பிட்கப்பட்ட உமதுடலில் நிலைத்திருப்பேன்! | Good Friday | ஆர்.கே. சாமி | VeritasTamil
29 மார்ச் 2024
புனித வாரம் -திருப்பாடுகளின் வெள்ளி
எசாயா 52: 13- 53: 12
எபிரேயர் 4: 14-16; 5: 7-9
யோவான் 18: 1- 19: 42
இன்று ஆண்டவரின் திருப்பாடுகளின் புனித வெள்ளிக்கழிமை. இது ஆண்டவரின் வெள்ளி என்றாலும் மிகையாகாது. மண்ணகமும் விண்ணகமும் விவரிக்க இயலாத புனித வெள்ளி இது. இயேசு தம் மனித உடலில் தம்மை முழுமையாகக் கையளித்த அவரது அன்பை நாம் இன்று அனுபவிக்கிறோம். விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையில் சிலுவையில் பலியான செம்மறியாக உயர்த்தப்பட்டிருக்கிற இயேசுவைப் பார்த்து மீட்புப் பெற நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் ஏசாயா இறைவாக்கு நூலில் நான்காவது துன்புறும் ஊழியன் பற்றிய பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. இதில், துன்புறும் ஊழியர் பிறர் கைகளால் துன்பப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, குத்தப்பட்டு, பிறருடைய பாவத்தைத் தன்னில் சுமந்த பலி ஆடு போல சித்தரிக்கப்படுகிறர். அவர் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும், மற்றவர்களின் பாவங்களுக்காக, ஒடுக்கப்பட்டு, கண்டனம் செய்யப்பட்டு, அநீதி தீர்ப்புக்கான ஊழியரக உள்ளார். மக்கள் அவர்தம் குற்றங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்காக அவர் தன்னை மரணத்திற்குக் கையளிக்கிறார் என்பதை வாசகம் நினைவூட்டுகிது.
இரண்டாம் வாசகம்.
இயேசுவே நம் தலைமைக்குரு, நம் வலுவின்மையில் நமக்கு இரக்கமும், சோதனையில் நமக்கு பலமும் தர வல்லவர் அவர் ஒருவரே! இத்தகைய எல்லாம் வல்லவரின் இரக்கத்தை பெற்று, அருளை கண்டடைய அவரை துணிவுடன் அணுகிச் செல்ல அழைப்பினை விடுக்கிறது இவ்வாசகம்.
நற்செய்தி
இன்றைய நற்செய்தியானது, நற்செய்தியாளர் புனித யோவான் எழுதிய நற்செய்தியில் இருந்து வருகிறது. இது கெத்சமணி தோட்டத்தில் இருந்த இயேசுவுடன் தொடங்குகிறது. தம்மைக் கைது செய்ய வந்தவர்களுக்குத் தம்மையே இரண்டு முறை “நான்தான்” என்று முன்வந்து கையளிக்கிறார். இது அன்று விடுதலைப் பயணம் 3:14-ல், கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்று தம்மை அடையாளம் காட்டியதற்கு ஒப்பாக உள்ளது.
மேலும், இயேசு தம் தந்தையின் திருவுளப்படி பாடுபட வேண்டியுள்ளதால், உடனிருக்கும் சீடர்கள் எவரும் துன்புறுத்தப்படுவதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை.
யூத மக்களின் தலமைச் சங்கத்திடம் இயேசு அழைத்துச் செல்லப்படுகையில், பேதுரு மற்றொரு சீடரும் பின்தொடர்கின்றனர். அதே சமயம் பின்னர் பேதுரு தனது குருவுடன் தனக்குள்ள உறவை மூன்று முறை மறுக்கிறார். நிறைவாக, தம் மக்களின் கொடூர செயலால், இயேசுவை கல்வாரியில் சிலுவையில் ஏற்றி கொன்றார்கள். “என் இறைவா! என் இறைவா! ஏன் என்னை கைவிட்டீர்? என்று பழைய திருச்சட்டம் நிறைவேற தன் உயிரை அவர் கையளித்தார். புதியொரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதை இன்று நாடக வடிவில் வாசிக்கக் கேட்கிறோம்.
