தந்தையின் திருவுளம் ஏற்போம், அடிபணிவோம்! | ஆர்.கே. சாமி | VeriatsTamil
13 மார்ச் 2024
தவக்காலம் 4ஆம் வாரம் - புதன்
எசாயா 49: 8-15
யோவான் 5: 17-30
முதல் வாசகம் :
முதல் வாசகத்தின் இப்பகுதி யூதர்கள் பாபிலோனில் அடிமைப்பட்டு, நம்பிக்கை இழந்து துன்புறும் காலத்தில், ஆண்டவர் அளிக்கவுள்ள விடுதலை வாழ்வு அண்மையில் இருப்பதாக எசாயா அறிவிக்கிறார்.
கடவுள் கூறியவாறு, ஏசாயா நாடு கடத்தப்பட்டவர்களிடம் கடவுளின் நம்பிக்கை வார்த்தைகளைப் பகிர்கிறார். கடவுள் அவர்களை சொந்த நாடான யூதேயாவுக்கு மீட்டு கொண்டு செல்வார் என்பதை நினைவூட்டுகிறார். ஒரு அன்பான தாய் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கவனித்துக்கொள்வதை விட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கடவுள் நன்குப் பராமரிப்பார் என்றும், அவர்களின் துன்பத் துயரங்களை, கண்ணீரைத் துடைத்து புதிய வாழ்வுக்கு ஏற்பாடு செய்வார் என்று அவர்களுக்கு நம்பிக்கை வாக்குறுதி அளிக்கிறார்.
யூதர்கள் பாபிலோனில் துன்புற்ற காலத்தில், அழுது புலம்பி, ‘ஆண்டவர் எங்களைக் கை நெகிழ்ந்துவிட்டார், எங்கள் தலைவர் எங்களை மறந்துவிட்டார்’ என்று மனம் நொந்து புலம்பிய வேளையில், ‘பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்’ என்ற கடவுளின் ஆறுதல் வார்த்தைகளால் அவர்களின் விடுதலைக் குறித்து, நம்பிக்கையூட்டுகிறார் எசாயா.
நற்செய்தி :
இயேசு, நற்செய்தியில், கடவுளோடு தாம் கொண்டிருக்கும் ‘தந்தை-மகன்' உறவைப் பற்றி பேசுகிறார். கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாகக் கொண்டதால் யூதர்கள் அவர்மேல் கடும் கோபம் கொள்கிறார்கள்.
எனவே அவர்கள் அவரை ஒரு மதவெறியராகவும் அகற்றப்பட வேண்டிய ஒருவராகவும் கருதுகிறார்கள். இயேசு தனது தந்தையாகிய கடவுளுடனான தனது உறவை விரிவுப்படுத்துவதோடு, தனது தந்தையின் விருப்பத்துடன் முற்றிலும் ஒத்திசைந்திருப்பதாகக் கூறுகிறார்.
மேலும், “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்’ என்பதோடு என்றும் ‘என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்’ என்றும் இயேசு கூறியது "எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல்" இருந்தது.
ஆகவே, யூதர்களின் மத்தியில் கோபக் கனல் கொழுந்துவிட்டது. அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள் என்று யோவான் நற்செய்தியாளர் விவரிக்கிறார்.
சிந்தனைக்கு :
தவக்காலத்தின் மத்தியில் இருக்கும் நமக்கு, எசாயா அருமையானதொரு ஆறுதல் வார்த்தையைத் தருகிறார். ஒரு தாய் தான் ஈன்றெடுத்த குழந்தையை மறந்தாலும், கடவுள் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். நம் வாழ்க்கையில் நாம் எத்தகைய விபரிதமான நிகழ்வுகளால், அல்லது சூழ்நிலைகளால் தாக்கப்பட்டாலும், கடவுள் நம்மோடு இருந்து நம்மை அரவணைத்துக் காப்பார் என்று நாம் திடப்படுத்தப்படுகிறோம்,
ஆம், அன்று யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்கு அவர்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த துரோகம் காரணமாகும். ஆனால் வழிதவறிய யூதர்கள் சிலர் நினைத்தது போல் கடவுள் அவர்களுக்கு எதிராகச் செயல்படவில்லை. அவர்களின் துன்பத்தில் அகமகிழவில்லை. அவர்கள் கடவுளிடம் திரும்பி, மனம் வருந்தி அவரை நாடி வரவேண்டும் என்றுதான் இறைவாக்கினர்கள் வாயிலாக குரல் கொடுத்தார். இதன் அடிப்படையில்தான் எசாயா கடவுள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார், அவர்களை மீட்டு தாய் நாட்டிற்கு அழைத்துச் செல்வார் என்று ஆறுதல் கூறுகிறார்.
நாம் இன்று பலவகையில் உலகத்தோரோடு சிறைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. இனியும் நமது போலித்தனம் கடவுள் முன் செல்லாது. இது நம் அனைவருக்குமான செய்தி, குறிப்பாக நம் வாழ்வில் எல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தால் நொந்துகொண்டிருக்கும் பலருக்கு கடவுள் நம்பிக்கையும் அரவணைப்பும் வழங்கும் செய்தியைத் தருகின்றன இன்றைய வாசகங்கள்.
ஆகவே, இதுவே கடவுளின் அருளின் காலம். நம்பிக்கையுடன் கடவுளின் அன்பின் உண்மையைப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் வார்த்தையில் முழு நம்பிக்கை கொள்வோம். “என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்’ என்ற இயேசுவின் வார்த்தையிலும் வாக்குறுதியிலும் நம்பிக்கை வைத்து, மனந்திரும்பினால் விண்ணக வாசல் நமக்குத் திறக்கப்படும். அனுபவிக்கும் துன்பத்துயரங்கள் கதிரவனைக் கண்ட பனிப்போல மறைந்துபோகும்,
கடவுளின் திருவுளத்தை ஏற்காத யூதர்கள் வெகுவாகத் துன்புற்றனர். எனவே, நம் விருப்பத்தை நாடாமல் நம்மைப் படைத்துப் பராமரிப்பவரின் விருப்பத்தையே நாடுவோம். இதுவே இயேசு ஆண்டவரின் விண்ணப்பமும் ஆகும்.
இறைவேண்டல் :
என் ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, நீர் காட்டிய வழியில் உம்மை போன்று தந்தையாம் கடவுளுக்கு அடிபணிந்து, அவரது திருவுளப்படி வாழ விழையும் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452