என்னும் இரு இயல்புகள் பற்றி எடுத்துரைக்கின்ற பவுல், ஆவிக்குரிய இயல்போடு வாழுமாறு நமக்கும் அறிவுறுத்துகின்றார். ஆண்டவருடைய ஆவியார் நம் வாழ்வின் இயக்கமாகவும், இயல்பாகவும் இருக்கிறார் என்பதை முதலில் மனதில் நிறுத்த வேண்டும்.
நம்மில் பலர், ஆவியாரைத் தேடி நாம் அருங்கொடை சபைகளுக்கும் கூட்டங்களுக்கும் ஓடுகிறாரகள். அவர் நம்முடன் நம் மூச்சாக இருக்கின்றார் என்பதை புறக்கணிக்கிறோம் . எனவே, பவுல், 'தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' என்பதை மனதில் கொண்டு நம் சீடத்துதவத்தில் மிளிர்வோம்..
இறைவேண்டல்.
உமது வாக்குறுதிக்கேற்ப தூய ஆவியாரை என்னிலும் பொழிந்த ஆண்டவரே, தூய ஆவியாரின் வல்லமையால் நான் தொடர்ந்து இயக்கப்பட அருள்புரீவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