சிந்தனைக்கு
மரணம் இயற்கையின் நியதி. ஆண்டானுக்கும் அடிமைக்கும் அது பொதுவானது. இதற்கு மனுவுரு எடுத்த ஆண்டவர் இயேசுவும் விதிவிலக்கல்ல. அவர் மனிதராக மனிதரிடையே பிறந்தவர் என்பதை இவ்வுலகம் இன்றளவும் மறுக்கவில்லை. ஆனால் குற்றமற்றவர், குற்றாவாளியாகக் கொல்லப்படுகிறார். அவரது மரணம் இயற்கையானதல்ல மாறாக, களவாளிகளின் சூழ்ச்சியின் அரங்கேற்றமாக வரலாற்றில் இடம் பெற்றது.
“என் இறைவா! என் இறைவா! ஏன் என்னை கைவிட்டீர்?” என்ற இயேசுவின் கல்வாரிக் கதறல், ஏமாற்றத்தின் கதறலாக நம்மில் பலர் கருதினாலும், அது நம் மனமாற்றத்திற்கான கதறலாகவே இன்றும் ஒலித்துக்கொண்டருக்கிறது. அவர், கல்வாரியில் எல்லாம் நிறைவேறிற்று என்ற மனநிறைவுடன் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினார். அது ஒரு வீர மரணம்.
இன்று அந்த வீர மரணத்தைக் கண்டு களிப்பவர்களாக அல்ல, அந்த கல்வாரியில் நாமும் இயேசுவுடன் பழைய வாழ்வில் இறக்கிறோம் என்பதே உண்மை. நம்மில் மலிந்துள்ள கயமை, பித்தலாட்டம், பொறாமை, தன்னலம் போன்ற தீயனவற்றை குழிதோன்றி புதைத்து, மனமாற்றம் அடைந்த உள்ளத்துடன் அவரது கரங்களில் நம் ஆவியை ஒப்படைப்போம்! மடமையாக கருதப்பட்ட சிலுவை இயேசுவின் மரணத்தால் மாட்சியின் அடையாளமாக மாறியது. அந்த சிலுவை வெளிப்படுத்திய மட்சிக்குரிய மக்கள் நாம்.
லூக்கா 23:28-ல், இயேசு. ‘நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்’ என்றதை நினைவில் கொண்டு, இயேசுவின் கல்வாரி இரத்தம் நம் பாவக்கறையைப் போக்கி அவருடன் நம்மையும் புது மனிதராக உயிர்த்தெழச் செய்ய உருக்கத்துடன் இப்புனித வெள்ளி திருவழிபாட்டில் திருச்சிலுவையை முத்தி செய்யும் தருணத்திலும், பொது மன்றாட்டுகளிலும் திருஅவையோடு இணைந்து ஒருமனதோராய் பங்கேற்போம்.
நமக்கு நேரிடுகிற துன்பத் துயரங்களைக் கண்டு பயந்து நடுங்கும் நமக்கு, பயமே வாழ்க்கையாகி விடுகிறது. இன்றைய வழிபாடு இயேசுவிடமிருந்து துணிவை நமக்குக் கற்றுத் தருகிறது. ‘நானே நீங்கள் தேடுபவர்' என்று தானே முன் வந்து தன்னை கையளித்தவரின் சீடர்கள் நாம்.
‘மனுமகனின் கல்வாரி மரணம் அவருக்கு ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அவரது இறையாட்சி கனவுக்குப் புதைக்கப்பட்ட விதை’ என்பதில் நமது நம்பிக்கையை அதிகமாக்குவோம், துணிவும் வாழ்வும் பெறுவோம்.
இறைவேண்டல்
எனக்காக அவமானத்தின் சின்னமான சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட ஆண்டவராகிய இயேசுவே, உமது பாடுகளையும் மரணத்தையும் தியானிக்கும் நான், உம்மை வந்து சேரும் நாள்வரை துன்பங்களைத் துணிவுடன் ஏற்று, பிறரின் வாழ்வுக்காக என்னை பகிர்ந்தளிக்க அருள் தந்தருளும். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink